தொடர்கள்
கதை
ரகசியம்..... பரம ரகசியம்- கி ரமணி

20260428171537515.jpeg

கரிகால் சோழன் உணர்ச்சி பொங்கத் தன் கட்சித் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அன்று,அவருடைய அறுபத்தேழாவது பிறந்தநாள்,மிகப்பெரிய அளவில் காலையில் கொண்டாடப்பட்டது... சென்னை பக்கத்து தனியார் திடலில்.

, ஐந்து வருடங்கள் மத்திய அமைச்சர்,அப்புறம் தன் மாநிலத்தில் மூன்றேகால் வருஷம் துணை முதல்வர் என்று இருந்தாச்சு. தற்போது கொஞ்ச நாளாக முக்கியமான கட்சி பணிகள் மட்டும் தான்.

ஆளும் மாநில கட்சியின் பெரிய தலைவர்களில் ஒருவர் கரிகாலன்.

அரசனாவதை விட அரசனை உண்டாக்குவதில் வல்லமையும் பெருமையும் கொண்டவர்.

சந்தோஷமாக மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

அஞ்சு நிமிஷ பேச்சுக்கு பிறகு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்தார்.

"என் அன்புச் சொந்தங்களே. உங்கள் பேராதரவால் நான் ஏற்காத பதவி இல்லை, பெறாத புகழ் இல்லை, பார் க்காத விழா இல்லை.

உங்களுக்கு நன்றியுடன் கூறிக் கொள்கிறேன். நான் இதுவரை பார்க்காத, இனியும் பார்க்க முடியாத விஷயம் ஒன்றே ஒன்று உண்டு" என்று நிறுத்தினார்.

கூட்டம் அமைதியாக யோசித்தது.

சில வினாடிகள் கழித்து. " அதுதான் என் மரணத்துக்குப் பின் நடக்கும் இறுதி நிகழ்ச்சிகள். "என்று கூறி சத்தமாக சிரித்தார்.

" வேண்டாம் தலைவரே வேண்டாம். .உங்களுக்கு சாவே கிடையாது." எல்லோரும் முழங்கினார்கள். கூட்டமே கொந்தளித்தது.

கரிகால சோழனுக்கு மகிழ்ச்சி. " அன்பு தெய்வங்களே. என் மீது உங்களுக்கு இருக்கும் பற்றைப் பார்த்து பிரமித்து போனேன். வாழ்க என் நாடு, என் மாநிலம், என் மக்கள்". என்று கூறி முடித்தார்.

மலை போல் குவிந்த மாலைகள் பூச்செண்டுகள் எல்லாவற்றையும் தாண்டித் தன் மூன்று கோடி ரூபாய் ஜாகுவார் வண்டியில் போலீஸ் பாதுகாப்புடன் வீடு சென்றார்.

மனைவி வனஜா, மதுரையின் முன்னாள் மேயர்.

முதல் மகன்பொற்கைப் பாண்டியன் மத்திய அரசின் இணை அமைச்சர்.

இரண்டாவது மகன் செங்குட்டுவன் ரியல் எஸ்டேட், டிவி சேனல்கள், சினிமா பிசினஸ்.

மனைவி, இரண்டு மகன்கள், அவர்கள் குடும்பம் எல்லாருடனும் சேர்ந்து மதிய உணவருந்தினார்.

சிறிது நேரம் எல்லாரோடும்பேசி விட்டு கடைசியாக தன் அறைக்கு சென்றார்.

' நாம இன்னைக்கு மீட்டிங்ல பேசின மாதிரி ஏராளமா சாதிச்சாச்சு.

குடும்பம் நல்லா செட்டில் ஆயிடுச்சு.

நமக்கு வேண்டப்படாத சிலர் மட்டும்- நம்ம கிட்ட ரூபாய் நாற்பதாயிரம் கோடிக்கு மேல இருக்கிறது - என்று அவர்களுடைய டிவி சேனல் மூலம் கூறுகிறார்கள்.

இருந்தாலும் குறைந்தாலும் இதுவும் ஒரு பெருமை தானே.!

இன்னைக்கு தேதியில ஊழல் செய்யாதவன் எங்க இருக்கான்.? மாட்டாம ஊழல் செய்யறது என்பது லேசான வேலையா? மூளை இருக்கிறவன் அரசியலுக்கு வந்தால் இதெல்லாம் சகஜம்.

ஆனா இது தவிர என் மேல பெருசா எந்த பழியும் இதுவரைக்கும் யாரும் பேசல.

தன் கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த போது யோசித்தார்.

நம்ம உயிரோடு இருக்கும் போது பதவியேற்கும் பவர் இருக்குது . எல்லாரும் பின்னால சுத்தி வராங்க. ஒருவேளை நம்மசெத்துப்போயிட்டா இந்த பசங்க எல்லாம் வந்து பார்ப்பாங்களா நம்மள? இல்ல அங்கு வந்து நம்மள திட்டுவாங்களா?

இந்த சந்தேகம் மெல்ல வந்தது.

" நம்ம இன்று மீட்டிங்ல என்ன சொன்னோம்?

நிஜமாவே நம் மரணத்துக்கு பின் நடக்கும் நிகழ்வுகள் எப்படி இருக்கும்?

. பெரிய கூட்டம் இருக்கும். உலக அளவில் செய்தி பரவும்.. இது உடனே நடக்கக் கூடாது..இன்னும் ஒரு மினிமம் இருபது வருஷம் கழித்து நடக்கட்டும். அவசரமே இல்லை "

என்று எண்ணி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்.

இப்போ அந்தவருங்கால நிகழ்ச்சியில் முழுசாக மானசீகமாக ஆழ்ந்தார்.

