தொடர்கள்
கதை
வடை போச்சே! வி.பிரபாவதி

20251001070800712.jpeg

வெங்கட்டிற்கு கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. கொஞ்சம் என்ன நிறையவே தான்.

அடுத்த வாரம் இவனுக்கு இரண்டாவது திருமண நாள். எப்படியும் மனைவி ஈஸ்வரியை சமாளிப்பதே கஷ்டம். இதில் ஆபீஸில் வேறு ட்ரீட் கேட்பார்கள்.

ஆறாம் தேதி திருமண நாளுக்கு மூன்றாம் தேதியே தலைவலி (ஜுஜுபி) வந்துவிட்டது.

ஈஸ்வரி மாய்ந்து மாய்ந்து தைலம் தேய்த்திட இதமாக இருந்தது இவனுக்கு. தூங்கிப் போனான்.

இன்று தேதி நான்கு. ஆபீஸில் முக்கியமான ஒரு வேலையை எடுத்துக் கொண்டு மும்முரமாக ஈடுபாட்டுடன் அதை செய்து கொண்டிருந்தான்.

தன்னை பிஸியாகக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஈஸ்வரி மிகவும் கவலைப் பட்டாள். கணவன் மீது பரிதாபப் பட்டாள். ஆறாம் தேதி லீவு போடுவானா? இல்லை அவதி அவதின்னுக் கிளம்பி ஆபீஸ் போயிடுவானா தெரியாமல் முழித்தாள்.

“என் தலையெழுத்து, ஆபீஸ்ல முக்கியமான ஒரு வேலையில மாட்டிண்டு அவஸ்தை படறேன். என்ன பன்றது? ம்ஹூம் லீவெல்லாம் போட முடியாது. கஷ்டம்” என்று யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருந்தான். இதுவும் ஜுஜுபி.

ஐந்தாம் தேதி. காலையில் எழுந்தவன் ஏதோ ரொம்ப அசதியாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்.

“ஏங்க, ஷாப்பிங் போகணும். இப்பிடி பிஸியா இருந்தா என்ன செய்யறதுங்க?” என்று கேட்டாள்.

“என்ன பண்ண முடியும்? கல்யாண நாளெல்லாம் கொண்டாடலனா என்னாச்சு ?” என்று முதலாளி கேட்பார்”

என்றான்.

“இப்படிச் சொன்னா எப்படீங்க? ட்ரெஸ் கிஃப்டெல்லாம் வாங்க வேண்டாமா? ப்ளீஸ்ங்க. நான் நாளைக்கு லீவுக் கேட்டுருக்கேன். அரை நாளாச்சும் பர்மிஷன் போட்டுட்டு வாங்க” என்று கெஞ்சினாள். நம் விடாக்கண்டன் மசியவில்லையே!

எனக்கு தீபாவளிக்கு எடுத்த பேண்ட்டே போதும். ஒரு டீஷர்ட் போட்டுக்காதது இருக்கு அது போதும். ஒனக்கு வேணும்னா எதாவது வாங்கிக்க” என்றான்.

அம்மாடி, ஷாப்பிங் செலவை மிச்சப் படுத்தியாச்சு. வெற்றி என்று நினைத்தான்.

நாளைக்கு ஆபீசுக்கு லீவு போட்டால் வீட்டில் ஈஸ்வரி இருப்பாள். ஆபீஸ் போனால் ட்ரீட் கேட்பார்கள்.

ம்ஹூம். கண்டிப்பாக சரி வராது. யோசித்தான். ஆறாந்தேதி. வழக்கம்போல் ஆபீஸ் கிளம்பினான்.

ஈஸ்வரிக்கு வாய் நிறைய விஷஸ் சொல்லிவிட்டு ஒரு முத்தத்துடன் முடித்துக் கொண்டான்.

வண்டியை உதைத்துக் கிளப்பினான். இந்த வண்டி வேறு லாடம் கட்டினாற்போல் ஆபீஸ் இல்லனா வீடு. ரெண்டுதான் தெரியும். பழக்க தோஷத்தில் ஆபீஸ் போய் விடாமல் நேரே அந்தப் பார்க்கிற்கு சென்றான். முடிந்தவரை உட்கார்ந்து ஃபோன் பார்த்தான். பையை மடியில் அழுத்திப் பிடித்துக் கொண்டு சற்று கண் அயர்ந்தான்.

யார் யாரிடமோ என்னென்னவோ பேசினான். லஞ்ச் சாப்பிட்டாகி விட்டது. கிட்டத்தட்ட மணி மூன்றானது. மெல்ல வண்டியை எடுத்தால் போகிற வழியில் பூ வாங்கிக் கொண்டு போனால் நாலு மணிக்கு வீட்டுக்குப் போய்விடலாம்.

’பர்மிஷன் போட்டு வந்ததாகச் சொல்லிக் கொள்ளலாம்’ என்று நினைத்தான்.

வண்டியை மெல்லவே செலுத்தினான். இதோ இன்னும் பத்து பதினைந்து நிமிடத்தில் வீட்டிற்கு வரப் போகிறான். இன்றைய மெகா செலவிலிருந்துத் தப்பித்துவிட்ட பெருமிதத்தில் மிதந்து வந்தான்.

வீட்டை நெருங்கும் போதே வீட்டு வாசலில் இரண்டு மூன்று டூ வீலர்கள், ஒரு கார் சகிதம் நிற்பதைக் கண்டான்.

மெல்ல இறங்கி யோசித்தான். என்னவாக இருக்கும்? யாரெல்லாம் வந்துள்ளார்கள்? அடக்கடவுளே! இது என்ன சோதனை?” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டிருந்தான்.

பிறகு மெல்ல வீடு வந்து சேரும்போது மணி ஐந்தைத் தொட்டது.

“வாங்க மாப்பிள்ளை, வாங்க மச்சான்” என்ற வரவேற்பில் நெகிழ்ந்தாலும் சற்று நெளிந்தான்.

கையில் வாங்கிய முழம் பூவை மறைத்து மறைத்து எடுத்து வந்து சமையல் அறையில் பிசியாக இருந்த ஈஸ்வரியிடம் கொடுத்தான்.

மெல்ல என்ன விஷயம் என்று கேட்டான். எல்லாரும் என்னை வாழ்த்த வந்திருக்காங்க. நீங்கதான் ளீவு இல்லைனு சொல்லீட்டிங்க. நாங்கள்ளாம் அன்னலட்சுமில லஞ்ச் சாப்ட்டு வந்தோம். எங்கண்ணனோட ட்ரீட். அண்ணனுக்கு ப்ரமோஷன் ஆனதால இந்த ட்ரீட். ரெண்டு மூனு நாளா நீங்க ரொம்ப பிஸி. என்னோட சரியா பேசக்கூட இல்லை. சாரிங்க” என்றாள் கேசுவலாக. வடை போச்சே! என்ன செய்வான் இந்த கஞ்சன் வெங்கட்?