தொடர்கள்
தொடர்கள்
பசங்க டாக்கீஸ் - 3    Have courage and be kind.  பூங்கொடி

2025100107560199.jpg

படம் :- சிண்ட்ரெல்லா

மொழி :- மராத்தி

இயக்குநர் :- கிரண் நட்கி

வருடம் :- 2015

நாம் அனைவரும் ஏதோ ஒரு கனவை, இலக்கை அடைய வேண்டி வாழ்க்கையில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவு தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி விளிம்பு நிலையில், பெற்றோர்கள் இன்றி, வாழும் இரு குழந்தைகள் விலை உயர்ந்த சிண்ட்ரெல்லா பொம்மையை சொந்தமாக வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவை அடைய , சந்திக்கும் போராட்டங்கள் தான் இந்த திரைப்படம்.

பரபரப்பான காலை நேரம். ஒரு மணி கூண்டுக்கு எதிரே உள்ள போக்குவரத்து சிக்னலில், அருகே உள்ள நடைபாதையில் ஒரு வயதான பெண்மணி படுத்திருக்கிறார். அவர் அருகே, ஒரு பிச்சை பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வழியே செல்பவர்கள் அந்தப் பாத்திரத்தில் சில்லறையைப் போட்டு விட்டுச் செல்கிறார்கள்.

வெயில் சுருக் என்று அடித்த போதிலும் அந்த வயதான பெண்மணி உறக்கத்திலிருந்து எழவில்லை. நடைபாதையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளர், அந்த மூதாட்டியை எழுப்பும் பொழுது தான், அந்த மூதாட்டி உயிரற்றுக் கிடப்பது தெரிகிறது. தூய்மை பணியாளர் காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கிறார்.

இந்தக் காட்சியை எதிரே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், மிக வேகமாய் அருகே இருந்த குடிசைகள் நிறைந்த பகுதியை நோக்கி ஓடுகிறான். அவன் சொன்ன தகவலைக் கேட்டு, பதறியபடி அந்தப் பகுதியிலிருந்து நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் ஓடி வருகிறார்கள்.

அந்தக் கூட்டத்திலிருந்து பத்து வயது மதிக்கத்தக்க அஸ்க்யா.என்ற சிறுவனும், ராணி என்ற சிறுமியும் கண்கள் கலங்கியபடியே அந்த மூதாட்டியை வந்து பார்க்கிறார்கள். அங்கே இருந்த வயதான ஒரு பிச்சைக்காரர், அந்த மூதாட்டியின் மேல் போர்த்தியிருந்த துணியை விலக்கி , இறுதியாக உங்கள் பாட்டியை ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

கலங்கிய கண்களோடும், நொறுங்கிய மனதோடும் அந்த குழந்தைகள் பாட்டியைப் பார்க்கிறார்கள். ஆதரவற்ற அந்த இரு குழந்தைகளையும், பிச்சை எடுத்து அந்தப் பாட்டி தான் வளர்த்துக் கொண்டு வந்தார்.

போலீஸ் ஜீப் வருவதன் ஒலி கேட்டதும், அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்று விடுகிறார்கள். அந்தப் பாட்டியின் அருகே இருந்த ஒரு சிறு பையை அந்த பெரியவர் குழந்தைகளிடம் கொடுத்து அந்த இடத்தை விட்டுப் போய்விடுமாறு சொல்கிறார்.

ஆம்புலன்ஸ் அந்த பாட்டியின் உடலை எடுத்துச் செல்வதை அந்தக் குழந்தைகள் எதிர்ப்புறம் இருந்து கவனிக்கிறார்கள். பாட்டி ...பாட்டி என்று கதறிக்கொண்டே வாகனத்தின் பின்னே ஓடுகிறார்கள். ஆதரவற்ற அந்த இரு குழந்தைகளும், இருந்த ஒற்றை ஆதரவையும் இழக்கிறார்கள். இனி என்ன செய்யப் போகிறோம் ? என்ற ஒரு பூதாகரமான கேள்வி அவர்கள் முன் தோன்றுகிறது.

அந்த இரு குழந்தைகளில் அஸ்க்யா ஓரளவு விவரம் தெரிந்தவன். ஆனால் ராணியோ விவரம் அறியாத ஒரு ஐந்து வயது குழந்தை. "பாட்டி எங்கே சென்று விட்டார்கள் அண்ணா?" என்று அவனைக் கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.