அவர் கண்கள் மெதுவாக மூட,அரைத் தூக்கமா, கனவா, எண்ணக் கலவையா என்று தெரியாதபடி ஒரு நிலையில் ஆழ்ந்தார்.

அவர் மணக்கண் முன் அவரது இறந்த உடல் இருக்கும் காட்சி எதிரே தொலைக்காட்சி பெட்டியில் தோன்றியது.

" மாபெருந்தலைவர் கரிகாலன் இன்று இரவு அவருடைய எண்பத்தி ஏழாவது வயதில் தூக்கத்தில் காலமானார்".

"காலை 5 மணிக்கு எழுந்து விடும் அவர்

இன்று காலை ஏழு மணி வரை எழாததால் மனைவி மகன்கள் எல்லாரும் வந்து எழுப்பப் பார்க்க அவர் ஏற்கனவே மறைந்தது தெரிந்தது. இவரின் குணத்துக்கு ஏற்ப அவருக்கு வலி இல்லாத நிம்மதியான மரணம்.... "

எல்லா தொலைக்காட்சிகளும், சமூக வலைத்தளங்களும் அலறின.

தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு லீவு. மற்றும் பத்து நாள் துக்கம் அனுசரிக்கப்படும். என்று அரசு கூறியது.

. தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலிருந்தும் லாரிகளில் மக்கள் சென்னை நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள்.

" காலை அமெரிக்கா செல்வதாக இருந்த பிரதம மந்திரி தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு தனி விமானத்தில் சென்னை விரைந்து வந்தார்.

சென்னை ராஜாஜி ஹாலில் மூவர்ணக் கோடி போற்றப்பட்ட தலைவர் உடல் எம்பாம் பண்ணப்பட்டு, வெளிநாட்டு சென்ட் வாசனையுடன் வைக்கப்பட்டது.

தமிழின் உச்ச நடிகர்கள், மத்திய மந்திரிகள். , எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் , என்று எல்லாரும் அணியில் நின்று வந்து மலர் வளையம் வைத்தனர்.

பிரதம மந்திரி வந்த போது

" கரிகாலன் மாதிரி மற்றொரு தலைவர் கிடைப்பதற்கு நமக்கு இன்னும் நூறு வருஷம் ஆகலாம்." என்றார்.

மக்கள் கூட்டம் தாங்காமல் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.

இரண்டு அரசு பஸ்கள் எந்த காரணமும் இல்லாமல் கொளுத்தப்பட்டன

பல தலைவர்கள் கரிகாலனுக்கு பாரத ரத்னாவும் மெரினாவில் கல்லறையும் வேண்டினார்கள்.

ரேடியோ, மற்றும், டிவி சேனல்களிலும் ஷெனாய் போன்ற

சோகத்துக்காகவே உண்டாக்கப்பட்ட இசைக் கருவிகள் கீழ் ஸ்தாயியில் சோகம் பிழிந்தன.

கரிகாலனின் பழைய கால குடும்ப கருப்பு வெள்ளை மற்றும் பழைய கலர்ப் புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் கழுவப்பட்டு புது கலர் பூசி டி வி சேனல்களில் வகை வகையாக காட்டப்பட்டன.

தன் மனக் கண்ணால் எல்லா பழைய புகைப்படங்களையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலன் திடுக்கிட்டார். "

ஒரு அழகான இளம் பெண்ணுடன் நாற்பத்தைந்து வயது கரிகாலன் கழுத்தில் மாலையும் கையில் பூச் செண்டுமாக சிரித்துக்கொண்டு, ஏதோ ஒரு கிராமப்புற சின்னக் கோவில் உள்ளே நிற்கும் போட்டோ, அந்த புகழ்பெற்ற எதிரி டிவி சேனலில் திரும்பத் திரும்ப காட்டப்பட்டது.

இவ போட்டோ எப்படி இங்க திடீர்னு வந்தது. இத எங்க இருந்து புடிச்சாங்க?"

அரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தபோது அறுபது வயது மதிப்புள்ள ஒரு குண்டுப் பெண் சில தடியர்கள் புடை சூழ போலீஸ்காரர்களை எல்லாம் தள்ளிக் கொண்டு வந்து என் "ராசா போயிட்டியா" என்று கதறிக்கொண்டு கரிகாலன் உடல் வைத்த குளிர் பெட்டி மீது விழுகிறாள். பக்கத்தில் அழுது கொண்டிருந்த கரிகாலன் மனைவி அவளைப் பார்த்து ஷாக் ஆகி நிற்கிறார்.

அந்த அறுபது வயதுப் பெண் தான் டிவி போட்டோவில் மாலையும் கழுத்துமா அவர் பக்கத்தில் நின்ற இளம் பெண் என்பதை புரிந்து கொண்டார் கரிகாலன்.

பகல் கனவில் இருந்து சட் என்று எழுந்தவர் திடுக்கிட்டார். தன்னைத் தானே திட்டிக்கொண்டார். "உனக்கு என்ன பைத்தியமா? இப்ப என்ன இந்த கனவெல்லாம்.? நீயே உன் எல்லா விஷயங்களையும் சொல்லி விடுவாய் போலிருக்கிறது.

"போய் வேலையைப் பார்ப்பாயா ? " என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டே

எழுந்து அமர்ந்தார் கரிகாலன்.

அவருக்கு தன் உயிர் பிரியும் பயம் இல்லாமல் இல்லை. ஆனால்

மரண பயத்தை விட, அந்த ரகசியம் தரும் பயமே கரிகாலனை அதிகம் உலுக்கியது!