
தமிழக அரசின் பல திட்டங்களுக்கு பெயர் மாற்றம். ஆளுங்கட்சியை நினைவூட்டும் விதமாக புது பெயர்.
நியாயவிலைக் கடைகளில் கோதுமை மாவு. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 'அரண் ' தங்கும் இடங்கள், பெண்களுக்கு இலவச ஆடுகள். இளைஞர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு' பயிற்சி அடிப்படையற்ற வணிகவரி, எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரப்பதிவு. இதெல்லாம் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்.
தி.மு.க. ஆட்சியில் விடியல் அரசின் திட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தவை தமிழக வெற்றிக் கழகத்தை நினைவூட்டுவது போல் 'வெற்றி 'திட்டங்கள் என்று பெயர் மாற்றம்.
"தமிழக அரசின் மொத்த பற்றாக்குறை 1.22 லட்சம் கோடி. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடுகையில் மூன்று சதவீதம் தான். ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது.
.அடுத்த ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது.
ஒவ்வொரு ஆண்டும் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் " என்று நிதிநிலை அறிக்கைக்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் நிதித்துறைச் செயலாளர் சித்திக் அவர்கள் உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறார்.
தமிழகத்துக்கு அதிக வருவாய் தரும் இடத்தில் டாஸ்மாக் முதலிடத்தில் உள்ளது.
டாஸ்மாக் மூலம் கடந்த நிதியாண்டில் 51 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. அது நடப்பு நிதி ஆண்டில் 56 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் நிதி துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தவிர கனிம வளம், பத்திரப்பதிவு, வணிகவரித்துறை மூலம் வருவாய் அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது.
டாஸ்மாக் தனியாரிடம் ஒப்படைப்பது பற்றியும் இந்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் பயிர் கடன் தள்ளுபடி போன்றவற்றை அறிமுகம் செய்திருக்கிறது.
பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் மொத்த வருவாய் 3.44 லட்சம் கோடி. மொத்த செலவு 4.67 லட்சம் கோடி. பற்றாக்குறை 55,775 கோடி. நிதி பற்றாக்குறை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 819 கோடியாக இருக்கும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.
இந்த நிதி பற்றாக்குறையை ஒரே ஒரே ஆண்டில் சீர் செய்ய முடியாது. குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் தற்போதைய கடன் 11.25 லட்சம் கோடி. இந்த ஆண்டு கூடுதலாக 1.22 லட்சம் கோடி கடன் அரசு வாங்க இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர்.
அண்ணன் சீர் மணப்பெண்களுக்கு எட்டு கிராம் தங்கம் மற்றும் பட்டுப் புடவை. தாய்மாமன் தங்க மோதிரம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், வெற்றிகர மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம், விலையில்லா கறவை மாடுகள், வெற்றி 150 நாள் வேலை .
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு 2500 உதவித்தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு 4000, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், போன்றவற்றைப் பற்றி இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
மகளிர் உதவித்தொகை சென்ற ஆட்சியில் 28 மாதங்களுக்குப் பிறகுதான் அமுல்படுத்தப்பட்டது. திமுகவும் சொன்னபடி பல வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
சென்ற அரசு நிறைய இலவச திட்டங்களை அறிவித்தது கடன் வாங்கி சமாளித்தது.
அந்தக் கடன்களை ஈடு செய்யக்கூடிய வளங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை. பொதுப்பணித்துறை, டாஸ்மாக், வணிகவரி, பத்திரப்பதிவு போன்றவற்றில் வரவேண்டிய அரசு வருவாய் மடைமாற்றி திமுக கட்சி நிதியாக திருப்பி விட்டது
இப்போது அதை எல்லாம் திருப்பி தமிழக கஜானாவுக்கு வர வைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார் முதல்வர். ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது .என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்,
காத்திருப்போம். காத்திருப்பது புதியதல்லவே !!

Leave a comment
Upload