" பாட்டி வேற காலனிக்கு போய்ட்டாங்க"

" அந்த காலனி எங்கண்ணா இருக்கு?"

" கடவுள்கள் எல்லாம் வசிக்கிற இடத்தில் இருக்கு. அங்கு போயிட்டாங்க"

" அந்த காலனி எங்கண்ணா இருக்கு? பாட்டி அங்க இருந்து திரும்ப வருவாங்களா?"

" அந்த காலனி வானத்துல இருக்கு. வர மாட்டாங்க"

".. அப்ப நாம் அங்கு போலாமா? "

" நம்ம அங்க போக முடியாது"

என்று சொல்லி தன் தங்கையைச் சமாதானப்படுத்துகிறான்.

அந்த வயதான பிச்சைக்காரர், குழந்தைகள் இருவரையும் ஆதரவாய் அணைத்துக் கொண்டு அந்த குடிசைப் பகுதிக்கு செல்கிறார். அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்கள்; சிறு சிறு பொருள்களை விற்று வாழ்க்கை நடத்துபவர்கள். தற்போது இவர்கள் இருவரும் பாட்டி வசித்த குடிசையில் தங்குகிறார்கள்.

குழந்தை இராணியோ தூக்கத்திலிருந்து விழித்து பாட்டி... பாட்டி என்று தன் பாட்டியை தேடுகிறாள். பாட்டி நினைவு வரும்போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாக இருப்பது பாட்டி வைத்திருந்த ஒரு சிறு பொம்மைதான்.

" அஸ்க்யா நீ தெரு நாய் மாதிரி ஒரு வாழ்க்கை வாழக்கூடாது. எந்த காரணத்தை கொண்டும் பிச்சை எடுக்காதே; கடுமையா வேலை செஞ்சு உன் தங்கை ராணியை ஒரு பெரிய ஆபீஸர் ஆக்கணும். " என்று பாட்டி அவனிடம் சொல்கிறார்.

சட்டென்று கண் முழித்து பார்த்ததும் அது கனவு என்பதை உணர்கிறான். அந்தக் கனவை தங்கையிடம் சொன்னபோது,

" அடுத்த முறை பாட்டி உன் கனவுல வரும்போது, அவங்கள என் கனவிலையும் வர சொல்லு அண்ணா" என்று அந்தக் குழந்தை சொல்லும் பொழுது நம் மனமும் உருகிவிடும்.

அந்த குடிசைப் பகுதியில் இருக்கும் பெரும்பாலான குடிசைகள் இம்ரான் என்ற ஒரு நபருக்கு சொந்தமானது. ஒவ்வொரு குடிசைக்கும் ₹ 100 மாத வாடகையாக அவன் வசூலித்து வந்தான். ஒரு மாதம் வாடகை தர தவறிவிட்டால் கூட, குடிசையில் இருந்து பொருட்களைத் தூக்கி எறிந்து விடுவான்.

பக்கத்து குடிசையில் வசிக்கும் பெண் , இவர்கள் இருவரையும் அருகே இருக்கும் கோவிலுக்குச் சென்று பிச்சை எடுத்தால் நிறைய வருமானம் கிடைக்கும். அதன் மூலம் உங்கள் சாப்பாட்டுப் பிரச்சனையும், இந்த வீட்டு வாடகைப் பிரச்சனையும் தீரும் என்று சொல்கிறார்.

ஆனால் பாட்டியோ எந்த காரணத்தைக் கொண்டும் பிச்சை எடுக்கக் கூடாது என்று கனவில் வலியுறுத்தியது அவன் நினைவிற்கு வருகிறது. அவன் பிச்சை எடுக்க மறுக்கிறான்.

வாடகை தர இயலாத காரணத்தினால், இம்ரான் அந்த இரு குழந்தைகளையும் குடிசையை விட்டு அடித்துத் துரத்தி விடுகிறான். வேறு வழி இன்றி நடைபாதைகளில், பூங்காக்களில் தன் தங்கையோடு தங்குகிறான். தான் எவ்வளவு கடினப்பட்டாலும் தன் தங்கையை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவனுடைய எண்ணம்.

