
அந்த மேற்கு வானம் கதிரவனை அனுப்பிச் சந்திரனை வரவேற்கக் காத்திருந்தது. பூங்காவில்அமர்ந்திருந்த அனுவின் மனதிலும் பல யோசனைகள் வந்து வந்து போனது.
வானமே எல்லை என்பார்கள். வானத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்த நினைவுகள்அனுவின் கனவுகளாகவே இருந்தது.
"மேடம், என்ன யோசனை பண்றீங்க? ரொம்ப நேரமா ஒரே சோகமா இருக்கீங்க" கேட்டதுபூங்காவின் வாட்ச்மேன்.
அடிக்கடி அவளை இங்குப் பார்த்திருக்கிறான். சமோசா, சுண்டல் வாங்கித் தந்திருக்கிறாள்.
"நீ என்ன செய்வாய்? உன்னால் என்ன செய்துவிட முடியும்? என்றுநினைத்தாள்.
"ஒன்னுமில்லண்ணா, கொஞ்சம் தலைவலி" என்றாள்.
நிறைய மனிதர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
"வரேண்ணா, நேரமாச்சு" சொல்லிக் கொண்டே வெளியே வந்து டூ வீலரை உதைத்துக்கிளப்பினாள்.
இரண்டு கிலோமீட்டர் தாண்டி வேகம் குறைத்து வளைத்து நிறுத்தினாள்.
அம்மா கேட்டைத் திறந்ததும் உள்ளே வைத்துப் பூட்டினாள். வாசல் பைப்பைத் திறந்து கை, கால், முகம் என அலம்பிக் கொண்டு உள்ளே வந்தாள்.
படபடவென பொரிந்து கொட்டும் மகள் மௌனியாக இருப்பது அம்மா சாந்தாவிற்கு மிகுந்தவேதனை அளித்தது.
"காபி தரட்டுமா?"
"தா மா". ஒற்றை வார்த்தையில், ஆக்சனில் பேசிக் கொள்வது இருவருக்குமே பெரியஇறுக்கத்தைத் தந்தது என்பதுதான் உண்மை.
அப்படி என்ன நடந்தது? எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
அனுவின் அப்பாவின் மரணம்! திருமணத் தேதி குறித்த நிலையில் கஷ்டப்பட்டு கடன் வாங்கிவந்த பணத்துடன் ஆட்டோவில் விபத்துக்குள்ளாகி அப்பா மரணமடைந்தார்.
பணமும் பறிபோனது.
அப்பா இறந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது. நாட்கள் வேகமாக நகர்ந்தன.
இவளும் டிகிரி முடித்து ஒரு கம்பெனியில் வேலை செய்கிறாள். சொற்ப வருமானம்.
பணக்கார சம்பந்தம். சொந்த வீடு, கார், பங்களா என்று அமையப் போகும் சந்தோஷத்தில்இருந்தார்கள்.
தம்பி அருண் வரும் வருடம் படிப்பு முடித்து வேலைக்குப் போய்விட்டால் கடனை அடைத்துக்கொள்ளலாம் என்று வைத்த 'அகலக்கால்' அகால மரணத்தில் முடிந்தது.
கையில் பணமும் இல்லை. கடன் கொடுத்தவர்கள் விடப்போவதும் இல்லை. கல்யாணம்? தெரியவில்லை.
படத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம் மானசீகமாக கேட்டாள். என்னாச்சுப்பா? எனக்கேன் இந்த நெலைமைப்பா? அம்மா பாவம்ப்பா. அவளால் அழக்கூடமுடியவில்லை. தவிக்கிறாள்.
சித்திரமானவர் சிரித்துக் கொண்டிருந்தார். பேசவில்லை. அனு அழுகையை அடக்கிக்கொண்டாள்.
நடுத்தரக் குடும்பங்களில் இதையெல்லாம் ஜீரணிப்பது மிகவும் கடினம்.
அருண் காலேஜ் முடிந்து ஒரு டியூஷன் செண்டரில் மாலை நேரம் பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு பத்து மணிக்கு வந்தான். இரண்டு பஸ் மாறி வரவேண்டும்.
அக்காவின் அருகில் வந்து அமர்ந்தான். அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
மௌனம் கலைத்தாள். உடல் குலுங்கியது. அழ ஆரம்பித்தாள். "தம்பி என்னடா செய்யப்போறோம்? அப்பா இல்லாம எப்படிடா?" கதறினாள்.
