தொடர்கள்
கதை
சுயத்தொழில் - பா.அய்யாசாமி

20260707164709472.jpeg

என்ன சார், இருபது வருடமா நாம வரவு செலவு பண்றோம், முன்னே எல்லாம் இந்த மாதிரி நீங்க சொன்னதே இல்லை, இப்போ இப்படி பேமெண்ட் இழுக்குதே என வருத்தப்பட்டார் கோபாலிடம் கம்பி, சிமென்ட் மொத்த சப்ளையர் ஒருவர்.
Style builders நிறுவனர் கோபால், நகரில் முக்கிய பிரமுகர், அடுக்குமாடி குடியிருப்பு,
வில்லாக்கள், பள்ளி,கல்லூரிகள் என ஏகப்பட்ட கட்டிடங்களை கடந்த இருபது ஆண்டில் நிமிரச்செயதவர், இவைத் தவிர பேவர்ஸ் பிளாக் எனப்படும் ரெடிமேட் கற்கள் தயாரிப்பவர். இப்போது மண் விலை ஆகாசத்தை தொட்டது என்றால் ஆட்கள் சம்பளம் நிலவைத் தொடும் போல, சகலமும் விலை ஏறியதில் இவருடைய கடன் சுமைகளும் ஏறி விட்டன. சொன்ன ரேட்டுக்கு முடிக்க முடியாமல்,
சொன்ன தேதிக்குள் முடிக்க முடியாமல், இவரை நம்பி வேலையில் உள்ள நாற்பது தொழிலாளர்களுக்கு வேலைக் கூட கொடுக்க முடியாமலும், அவர்களை வெளியே போக விடாமலும், தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் வரவிற்கு மீறிய செலவுகள் என ஐம்பதாயிரம் ரூபாய் கடனுக்கு தவணை தேதி
சொல்லும் நிலையில் இன்று.
அலுவல் முடித்து கோபால் வீடு வந்து சேர்ந்தபோது மனைவி சாரதா, சாப்பாட்டை
வைத்துக்கொண்டே, என்னங்க உங்கள் அக்காவின் இரண்டாவது பெண் திருமணத்திற்கு முறை செய்யனும் இல்லே, நாள் நெருங்கிக்கிட்டே இருக்கு, என்ன செய்யலாம் என்று யோசித்தீர்களா? என்று கேட்டபோது,
அவசியம் செய்யனுமா? என்ற எதிர்கேள்வியை இவரிடமிருந்து சாராதா எதிர்பார்க்கவில்லை,தானே முன்வந்து செய்வார், இன்று என்னவாயிற்று? எனப் புரியாமல், முதல் பெண்ணிற்கு செய்தோம், அதுபோல செய்வதுதானே முறை என்றாள் சாராதா.
அப்போது தொழில் எல்லாம் நல்லபடியா இருந்தது செய்தோம், இப்போ அப்படியில்லை, அதனால் யோசிக்கின்றேன்.
இதெல்லாம் நீங்க சொல்வதை ஏத்துக்கிறமாதிரியா இருக்கு?
என் உண்மை நிலைமையைச் சொல்கிறேன், பார்ப்போம் என்று கையைக் கழுவிவிட்டு கூடத்தில் அமர்ந்தார் கோபால்.
அப்பா! எனக்கு இந்த மொபைலை மாற்றனும், மேலும் ஆறு மாத படிப்பில் ஒன்று சேரனும்,என்று கூறியபடி வந்து அமர்ந்தான், முதுகலை நிர்வாக மேலாண்மை படிக்கும் அவரின் ஒரே மகன் செல்வா,

அப்படியா? கிரேட் அதற்கு எவ்வளவு தொகை வேண்டும் என்று ஆர்வமாக மற்ற
விவரங்களைக் கேட்டறிந்தார்.
இதைக் கவனித்த சாரதா, என்னங்க இது? என்கிட்டே நடைமுறை தொழில் கஷ்டம் எல்லாம் சொல்றீங்க, மகன் கேட்ட உடனே சரி என்று சொல்றீங்க, அவன்கிட்டேயும் அதைப் பற்றி பகிர வேண்டியதுதானே அப்போதானே அவனுக்கும் புரியும், தேவையற்ற செலவுகளையும் குறைப்பான் என்று புலம்பினாள்.
சாரதா, அப்படியில்லை, நான் எத்தனை வருடமா இந்த தொழில் செய்கிறேன்?என கேட்டார்.
எனக்குத் தெரிந்து இருபது வருடங்கள் இருக்கும்.
இருபத்து மூன்று வருடமா நான் சுயத்தொழில் செய்கிறேன்,லாபமும் நிறைய இருந்தது,
இப்போது குறைந்து வருகிறது, இது தொழிலில் சகஜமான ஒன்று அதற்கு நான் எப்போதும் தோல்வி புராணத்தையே பாடிக்கொண்டு இருந்தால் என்னால் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது, மேலும் செல்வா முன்னிலையில் நான் என் தோல்விகளையும், ஏற்பட்ட நட்டங்களையும் பற்றி தினமும் புலம்பினால் அவன் எப்படி சுயத்தொழில் செய்ய தைரியமாக முன் வருவான் என்று நிறுத்துனார்.
இவ்வளவு கஷ்டமும், நட்டமும் வருகிற சுயத்தொழில் செய்யாமல், அவனாவது வேலைக்குப் போகலாமே என்றாள் சாரதா
ஓரிடத்தில் வேலைக்குச் சென்று உண்மையாக உழைப்பது அவனுக்கும் அவனைச்
சார்ந்தவர்களுக்கு மட்டும் வேண்டுமானால் வாழ்க்கையில் சந்தோஷமளிக்கலாம், ஆனால் அது வாழ்க்கையில் அவனுக்கு நிரந்திர நிம்மதியை அளிக்காது,
தரமான சுயத் தொழில் புரிவதன் மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவோர் எண்ணிக்கை மிக அதிகம், ஆகையால் பொறுப்புடனும், சமுதாய அக்கறையுடன் செயல்படவேண்டும்
என்கிற சிந்தனை விளைவது என்பது எத்தனை மகிழ்வான வாழ்க்கைத் தெரியுமா?
சுயத்தொழில் செய்பவர்கள் சுயத்திற்காக மட்டும் உழைப்பதில்லை, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும் சேர்த்து உழைக்கும் உயர் சிந்தனை உடையவர்கள், அதுதான் இன்றைய சமுதாயத் தேவையும்
தொழிலில் தேக்கமிருந்தாலும் அவனுக்கு ஊக்கமளிக்கவே நான் எதையும்
காட்டிக்கொள்வதில்லை எனும் பொழுது மிகச் சரியாகச் சொன்னீர்கள் அப்பா! என்றபடி வந்தான் செல்வா.