தொடர்கள்
தொடர்கள்
சேனல் டாக் - 27 - மெகா மாலினி

“பாட்டு நிகழ்ச்சிகள் பற்றி சொல்வதாக போன வாரம் முடித்திருந்தேனில்லையா?” என்றேன்.

நண்பர் ‘ஜில்’லென்ற ஜூஸை நீட்டி “ஆமாமா.. நல்ல வெயில்ல வந்திருப்பீங்க.. இதை முதல்ல குடிங்க!” என்றார்.

அடிக்கிற வெயிலுக்கு அற்புதமாக உள்ளிறங்கியது ஜூஸ்.

“பாட்டு நிகழ்ச்சிகள் என்று எடுத்துக்கொண்டால் நாலு வகையான நிகழ்ச்சிகள் நடக்கிறது. ரேட்டிங்கில் முந்தியிருப்பது சன் சிங்கர். ஐந்து முதல் எட்டு சர்வ சாதாரணம். சில சமயத்தில் ஒன்பது ரேட்டிங்கெல்லாம் கூட எடுக்கிறது. அடுத்தது விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர். நாலு வரை இதன் ரேட்டிங். இதற்கு மிக அருகிலான ரேட்டிங்கில் இருப்பது ஜீ தமிழின் ச ரி க ம ப. இதற்கடுத்து நான்காவது நிலையில் பொதிகை டி.வி.யின் குயில் தோப்பு நிகழ்ச்சி. நாலாவது இடத்தில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனிப்பட்ட மவுசு உண்டு. மற்ற சேனல்கள் போன்று இங்கே 26 வார பயணமெல்லாம் போட்டியாளர்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. நாலே வாரத்திற்குள் ஃபைனலுக்குள் போய்விடலாம். இந்த நாலு வாரத்திற்குள் லட்ச ரூபாய் பரிசுத்தொகை என்பதால் இந்த நிகழ்ச்சியும் தற்போது பிரபலமாகி வருகிறது! இதன் நடுவர்கள் பாடகர் உன்னி மேனனும், மியூஸிக் டைரக்டர் தாஜ் நூரும் இளைஞர்களை நன்றாகவே ஊக்குவிக்கிறார்கள்!”

“இந்த மாதிரி போட்டிகளில் ராக் ஸ்டார் ரமணியம்மா மாதிரி திடீர் பிரபலங்கள் தோன்றுகிறார்கள் இல்லையா?!” என்று கேட்டார் நண்பர்.

2018042522305393.jpg

“ஆம். ரமணியம்மா மேற்கு மாம்பலம் ஏரியாவில் வீட்டு வேலை செய்பவர். 60-க்கு மேல் வயது. இவர் குரல் அநாயசமாக உச்சஸ்தாயியை தொடுகிறது. தன் குரலுக்கேற்ற பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுவதில் இவர் கெட்டிக்காரர். எல்லாவற்றையும் விட இவரது எளிமையும் பேச்சு நேர்த்தியும் அனைவர் மனதையும் தொட்டது. ஜீ தமிழில் ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார் இவர். வெற்றிக்குப் பிறகு நிறைய கச்சேரிகள் வருகிறதாம். ஆனாலும் இன்னமும் தன் வீட்டு வேலையை இவர் விடாதது தான் ஆச்சர்யம்!”

“இதுபோன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களுக்கு சேனல்கள் காண்ட்ராக்ட் போடுகின்றனவாமே! அதனால்தான் ஒரு சேனலில் வருபவர் அடுத்த சேனலில் வருவது கடினமோ?!”

“முக்கியமான கேள்வியை கேட்டீர்கள் நண்பரே! இந்த மாதிரி காண்ட்ராக்ட் போட்டு திறமைசாலிகளை தங்கள் சேனலுக்கென்று பிரத்யேகமாக முடக்குவது என்பது விஜய் டி.வி. தொடங்கிய பணி. இவர்கள்தானே சூப்பர் சிங்கர் போட்டியை துவக்கியவர்கள். எனவே இந்த கைங்கர்யத்தையும் இவர்களே செய்தார்கள்.

