தொடர்கள்
தொடர்கள்
என்னடா அரசியல் இது? - 6 - வெளுத்து வாங்குகிறார் நாஞ்சில் சம்பத்

20180425183724199.jpeg

சந்திப்பு: வி.சி

எனக்கு தி.மு.க.வில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எப்போதுமே கவலைப்பட்டதில்லை. காரணம், என் சுபாவம் அப்படி. எல்லாவற்றையும் ஏற்பேன் ஒரு எல்லைவரை. அங்கீகாரம் கிடைக்கவில்லை என காற்றோ, கார்மேகமோ கவலைப் பட்டிருக்கிறதா?... எப்போதும் போல் காற்று வீசிக்கொண்டு இல்லையா? என் காலில் பாம்புகள் சுற்றியதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் தி.மு.க. சொற்பொழிவாளனாக இருந்தபோது பேச்சாளர் கூட்டம் நடந்தது. அப்போது நான் எழுந்து, “நாடு சுற்றிவரும் பேச்சாளர்களுக்கு தருகிற சன்மானம் வழிச்செலவுக்கு மட்டுமே போதுமானது. வாழ்க்கை செலவுக்கு அது போதாது. அதனால் சொற்பொழிவாளர்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க பாஸ் வேண்டும்” எனப் பேசினேன். கலைஞரும், அப்போதைய போக்குவரத்து அமைச்சர் கண்ணப்பனும் அப்படி கொடுக்க சட்டத்தில் இடமுள்ளதா என திரும்ப திரும்ப யோசித்தார்கள். கடைசியாக ’போக்குவரத்து நல்வாழ்வு கமிட்டி உறுப்பினர்’ என்ற முத்திரையுடன் சொற்பொழிவாளர்கள் இலவசமாக அரசு பேருந்தில் பயணிக்க அனுமதி கிடைத்தது. தி.மு.க.ஆட்சியில் பேச்சாளர்களுக்கு கிடைத்த இந்த நன்மைக்கு நார் எடுத்து தொடுத்தவன் இந்த நாஞ்சில் சம்பத் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.


இன்னொரு சம்பவம், நினைவுக்கு வருகிறது. 'தமிழகத்தில் உல்பா தீவிரவாதிகள்' என்ற பொய் புகாரை வைத்து, தி.மு.க ஆட்சியை கவிழ்த்தது சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு.


தி.மு.க. ஆட்சி கொட்டி கவிழ்க்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவை வெற்றிபெற வைப்பதற்கு படாதபாடு பட்டோம். பட்டதெல்லாம் போதும் என்ற அளவிற்கு பாடு பட்டோம். ஆனால் தி.மு.க. கரை சேரவில்லை.

ஜெயலலிதா தலைமையில் முதன்முதலில் ஆட்சி அமைகிறது. 1991-ம் வருடம் ஜனவரி 25-ம்நாள் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்கு என்னை விருதுநகரில் பேசச்சொன்னார்கள். எக்கச்சக்க கூட்டம். ஏகப்பட்ட அப்ளாஸ். ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

அந்த பேச்சுக்கு என்மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. திடுக்கிட்டேன். தி.மு.க. பெருந்தலைகளோ எந்த ஆறுதலோ, நம்பிக்கை வார்த்தைகளோ எனக்கு தரவில்லை. தந்தை பெரியாருக்கு பிறகு தி.மு.க.வில் தேச துரோக வழக்கை சந்தித்தவன் நான்.

இச்செய்தியை ‘முரசொலி’ பொறுப்பாளர் திருநாவுக்கரசு, பிரசுரித்தார் - ‘நாஞ்சில் சம்பத் தேச துரோக வழக்கில் கைது’ என்ற செய்தி போடப்பட்டது. இதை கவனித்த மு.க.ஸ்டாலின் முகம் கடுமையானதாம். திருநாவுக்கரசை கூப்பிட்டு ‘இந்த செய்தியை ஏன் பிரசுரம் செய்தீர்கள்’ என்று கேட்டபோது அவர் திடுக்கிட்டுப்போய் ‘இதில் என்ன தவறு இருக்கிறது’ என்று குழம்பியிருக்கிறார். கேட்டதோடு நிறுத்தவில்லை. ‘இனி அப்படி வெளியிட்டால் உங்கள் மீது நடவடிக்கை பாயும்..’ என்ற அளவிற்கு அன்று திருநாவுக்கரசு மிரட்டப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தான் எழுதிய புத்தகத்தில் திருநாவுக்கரசு வருத்தத்தோடு பதிவு செய்துள்ளார்.

இதன் பிறகு என்மீது எத்தனையோ அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எதற்கும் அஞ்சாமல் தி.மு.க. மேடையில் அக்னி மழையாக கொட்டினேன். அவர்களது சில்லறைத்தனங்களை மறந்து தி.மு.கவின் நிர்வாகிகளின் நெஞ்சம் கவர்ந்தேன். கட்சி மேலிடம் என்னை தொடர்ந்து அலட்சியப்படுத்துவதை நான் அலட்சியப்படுத்திவிட்டு என் பயணத்தை தொடர்ந்தேன். அதிகார பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காக நான் மேடைக்கு வரவில்லை.

தமிழ் ஈழம் என்ற கனல் எனக்குள் எரிந்து கொண்டிருந்தது. வெல்வதற்கு ஒரு நாடு இல்லை என்று வேதனைப்பட்டான் மார்ஸிடோனிய மாமன்னன் அலெக்ஸாண்டர்.

தமிழர்களுக்கு என சொல்லுவதற்கு ஒரு நாடு இல்லை என்ற சோகம் என்னில் எப்போதும் இருந்து வந்தது. அந்த தமிழ் ஈழத்தை வென்றெடுக்கும் கருவிகளாகவே தி.மு.க. மேடைகளை நான் பார்த்தேன். அன்று ஆட்சிக்கட்டிலில் இருந்த அரசாங்கத்தை விமர்சித்து ஒரு அரை மணி நேரம், தி.மு.க.தலைவர் கலைஞரை புகழ்ந்து ஒரு அரை மணி நேரம், மீதி ஒரு மணி நேரம் தமிழ் ஈழத்தின் வரலாற்று தேவைகள் குறித்தே எல்லா கூட்டங்களிலும் பேசினேன். இதற்கு கழக நிர்வாகிகள், தோழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் தி.மு.க. தலைமை இதில் முழு ஈடுபாட்டோடு இருந்தது என்று சொல்ல முடியாத அளவிற்கு அவர்களது சில நடவடிக்கைகள் இருந்தன.

- மீண்டும் பேசலாம்...