தொடர்கள்
ஆன்மீகம்
தானங்களும் அதன் பலன்களும்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Donations and their benefits

தானம் கொடுப்பது என்பது மிகச் சிறந்த விஷயமாகும் . பொருள் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தக்க சமயத்தில் கொடுக்கும் போது அவர்கள் இறைவனாகவே மதிக்கப்படுகிறார்கள். அவரவர்கள் சக்திக்கு ஏற்ப தானங்களைச் செய்வதால் தங்கள் பாவங்கள் தீர்வதுடன் மன நிம்மதியும் கிடைக்கும். நமது வாழ்நாளில், நம் வருமானத்தில் ஒரு பகுதியை தான தருமங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
ஒருவர் வறுமையில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன மதம், குணம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் நம்மால் முடிந்த உதவியைச் செய்து அவர்கள் வறுமையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
தானங்களில் பல வகை உண்டு. அதே போல ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்களும் உண்டு.

Donations and their benefits

தானமும் அதன் பலன்களும்:
அரிசி தானம்: நாம் செய்யும் பாவங்கள் விலகும். பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும்.
கோதுமை தானம்: ரிஷிகடன், தேவகடன் மற்றும் பித்ரு கடன்களை நீக்கும்
ஆடை தானம்: ஆயுள் விருத்தியாகும். மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு இரட்சையாக இருக்கும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.
மஞ்சள் தானம்: மங்கலம் உண்டாகும்
அன்ன தானம்: அன்ன தானம் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும்; பித்ருக்களின் ஆசிகள் கிட்டும்.
எண்ணெய் தானம்: நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
காய்கறிகள் தானம்: பித்ரு சாபங்கள் விலகும். குழந்தை ஆரோக்கியம் மேம்படும்
காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
குடை தானம்: தவறான வழியில் செல்வம் சேர்த்த பாவங்கள் விலகும். எண்ணிய எதிர்காலம் உண்டாகும்
தேன் தானம்: புத்திர பாக்கியம் கிட்டும் ; இனிய குரல் வளம் கிட்டும்
நெய் தானம்: பிணிகள் நீங்கும்; மோட்சம் கிட்டும் ; தேவதைகளின் அனுக்கிரகம் கிட்டும்.
தண்ணீர் தானம்: மன மகிழ்ச்சி உண்டாகும்
கம்பளி (போர்வை) தானம்: பயம் நிவர்த்தி ஆகும். துர் சொப்பனங்கள் நீங்கும்
பால் தானம்: துக்கம் நீக்கும். சௌபாக்கியம் ஏற்படும்.
தயிர் தானம்: இந்திரிய விருத்தியாகும்.

Donations and their benefits

பழவகைகள் தானம்: மன அமைதி உண்டாகும், பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.
வெள்ளி தானம்: மனக்கவலை நீங்கும். பித்ருகள் ஆசிகள் கிடைக்கும்
சொர்ண தானம் (தங்கம்): கோடி புண்ணியம் உண்டாகும். குடும்ப தோஷம் நிவர்த்தியாகும்.
பூமி தானம்: பிறவா நிலை உண்டாகும்
வஸ்திர தானம் (துணி): ஆயுளை விருத்தி செய்யும். சுகபோக வாழ்வு அமையும்

Donations and their benefits

கோ (பசு) தானம்: பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
திலதானம் (எள்): பாப விமோசனம் கிட்டும்.
குல தானம் (வெல்லம்): வம்ச விருத்தி உண்டாகும்
சந்தனக்கட்டை தானம்: புகழ் மற்றும் கீர்த்தி உண்டாகும்
விதை தானம்: வம்ச விருத்தியைத் தரும்
பொன் மாங்கல்யம் தானம்: மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும்.
மாங்கல்ய சரடு தானம்: மாங்கல்ய பலம் உண்டாகும், தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
பாய் தானம்: கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும்
தீப தானம்: எதிர்பாராத யோகத்தைக் கொடுக்கும், முன்னோர்களின் ஆசிகள் கிட்டும், கண் பார்வையைத் தீர்க்கமாக்கும்.
தேங்காய் தானம்: குடும்ப குழப்பங்கள் நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்
எண்ணெய் தானம்: அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். ஆரோக்கியம் உண்டாகும்
பூ தானம்: விரும்பிய இல்வாழ்க்கை அமையும்
புத்தகம் தானம்: கல்வி ஞானம் உண்டாகும்
நெல்லிக்கனி தானம்: ஞானம் உண்டாகும்
தானம் அளிக்கும் பொருள்கள் சேதம் அடைந்த அல்லது அழுகிய பொருட்களையோ தானமாக அளிப்பது சிறப்பு அல்ல.

அன்னதானம்:

Donations and their benefits

"அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது."

'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...' என்றும், 'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...' என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர்.

சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியைப் பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருணத்தில் உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வருத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாகக் குடிகொண்டிருக்கும் என வள்ளலார் கூறியுள்ளார்.