2018042522441392.jpg

ஜீ தமிழ் ஆரம்பித்த புதுசில் ‘சங்கீத மகா யுத்தம்’ என ஒரு வித்தியாச பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ஆகியது. நான் சொல்வது 2008ம் வருட சமாச்சாரம். அந்நிகழ்ச்சியின் விசேஷம் என்னவென்றால் நான்கு மொழிகளிலும் வெவ்வேறு சேனல்களின் பாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற சாம்பியன்களை ஒருங்கிணைத்து தமிழக வெற்றியாளர்களுடன் போட்டி போட வைத்தது. இந்நிகழ்ச்சிக்கு அப்போது உஷா உதுப்பும் பாடகி சௌம்யாவும் நிரந்தர நடுவர்களாகவும் மற்ற பிரபலங்கள் வாரம் ஒருத்தர் எனும் சுற்று அடிப்படையிலும் வந்தார்கள்.

விஜய் டி.வி.யின் ஆரம்ப சீசனில் வெற்றி பெற்ற சாய்சரண் போன்ற நான்கு குழந்தைகள் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளோடு காணாமல் போனார்கள். இரண்டாம் நாள் படப்பிடிப்புக்கு எல்லாம் ரெடி. ஆனால் அந்த நான்கு போட்டியாளர்கள் மிஸ்ஸிங். அப்புறம்தான் தெரிந்தது. விஜய் டி.வி. அவர்களை கூப்பிட்டு ‘ஒப்பந்தம் எங்களோடு இருக்கிறது.. உங்கள் குழந்தைகள் அடுத்த சேனலில் பாடக்கூடாது’ என பெற்றோர்களை அழைத்து மிரட்டியது என்று! நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பெற்றோர்களை அழைத்து விசாரித்தால், “நாங்கள்லாம் விஜய் டி.வி.க்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கோம். ஆக்சுவலா ஒப்பந்தம் எதிலும் நாங்க கையெழுத்து போடலை. ஆனா போட்டதா சொல்றாங்க. எங்களால அந்த சேனலை மீற முடியாது. மன்னிச்சிருங்க!” என அவர்கள் கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டார்கள். அன்று அந்த நிகழ்ச்சி தயாரித்த கம்பெனியான பிரமிட் சாய்மீரா நிறுவனத்தார் நினைத்திருந்தால் அந்த ஒரு நாள் படப்பிடிப்பு ரத்துக்கென நஷ்ட ஈடு கேட்டு இந்த பெற்றோர்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் பெரிய மனதுடன் நடந்து கொண்டதால் சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் குழந்தைகளும் அன்று சங்கடமின்றி தப்பித்தார்கள்.

அப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஜீ தமிழ் நிர்வாகிகள் சகிதம் இதுகுறித்துப் பேச விஜய் டி.வி. நிர்வாகத்தாரை சந்திக்க முயன்றபோது, விஜய் டி.வி. நிர்வாகத்தினர் அவர்களை சந்திக்க பயந்து ஓடி ஒளிந்துகொண்டதுதான் படுதமாஷ். ஆபிஸில் இருந்து கொண்டே இல்லையென்று ஜூனியர்களை வைத்து பதில் சொன்னது விஜய் டி.வி. மேலிடம். இது போன்ற போட்டி விளையாட்டுளும், கபடு சூதுகளும் நிறைந்ததே பாட்டுப் போட்டிகளின் களம். இவர்களைப் பார்த்து இப்போது எல்லா சேனலும் ஆரம்பத்திலேயே தன் போட்டியாளர்களுடன் ஒப்பந்தம் போடத் துவங்கிவிட்டார்கள்! பொதிகை மாத்திரமே போட்டியாளர்களுக்கு எந்த வித நெருக்கடிகளும் தருவதில்லை."

“அது சரி... ராஜ் டி.வி.யில் ஏதோ விசேஷம் போலிருக்கிறதே!”

“அங்கே ஐந்து சீரியல்களை ஒன்றாக ஆரம்பிக்கிறார்கள். இரவு 7மணி முதல் 9.30மணி வரை முறையே 'கடல்கடந்து உத்யோகம்', 'கங்காதரனை காணோம்', 'கண்ணம்மா', 'ஹலோ சியாமளா' மற்றும் 'நலம் நலமறிய ஆவல்' என ஐந்து புத்தம் புதிய தொடர்கள் வரப்போகிறது. திங்கள் முதல் வியாழன் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இந்தத் தொடர்கள்.

இதற்கான ப்ரோமாக்கள் எல்லாம் புதிய முறையில் செய்திருக்கிறது ராஜ் டி.வி. இந்த ஐந்து தொடர்களையும் காண்ட்ராக்ட் முறையில் ஒரே நிறுவனமே தயாரிக்கிறது. அது பற்றி அடுத்த வாரம் பேசுவோம்!” விடைபெற்றேன் நான்!

(தொடரும்)