
(அரஸ் வரைந்த அந்த படம் கிடைக்காததால் இந்த ஏ.ஐ. படம்)
ஒரு எழுத்தாளர் ஒரு பக்கம் முழுவதும் எழுதும் விஷயத்தை ஒரு கார்ட்டூனிஸ்ட் சில கோடுகளில் உணர்த்திவிடுவார். ஹிண்டு பத்திரிகை குடும்பத்தில் டைரக்டர்களிடையே மனஸ்தாபம் வந்த போது ஆனந்தவிகடன் கார்ட்டூனிஸ்ட் மதன் ஹிண்டுவின் லோகோவில் உள்ள யானையையும், காமதேனுவையும் அப்படியே போட்டு, ஒரு சிறு கோட்டின் மூலம் சண்டையை உணர்த்திவிட்டார். அதாவது யானை தன் துதிக்கையை நீட்டி, காமதேனுவின் கழுத்தை வளைக்கிறது. அதற்கு வசனமே தேவையில்லை, எல்லோரும் புரிந்து கொண்டார்கள்.
ஆனந்த விகடனில், 1945 முதல் 1965 வரை பிரபல கார்டூனிஸ்ட் கோபுலு ஒவ்வொரு வாரமும் ஒரு சிறு கார்ட்டூனைப் படைத்து வந்தார். அதற்கு வசனம் இல்லை. பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ளலாம், ரசிக்கலாம். அநேகமாக தினசரி சம்பவங்களையே கார்ட்டூன்களாக வரைந்தார் கோபுலு என்கிற கோபாலன். அவற்றில் மெலிதான நகைச்சுவை இருந்தது.
பல முதிய வாசகர்கள் தாங்கள் அப்போது பார்த்த கார்ட்டூன்கள் ஒரு தொகுப்பாக வந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அவனும் அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கினான். பார்க்க பார்க்கச் சுவையாக இருந்தன அந்த கார்ட்டூன்கள். கேலி சித்திரங்களில் உள்ள மனிதர்கள் பேசினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து, ஒவ்வொரு கார்ட்டூனுக்கும் கீழே ஓரிரு வார்த்தைகளில் கமெண்ட் எழுதினான் அவன். நண்பர்கள் அதை புத்தகமாக வெளியிடலாமே என்றார்கள். அவன் வசனங்களுடன் கூடிய டம்மியைத் தயாரித்தான். ஆனந்தவிகடனின் அனுமதியைப் பெற்றான். கோபுலுவிடம் காட்டி அவரது அனுமதியையும், அபிப்பிராயத்தையும் பெற விரும்பினான். கோபுலு முன்பே அவனுக்கு பரிச்சயமானவர். அவர் ஒரு விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்தார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக உடல் நலம், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் பற்றி சித்திரங்களுடன், ஒரு சிறு கையேட்டை தயாரித்தார்.
படங்கள் கோபுலு, வசனம் அவன். எனவே அந்த பழைய நிகழ்வை நினைவுபடுத்தி அவரைச் சந்தித்தான். டம்மியைக் கொடுத்தான். அப்போது அவர் ஒன்றும் பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து வா என்றார். மறுமுறை சந்திக்கச் சென்றபோது, அவனுக்கு உதறல். ‘வசனம் தேவை என்றால் நானே எழுதியிருக்க மாட்டேனா? என் மௌனக் கார்ட்டூன்களை நீ ஏன் பேசவைக்கிறாய்?’ என்று கேட்பாரோ என்று கலக்கமாக இருந்தது. அவர் சொன்னார்,
‘நான் நினைத்ததையும் எழுதியிருக்கிறாய், நினைக்காதையும் எழுதியிருக்கிறாய், சரி நீ இதை புத்தகமாகப் போடலாம்’ என்றார். அவரிடமே அதற்கு அணிந்துரை கேட்டான்.
அவர் இப்படி எழுதினார், ‘வாரா வாரம் ஆனந்தவிகடனில் வெளிவந்த என் ஜோக்குகளை வாசகர்கள் மிட்டாய் என்றார்கள், இந்த நண்பர் வசனமில்லாத கேலிச்சித்திரங்களுக்கு வசனம் எழுதி மிட்டாய்களுக்கு வசனக்குச்சி சொருகி லாலிபாப் ஆக்கிவிட்டார். அவருடைய நகைச்சுவைப் பேனா என் மௌனச் சித்திரங்களை அழகாகப் பேச வைத்திருக்கிறது. என் கார்ட்டூன்களின் நுணுக்கங்களையெல்லாம் அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு வசனம் எழுதியிருக்கிறார். என் கார்ட்டூன்கள் அவர் மூலம் மறுஅவதாரம் எடுத்திருக்கின்றன. பழங்கால வாழ்க்கைச் சித்திரங்களை அவர் நவீன நிர்வாகவியலுக்கு கொண்டு வந்திருக்கிறார். மௌனச் சித்திரங்களை பேச வைத்ததின் மூலம் நம் பத்திரிகை உலகத்தில் அவர் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார், தன் கற்பனை மூலம்’. அவன் தன் ஆசான் ஆகிய சோ ராமஸ்வாமிக்கு புத்தகத்தின் டம்மியை அனுப்பி வைத்தான். அவர் பதிவு செய்த கருத்து, ‘கோபுலுவின் அருமையான கார்ட்டூன்களுக்கு என் நண்பர் வசனம் எழுதியிருக்கிறார் என்றால், நானும் சில கார்ட்டூன்களுக்கு வசனம் எழுத முடியாதா என்று யோசித்து தீவிரமாக எழுத முயன்றேன். என்னால் ஒரு கார்ட்டூனுக்கு கூட வசனம் எழுத முடியவில்லை. பின்னர் முயற்சியை கைவிட்டு விட்டேன். நண்பருக்கு இயல்பாகவே ஒரு நுணுக்கமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அவரிடம் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்’. கோபுலுவின் பாராட்டு மகிழ்ச்சி, சோவின் பாராட்டு நெகிழ்ச்சி.