Donations and their benefits

“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.” - என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது பசியைப் பொறுத்துக்கொண்டு தவம் செய்பவர்களின் ஆற்றலை விட அப்பசியை போக்குபவர்களின் ஆற்றல் மிகப்பெரிது என்கிறார் வள்ளுவர்.

அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தீரும். பித்ருக்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கொடை வள்ளல் கர்ணன்:

Donations and their benefits

கொடை வள்ளல் என்றாலே நம் நினைவிற்கு வருவது கர்ணன். கர்ணன் போல இந்த உலகில் யாரும் தானம் செய்யவும், அவரை போல் வாழ்ந்து காட்டவும் முடியாது.
கர்ணன் தானம் செய்யும் போது, எல்லாவற்றையும் தனது உள்ளங்கையில் வைத்துத் தானம் செய்வாராம். அதாவது கர்ணனின் கை கீழிருக்கும். தானம் பெறுபவர்கள், கர்ணனின் உள்ளங்கையில் உள்ள பொருளை மேலே இருந்து எடுத்துக் கொள்வார்கள். அதாவது வாங்குபவர்கள் கை மேல் இருக்கும். இதைப் பார்த்த கிருஷ்ணன், "கர்ணா! தானம் தருபவர்கள் கை மேலே தானே இருக்கும். தானம் வாங்குபவர்கள் கை கீழே தானே இருக்கும். நீ இப்படிச் செய்தால் உனக்குப் புண்ணியம் எப்படிக் கிடைக்கும்?" என்ற விளக்கத்தைக் கேட்டார். அதற்குக் கர்ணன், "கிருஷ்ணா, நான் தானம் செய்வது எனது புகழுக்காக அல்ல. நான் மடிந்த பின் கொடை வள்ளல் என்ற பெயர் வாங்குவதற்காகவும் அல்ல." என்று கூறினார். மேலும் கர்ணன் கூறியது தான் கிருஷ்ணனுக்கே திகைப்பாக இருந்தது. "கிருஷ்ணா, எத்தனை பிறவி எடுத்தாலும் இதைப் போல் தானம் செய்வதற்கு எனக்கு வல்லமை தா” என்று என் கைகளைக் கீழே வைத்து இறைவனை வேண்டுகிறேன். தானமும் செய்கிறேன். நீயே சொல், புண்ணியம் வேண்டுபவர்கள் கை கீழே தானே இருக்க வேண்டும்" என்றார்.

Donations and their benefits

போர்க்களத்தில் உயிர் பிரியும் நேரத்திலும் கர்ணன் செய்த தானம் தான் அவரை காத்தது. ஆனால் இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கண்ணன் "கர்ணனிடம் நீ செய்த தர்மம் எல்லாம் எனக்குத் தந்து விடு என்று சொல்ல மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணித்தார். இது அல்லவா கொடை. கேட்டவர்களுக்கு இல்லை என்று இறக்கும் தறுவாயிலும் இருந்த குணம் தான் மனிதன் பெற வேண்டும்.
நாம் பொதுவாக யாருக்கு எதைத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் வலது கையால் தான் கொடுப்போம். ஆனால் கர்ணன் ஒருமுறை அவனிடம் தானம் என்று கேட்டு வந்தவர்களுக்கு இடது கையால் தானம் செய்தார். அதாவது ஒரு நாள் கர்ணன் கிணற்று அடியில் இடது கையில் ஒரு கிணற்றில் எண்ணெய் வைத்துக் கொண்டு உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த பக்கமாக வந்த ஒரு ஏழை ஒருவர் கர்ணனிடம் “ஐயா எனக்கு ஏதேனும் உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள்” என்று கேட்க, அவர் கேட்ட நொடியிலே கர்ணன் அவர் இடது கையில் இருந்த கிண்ணத்தைக் கொடுத்தார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த நண்பர் “கர்ணா உன்னைப் போல் கொடுத்து உதவும் வள்ளல் யாரும் இல்லை. ஆனால் தானம் கொடுக்கவேண்டும் என்றால் வலது கையால் தானே கொடுப்பார்கள். நீங்கள் இடது கையால் கொடுத்தீர்களே அது முறையாகுமா” என்று கேட்டார். அதற்குக் கர்ணன் சிரித்துக்கொண்டே ஆம் நீங்கள் சொல்வது சரிதான் வாழ்க்கையில் நான் கிண்ணத்தை வலது கை மாற்றும் முன் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால் தான் அவர் கேட்ட மாத்திரம் நான் தானம் கொடுத்துவிட்டேன். ஒருவர் கேட்டு உடனே நாம் செய்வது தான் தானம் என்று சொல்ல அந்த நண்பர் வியப்பில் ஆழ்ந்தார். கர்ணனைப் போல் வாழ இனி யார் எத்தனை பிறப்பெடுத்தாலும் முடியாது. அதனால் தான் இன்றும் கொடை வள்ளல் என்று கர்ணன் போற்றப்படுகிறார்!!

Donations and their benefits

"நம்மால் முடிந்த தானங்களைச் செய்வதால் நமக்கு வளமான வாழ்வு அமைவதோடு , நம் சந்ததிக்குப் புண்ணியமும், நல்வாழ்வும் அமையும்..!!"