
இந்தியா ஜனநாயக நாடு என்று பெருமை பேசிக்கொண்டு இருந்தாலும் அந்த ஜனநாயகம் பலமுறை சோதனைக்குள்ளாகி இருக்கிறது. இப்போது நடந்து வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் ஜனநாயகத்துக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த திராவிட முன்னேற்ற கழகம் நாங்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கத்தில் உட்கார மாட்டோம் எங்களுக்கு வேறு இடம் கொடுங்கள் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறது. அது மட்டுமல்ல காங்கிரஸ் ஆதரித்தால் நாங்கள் எதிர்ப்போம் என்கிறது திமுக. இந்த நிலைப்பாட்டை பொருத்தவரை பாரதிய ஜனதா உள்ளுக்குள் மகிழ்ச்சி அடையும். இதைத்தான் ஜனநாயகம் என்று நாம் பெருமை பேசுகிறோம்.
இது எப்படி இருக்க இன்னொரு பக்கம் திரிணாமுல் கட்சியில் விலகி தனி அணி அமைத்திருக்கும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் வழி தனி வழி என்கிறார்கள். நாங்கள் மம்தா பானர்ஜி பேச்சைக் கேட்க மாட்டோம் என்கிறார்கள். இந்த நிகழ்வும் பாரதிய ஜனதாவுக்கு மகிழ்ச்சி தான்.
மகாராஷ்டிராவிலும் இதே கதை தான் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் ஐக்கியமாகி இருக்கிறார்கள். சென்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அவர்கள் இப்போது ஆளுங்கட்சி வரிசையில்.
இவை எல்லாமே நாட்டு நலன் அக்கறையில் நடந்தது அல்ல. அரசியல் ஆதாயத்திற்காகத்தான் இந்த மாற்றங்கள். இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம் அவர்களுக்கு எதை எப்போது செய்ய வேண்டும் என்பது தெரியும். அதற்கு உதாரணம் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு.

Leave a comment
Upload