அந்தப் புத்தகத்திற்கு அட்டைப் படம் தயாரித்தவர் ஓவியர் ‘அரஸ்’. இந்தப் புத்தகத்திற்கு முகப்பு ஓவியம் வரைந்ததில், அவன் சொல்லாமலேயே புத்தகத்தின் உள்ளடக்கத்தை உணர்ந்து கொண்டு, அருமையாக ஒரு படம் வரைந்து கொடுத்தார். அதாவது அவன் தன் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் கோபுலுவை உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு போவது போன்ற காட்சி.
அந்தப்படம் அவன் கோபுலுவை ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு காலகட்டத்திற்கு இட்டுச் செல்வதையும், வெகுஜன பத்திரிகையிலிருந்து நிர்வாகத்துறைக்கு கொண்டு செல்வதாகவும் அந்த அட்டைப் படம் உணர்த்தியது.
புத்தகம் வெளிவந்த சில மாதங்களுக்கு பிறகு, சண்டிகரில் நடைபெற்ற ஒரு நிர்வாகவியல் கருத்தரங்கில் கலந்து கொண்டான் அவன். அங்கு வந்திருந்த நிர்வாகவியல் பேராசிரியர்கள் சிலர் அந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, ‘வசனங்களுடன் இந்தக் கார்ட்டூன்களை பவர் பாயிண்ட்டில் பதிவு செய்து வகுப்பறையில் மாணவர்களுக்கு போட்டுக்காட்ட அனுமதி தருவீர்களா?’ என்று கேட்டார்கள். நல்ல விஷயங்கள் எல்லா இடங்களுக்கும் செல்லட்டுமே என்ற நினைப்பில் நிர்வாகவியல் கல்விக் கூடங்களில் தன் வசனங்களுடன் கூடிய கோபுலுவின் காட்டூன்கள் காட்சிப்படுத்தப்படுவதை அவன் வரவேற்றான். அந்தப் புத்தகத்தில் அவன் எழுதியது 278 வாசகங்கள் மட்டுமே. சில வாசகங்கள் ஓரிரு வார்த்தைகளில் முடிந்துவிட்டன. ஒரு கார்ட்டூனுக்கு ஒற்றை வார்த்தைதான் வசனம். ஒரு எழுத்தாளர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தபோது மை ஊற்றும் பேனாவை அடிக்கடி உதறிக்கொண்டிருந்தார். அவர் காலடியில் அமர்ந்திருந்த வெள்ளை நாய் உடலெல்லாம் கறுப்பு புள்ளிகள். அப்படி ஒருவகை நாய் உண்டு. அதற்கு டால்மேசன் என்று பெயர்.
விளையாட்டாக அவன் வசனம் எழுதிய அந்த கார்ட்டூன் புத்தகம் அமோக வரவேற்பைப் பெற்றது. பத்திரிகை உலகில் ஒரு புதுமை என்று கருதப்பட்டது. அதற்குக் காரணம் கோபுலுவின் கார்ட்டூன்கள் அவனிடம் ஏற்படுத்திய தாக்கம்.
70 வருடங்களுக்கு முந்தைய கார்ட்டூன்களுக்கு புதிய பொருள் பரிமாணம் கொடுத்தது,
ஜனரஞ்சக கார்ட்டூன்களை நிர்வாகவியல் துறைக்குக் கொண்டு சென்றது பத்திரிகை உலகிலும், புத்தக வெளியீட்டிலும் பிறர் செய்திராத புதுமை என்று கருதப்பட்டது. ஒருதலைமுறை கார்ட்டூனிஸ்ட்டை மறுதலைமுறைக்கு வேறுவிதமாக அறிமுகப்படுத்தியது.
புத்தக மதிப்புரைகள் வாசகங்களாகவே இருக்கும். ஆனால் அவனது புத்தகத்தை கார்ட்டூன் வடிவத்திலேயே மதிப்புரை செய்திருந்தார் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதி. அந்த கார்ட்டூனில் இருவர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேறொருவர் சொல்வதாக ஒரு காட்சி, ‘அவங்க இரண்டு பேரும் அப்படி என்ன பேசிட்டு இருக்காங்க?’, ‘வேறொன்றும் இல்லை. கோபுலுவின் கார்ட்டூன் சிறப்பா? வசன கர்த்தாவின் வார்த்தைகள் சிறப்பா? என்றுதான்.’
தினமணியில் நூல் அரங்கம் பகுதியில் இதுவரை வெளிவந்த மதிப்புரைகளில் அவனது புத்தகம் மட்டுமே கார்ட்டூன் வடிவம் பெற்றது. அவன் கோபுலுவின் கார்ட்டுன்களுக்கு விளையாட்டாக வசனம் எழுதத் தொடங்கியபோது, புத்தகமாக வெளியிடும் எண்ணமும் இல்லை, புத்தகம் வெளிவந்த பிறகு இப்படி ஒரு வரவேற்பு இருக்குமென்பதையும் எதிர்பார்க்கவில்லை.

Leave a comment
Upload