
பாகி
மேசையில் பிரிந்து கிடந்த செய்தித் தாள்களில் துப்பாக்கிச் சூட்டு செய்திகள் அலறிக் கொண்டிருந்தன. கொஞ்சம் கோபம் கலந்த நிலையில் மனத்தைத் தணித்துக் கொள்வதற்காக சோமசுந்தரத்தைக் கைபேசியில் அழைத்தேன்.
“வெந்நீர் ரெடியா இருக்கு.. குளிக்கலாம்..” என்று மனைவி கூறியதில் கவனம் செல்லவில்லை.
“சொல்லு நாராயணா…” என்று சோமசுந்தரம் கேட்ட குரலில் சுர்ததே இல்லை.
“வீட்லேதானே இருக்கீங்க.. பாக்கலாமா…?” என்றேன்.
“ஆமா வாக்கிங் முடிச்சிட்டு வந்தேன். துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான செய்திகளைப் பார்த்து ரொம்ப அப்செட் ஆயிட்டேன்பா….”
“இது மாதிரி நிறைய முறை தமிழ்நாட்லே துப்பாக்கிச் சூடு நடந்திருக்கே அண்ணே…” என்றேன்.
“ஆமாம்ப்பா, ஆனா அதுலேயெல்லாம் போலீஸ்காரங்க கடைசியிலேதான் சுட்டாங்க. நேத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அப்படியில்லே.. அரசு சொதப்பியிருக்கு இல்லே திட்டமிட்டு செஞ்சிருக்குன்னு தோண்ற மாதிரியே இருக்கு. கலவரத்தை அடக்கத்தான் துப்பாக்கிச் சூடுன்னு சொன்னா, கலவரம் வரும்னு போலீசாலே மோப்பம் பிடிக்க முடியலியா?” என்றார்.
“கரெக்ட் அண்ணே, பிரஸ் கிளப் வர்றீங்களா… அங்கே போயி ரொம்ப நாளாச்சு” என்று கேட்டேன்.
சரி என்று சொன்னார். ஒரு மணி நேரத்தில் காலை வேலைகளை முடித்துவிட்டு அங்கே சென்றேன். காத்துக் கொண்டிருந்தார் சோமு.
ஜேகப் கிட்டே ரெண்டு கூல் டிரிங்ஸ் வாங்கி குடித்தபடி பேச்சைத் தொடர்ந்தோம்…
சோமு அண்ணன் சொல்ல ஆரம்பித்தார்:
“ஏழு வருஷத்துக்கு முன்னே பரமக்குடியிலே நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலே 7 பேர் செத்துட்டாங்க. அது தலித் மக்கள் மீது அரசு நடத்திய வன்முறைன்னு அரசியல்வாதிங்க சொன்னாலும், முழுமையா விசாரணை நடத்திய நீதிபதி சம்பத் குழு போலீசாரை பாராட்டியிருக்கு.
அதை விட 1918ம் வருஷம் கமுதி கலவரம் கூடப் பெரிசு.. ரெண்டு சமூகத்துக்கு நடுவுலே மோதல். கலவரமா மாறி போலீசார் துப்பாக்கியாலே சுட்டிருக்காங்க.. இருந்தாலும் கடைசிலே, அப்ப இருந்த பெரிய தலைவர்கள் சௌந்தரபாண்டியன் நாடாரும் ராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியோட மகனும் இணைஞ்சு நெருப்பை அணைச்சாங்க. அப்போ கலவரம் வரும்னு போலீசார் மோப்பம் புடிச்சு நடவடிக்கை எடுத்தாங்க. அதனாலே உயிர்ச் சேதம் அதிகமா நடக்கலே. கமுதி கலவரத்துலே போலீஸ்காரங்க அஞ்சு பேரு நிஜமாவே காயமடைஞ்சாங்கப்பா…
மோசமான துப்பாக்கிச் சூடுன்னா யாழ்ப்பாணம் உலகத் தமிழ் மாநாட்டுலே நடந்ததைச் சொல்லலாம். 1974லே ஜனவரி மாசம் இலங்கை யாழ்ப்பாணத்தில் நான்காவது மாநாடு நடந்துச்சு. அப்போ போலீசார் துப்பாக்கியாலே சுட்டு 9 பேரை, அதிலும் தமிழங்களைக் கொன்னுட்டாங்க.
அதே வருஷம் கலைஞர் கருணாநிதி முதலமைச்சரா இருந்தப்போ அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தாங்க அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துலே… அந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. அப்போ போலீசார் சுட்டு உதயகுமாரன்கிற மாணவர் இறந்துட்டாரு.
எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயெல்லாம் விவசாயிகளுக்கு எதிரா துப்பாக்கிச் சூடு, மீனவர்கள் மேலே துப்பாக்கிச் சூடு எல்லாம் நடந்திருக்கு…” என்றார் சோமசுந்தரம்.
“அதெல்லாம் சரிண்ணே. அதுக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும் என்ன டிஃபரன்ஸ்…”
“பெரிய டிஃபரன்ஸ் இருக்கு. முன்னே நடந்ததுலே கலவரம் வெடிச்சது நாட்டுக்கே தெரியும். போலீசார் அதைக் கட்டுப்படுத்தத்தான் சுட்டிருக்காங்க.. ரெண்டாவது, அதுலே எல்லாம் மக்களும் இல்லை.. மூணாவது அதெல்லாம் திடீர்னு வெடிச்ச கலவரம். நாலாவது, அந்தப் போராட்டங்கள்லே அரசாங்கம் தனியார் கம்பெனி சம்பந்தப்பட்டதேயில்லை. சமூகப் பிரச்சினைங்கதான்..” என்றவர், “போலீஸ்காரங்க இப்ப கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்திருந்தா பிரச்சினையை ரத்த சேதமில்லாம சமாளிச்சிருக்கலாம்.. முன்னே ஒரு நடந்த விஷயத்தைச் சொல்றேன். நானே ஸ்பாட்லே இருந்த இன்ஸிடென்ட் அது”
“சொல்லுங்கண்ணே…”
“அயோத்திப் பிரச்சினைக்கெல்லாம் முன்னாடி விஸ்வ ஹிந்து பரிஷத் சென்னையிலே ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவிச்சு, கர சேவை ஊர்வலம் நடத்தினாங்க.. அப்போ கலவரம் வரக் கூடும்னு போலீசார் தடை விதிச்ச பாதையிலே போகக் கூடாதுன்னு சொன்னாங்க.. ஆனா, ஊர்வலத்துக்காரங்க அந்தப் பாதை வழியாத்தான் போவோம்னு அடம் பிடிச்சாங்க.. வாலாஜா ரோடுலே ரெண்டு மணி நேரம் தர்ணா, வாக்குவாதம், போலீஸோட காரசார விவாதம் எல்லாம் நடந்துச்சு. அப்ப சென்னை போலீஸ் கமிஷனர் பி. துரை. நடு ரோடுலே போலீஸ் ஸ்டிக்கை ஊனி அதுலேயே சாஞ்சு உக்காந்துட்டாரு. காரணம், ஊர்வலம் தடை செய்ஞ்ச மசூதி வீதி வழியா போனா நடவடிக்கை எடுக்கணும்னு தயாராயிட்டாங்க.. விஷயம் கைவிட்டுப் போனா துப்பாக்கிச் சூடு நடத்தலாமாங்கிற வரையிலே பதற்றம் இருந்துச்சு..”
“ஐயோ!”
“ஆமா...ஆனா கமிஷனர் துரை சாதுர்யமா அந்த ஊர்வலத்துலே இருந்த வைஷ்ணவ பெரியவர் கிட்டே போயி, பத்து நிமிஷம் தனியாப் பேசியிருக்காரு… எரிமலை பொங்கி வர்ற மாதிரி இருந்த காட்சி அப்படியே மாறிடுச்சு.. ஊர்வலத்துக் காரங்களைக் கொத்துக் கொத்தா பிடிச்சு அள்ளிட்டு போயிட்டாங்க.. எந்த அசம்பாவிதமும் நடக்கல்லே. துரை கையாண்ட சாதுர்யம்தான் அதுக்கு காரணம். அந்த மாதிரி சாமர்த்தியமா கையாண்டிருந்தா தூத்துக்குடியிலே பலியே இருந்திருக்காது…” என்று கூறிவிட்டு அமைதியாக இருந்த சோமு அண்ணன், “ தன்னோட நாட்டுக் குடி மக்கள் மேலேயே படையைப் பிரயோகிச்ச கொடூர ஆட்சி பத்தி பாகவதத்துலே சொல்லியிருக்கு.. வேனன்னு ஒரு அரசனைப் பத்தி… அவனுக்குக் கடைசியிலே நேர்ந்த கதி அதோகதின்னு பாரதியார் கூட தன் பாஞ்சாலி சபதத்துலே சுட்டிக் காட்டியிருக்காரு.
இது ஜனநாயக அரசு. அதுக்கேத்த முடிவு கிடைக்குமா… ?”
கேள்வியை மட்டும் உதிர்த்துவிட்டு புறப்பட்டார் சோமசுந்தரம் அண்ணன்.

Leave a comment
Upload