"எனக்கு அப்பாவப் பாக்கணும் போல இருக்குக்கா" துடித்தான்.
நின்ற நிலையில் இருவரையும் அணைத்துக் கொண்டாள் அம்மா.
வீட்டுச் சிலவுகள் விஸ்வரூபமெடுத்து விடும். வாடகை, கரண்ட் பில், மளிகை, போன், கேபிள், எனஒன்றன் பின் ஒன்றாக துரத்த ஆரம்பிக்கும்.
எதற்கும் வாய்தா வாங்க முடியாது.
காக்கைகள் கூட கூட்டமாய் அழுதுவிட்டு பறந்துவிடும். மனிதர்கள்?!
பொழுது விடிந்தது. வழக்கம் போல் அனு அலுவலகத்திற்கும், அருண் காலேஜிற்கும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.
அம்மா எலுமிச்சை சாதம் செய்திருந்தாள். இருவரும் இங்கும் சாப்பிட்டுக் கைக்கும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
வாசலில் மணி அடித்தது. ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அருண் கதவைத் திறந்தான். "வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி, உள்ள வாங்க"
"அம்மா இங்க வாங்கம்மா" என்று அம்மாவையும் அழைத்தான்.
அனுவின் வருங்கால மாமனார் மாமியார்தான் வந்திருந்தார்கள்.
"எப்பிடிம்மா இருக்க அனும்மா?" கோபாலன் விசாரித்தார்.
"எளைச்சுப் போயிட்டியேம்மா. ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றாள் மங்களம்.
"ஒக்காருங்க சம்பந்தி" என்றாள் அம்மா சாந்தா.
"ஏங்க சொல்லுங்க" என்றாள் மங்களம்.
"நீயே சொல்லுமா" என்றவரிடம்
"எப்படிச் சொல்றதுன்னே தெரியலைங்க" என்றாள்.
"ஒன்னுமில்லமா, நீங்கல்லாம் கவலையில இருக்கும்போது இப்பிடி சொல்லக் கூடாதுதான். இருந்தாலும் அது எங்க கடமை" பொடி வைத்து நிறுத்தினார்.
"நம்ப குறிச்ச தேதில கல்யாணம் வச்சுக்கலாம். ஆனால்....
ஆனால்... என்ன மனம் பரபரத்தது மூவருக்கும். அரை நொடியில் வரப்போகும் சொல்லுக்குமுன்னால் ஆயிரம் பரிதவிப்பு!
"வீட்ல பெரிய துக்கம் நடந்ததால ஆடம்பரமா செலவு பண்ணிக் கல்யாணம் செய்யவேண்டாம். நா கோவில்ல பணம் கட்டிட்டேன். வரும் வாரம் புதன் கிழமை சிம்பிளாகல்யாணத்த முடிச்சிரலாம்"
மூவரின் வயிற்றினுள் பாலை மட்டுமல்ல பால் பண்ணையையே வார்த்து விட்டார்.
"ஒங்கப் பக்கம் முக்கியமா ஒரு பத்து பதினைந்து பேர் கூப்பிடுங்க. நாங்களும் வந்தர்ரோம். கல்யாணத்தை முடிச்சிரலாம். சம்பந்தி இருந்திருந்தார்னா அமர்க்களப்படுத்திருப்பாரு" என்றுகாதில் தேன் பாய்ச்சிய மாமனாரின் காலில் விழுந்தாள்.
மனிதம் வாழ்கிறது. மானுடம் வென்றது. மகிழ்ச்சி விதைந்தது. முளைத்து திளைக்கப்போகிறது.
வி'சித்திரம்' நடந்தது! பேசியது! எத்தனை உயர்ந்த மனிதர்கள். எத்தனை உயரிய எண்ணம். அவர்கள் மகனை மணந்து அவர்களுக்கு மருமகளாய் போகவிருப்பதை எண்ணிப் பெருமிதம்கொண்டாள்.
இன்று பார்க்கில் அனு தெளிந்த முகத்துடனும் மகிழ்ச்சியுடனும் போன் பேசிக்கொண்டிருந்தாள்.
வாட்ச் மேனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ பேர் வருகிறார்கள். அமர்கிறார்கள். போகிறார்கள்.
ஆனால் எல்லோரும் சந்தோஷமாக கிளம்பிப் போனாதான் அவனுக்கு மகிழ்ச்சி.

Leave a comment
Upload