சின்னச் சின்ன விளையாட்டுகள் மூலமும் குறும்புகள் மூலமும் தன் தங்கையை மகிழ்ச்சி படுத்திக் கொண்டே இருக்கிறான். தங்கை ராணி தினமும் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பங்களா வீட்டின் முன்பு நின்று வேடிக்கை பார்ப்பது அவள் வழக்கம்.. இவளைப் போலவே ஒரு குழந்தை , ஒரு அழகான பெரிய பொம்மையை கையில் வைத்துக்கொண்டு ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கும். அதை ஏக்கம் நிறைந்த கண்களோடு ராணி பார்ப்பாள். ஒரு நாள் அந்த பொம்மை மட்டும் ஊஞ்சலில் இருக்கும் பொழுது அதைத் தொட்டுப் பார்க்கும் ஆசையில், வாயில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அப்போது திடீரென்று அங்கு வந்த அந்த வீட்டின் உரிமையாளர் மகன், ராணி அந்த பொம்மையைத் திருட உள்ளே நுழைந்தாள் என்று குற்றம் சாட்டுகிறான். தன் தங்கையைக் காணாமல் தேடி வந்த அஸ்க்யா , தன் தங்கையை அவர்கள் அடித்து கீழே தள்ளுவதைப் பார்க்கிறான். தன் தங்கை அந்த பொம்மையைத் திருட வரவில்லை. தொட்டுப் பார்க்கும் ஆசையில் தான் உள்ளே வந்திருப்பாள் என்று அவன் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

திரும்பத் திரும்ப தன் தங்கையை திருடி... திருடி என்று அவர்கள் சொன்னது இவனுக்கு மிகப்பெரிய கோபத்தை உருவாக்குகிறது.

நானும் இதே போல ஒரு பொம்மையை என் தங்கைக்கு வாங்கி கொடுப்பேன் என்று அவர்களிடம் சவால் விட்டுவிட்டு வருகிறான். சவால் விட்டுவிட்டானே தவிர அந்த பொம்மையின் விலை கூட அவனுக்குத் தெரியாது.

ஒரு பொம்மைக் கடையில் அதே போன்ற ஒரு பொம்மையைப் பார்த்து விலையை விசாரிக்க கடைக்கு உள்ளே நுழைகிறான். ஆனால் அவன் தோற்றத்தையும், உடையையும் பார்த்த காவலாளி அவனை உள்ளே அனுமதிக்க மறுக்கிறான்.

அங்கு வந்த கடையின் முதலாளி நடந்ததைக் கேட்கிறார்.

" சார் இந்த பொம்மையோட விலை தெரிந்து கொள்ளத்தான் கடைக்குள் வர பார்த்தேன்"

என்று அவன் சொல்லச் சொல்ல கடைக்காரர் ஏளனமாய்,

" இந்த பொம்மையின் விலை ரூ. 5000 ரூபாய். இந்த பொம்மையைத் தொட்டுப் பார்க்க கூட உனக்கு தகுதி இல்லை" என்று சொல்லி விடுகிறார்.

எப்படியாவது இந்த பொம்மையை தன் தங்கைக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்கிறான். ஆனால் என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை? ஆனால் கண்டிப்பாக பிச்சை மட்டும் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறான்..

தெருத்தெருவாக பழைய குப்பைகள் கிடக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை சாக்கு பையில் சேகரிக்கிறான். அதை பழைய பேப்பர் கடையில் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கிறான். அந்த நேரத்தில் தான் அந்த குடிசையின் சொந்தக்காரனான இம்ரான் செய்த தவறுக்காக சிறையில் அடைக்கப்படுகிறான். மீண்டும் அவர்களுக்கு பாட்டியின் குடிசை கிடைக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மீண்டும் இவர்கள் வருகையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

நடைபாதையில் பொருட்கள் விற்று பணம் ஈட்டுகிறார்கள். ஆனாலும் அந்தப் பணமெல்லாம் அவள் தங்கையின் கனவை நிறைவேற்ற போதாது என்பது அவனுக்கு புரிகிறது.

அப்பொழுதுதான் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அங்கு இருந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் குழிக்குள் விழுந்து விடுகிறான். அவன் பெயர் ஓம்கார். அஸ்க்யா அந்தச் சிறுவனைக் காப்பாற்றுகிறான். தன் மகனைக் காப்பாற்றியதற்காக ஓம் காரின் தந்தை நிறைய பணம் தருகிறார். எனக்கு இந்த பணம் வேண்டாம் ஏதாவது ஒரு வேலை தாருங்கள் என்று அவரிடம் கேட்கிறான். நான் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று சொல்கிறான் .

அந்தக் குழந்தையின் நேர்மையும் தன்மானமும். அவருக்குப் பிடித்து போய், நான் உனக்கு வேலை தருகிறேன் என்று அழைத்துச் செல்கிறார். ஓம்காரின் அப்பா களிமண்ணால் கடவுள்களின் சிலைகளை வடித்து, அதற்கு வண்ணம் தீட்டி விற்பனை செய்யும் மிகப்பெரிய கூடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

அவரும் அவர் குடும்பத்தினரும் இந்த குழந்தைகளை அன்போடு ஏற்று கொள்கிறார்கள். வேலை தந்ததோடு மட்டுமில்லாமல், அந்தக் குழந்தை ராணிக்கு கல்வியும் கற்றுக் கொடுக்கிறார்கள். அங்கேயே தங்கச் சொல்லி இடம் கொடுத்தாலும், அந்தக் குழந்தைகள் கடினமான காலகட்டத்தில் தன்னை ஆதரித்த குடிசை பகுதி மக்களுடன் தான் இரவு தங்குவோம் என்று வேண்டுகோள் வைக்கிறார்கள்.

அவள் பாட்டியின் கனவின்படி இவன் கடினமாக உழைக்கிறான். அவன் தங்கைக்கு கல்வி கிடைக்கிறது. ஆனாலும் தங்கையின் கனவான அந்த அழகிய பொம்மையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதை அவன் மறந்துவிடவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு அவனுக்கு கிடைத்த வருவாயைக் கொண்டு , அந்த பொம்மையை வாங்க கடைக்குச் செல்கிறான். அந்த பொம்மை அங்கே இருப்பது அவனுக்கு நிம்மதி தருகிறது.

ஆனால் தொகை சிறிதளவு குறைகிறது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் முழு பணத்தையும் கொடுத்தால் பொம்மை கிடைக்கும் இல்லை என்றால், வேறு யாராவது அந்த பொம்மையை வாங்கிச் சென்று விடுவார்கள் என்று கடைக்காரர் எச்சரிக்கிறார்.

இத்தனை கஷ்டப்பட்டும் தன் தங்கையின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்று அவன் சோர்ந்து போய் அமர்ந்த வேளையில் உற்றத் துணையாய் அந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் வருகிறார்கள்.

அவர்களிடம் இருக்கும் அத்தனை பணத்தையும் இவனிடம் தருகிறார்கள். இந்த பொம்மையை வாங்க தேவையான பணம் கிடைத்து விடுகிறது.

அந்த அழகிய பொம்மையின் பெயர் தான் சிண்ட்ரெல்லா. அந்த சிண்ட்ரெல்லா பொம்மை அவர்கள் வாழ்க்கைக்குள் வந்த பிறகு அவர்கள் வாழ்வே மாறுகிறது.

அந்த சிண்ட்ரெல்லா அவர்களுக்கு மட்டுமல்ல அந்தக் குடிசைப் பகுதியின் மக்கள் அனைவருக்கும் ஒரு தேவதையாய் மாறுகிறது. தன் கடின உழைப்பால் தன் தங்கையை மட்டுமல்லாமல், அந்தக் குடிசை பகுதியில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு இல்லம் கட்டி அவர்களுக்கு கல்வியும் கற்பிக்கிறான் அஸ்கியா.

எத்தனை கடினமான சூழல் வந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாது என்ற சிறுவனின் மன உறுதியும், அவனது கடின உழைப்பும், தன் தங்கை மீது கொண்ட பாசமும் மிக அழகாக இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த இரு குழந்தைகளின் நடிப்பும் மிக இயல்பாய் நம்மைக் கவர்ந்து விடும்.

எத்தனை இடர்கள் வந்தாலும், கொண்ட கொள்கையில் மாறாமல் இருந்தால், அந்த வானம் கூட வசப்படும் தூரம் தான்.

.