தொடர்கள்
ஆன்மீகம்
அம்மனுக்கு ஆடி கூழ் வார்த்து வழிபாடு..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Worshipping the goddess by pouring porridge..!!

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்குரிய மாதம். இம்மாதத்தில் அம்மன் தவம் செய்து, வரம் பெற்ற மாதமாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனை எந்த ரூபத்தில் வழிபாட்டிலும் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடிப்பெருக்கு, ஆடிக் கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி தபசு, மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளும் விஷேச தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. மழைக்காலத் துவக்கமான ஆடியில் நமக்கு நல்ல மழை வேண்டியும் நல்ல ஆரோக்கியம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடுகள் நடத்தி வந்துள்ளனர். ஆடி மாத வழிபாட்டில் வேப்பிலையும், எலுமிச்சையும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவற்றை விட ஆடி மாதத்தில் முக்கிய வழிபாடாகக் கருதப்படுவது கூழ் வார்த்து வழிபடுவது தான்.

Worshipping the goddess by pouring porridge..!!

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம்:
ஆடி மாதம் சிவனின் அருளை வேண்டி கடும் தவம் புரிந்த பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவ பெருமான், "நீ தவம் செய்த இந்த மாதம் உனக்குரிய வழிபாட்டு மாதமாக இருக்கும்" என வரமளித்தார். அதனால் தான் மற்ற மாதங்களை விட ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி அதிகரித்துக் காணப்படும் எனச் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல ஆடி மாதத்தில், உலகை ஆளும் ஈசனே அன்னை உமை அம்மைக்குள் அடக்கம் எனச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில், சிவன்-சக்தி இருவரின் சக்தியைக் கொண்டு அன்னை பராசக்தி உலகைக் காப்பதாக ஐதீகம்.

Worshipping the goddess by pouring porridge..!!

புராணத்தில் ஆடி கூழ் வார்ப்பு:
தவத்தில் சிறந்து விளங்கி ஜமதக்னி முனிவரின் மீது பொறாமை கொண்ட கார்த்தவீரியா சூரனின் மகன்கள் கொன்று விடுகிறார்கள். இதனை அறிந்த தீவிர பதிவிரதையும், ஜமதக்னி முனிவரின் மனைவியுமான ரேணுகா தேவி துக்கம் தாங்காமல், தன் உயிரை விட முடிவு செய்து, தீயை மூட்டி அதில் இறங்கிவிட, அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து, தீயை அணைத்தார். இருந்த போதிலும் சில தீக்காயங்களால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதால், வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமரத்தின் இலைகளைப் பறித்து ஆடையாக அணிந்துள்ளார். ரேணுகாதேவி பசியைப் போக்க அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்க, அங்குள்ள கிராம மக்கள் அவளுக்குப் பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாகத் தந்துள்ளனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப்பிட்டார். அப்போது சிவபெருமான் ரேணுகாதேவியின் முன் தோன்றி, உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகவும். உண்ட கூழ் சிறந்த உணவாகவும். இளநீர் சிறந்த நீராகாரமாகவும் என வரம் அளித்தார். இதனால் தான் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் வார்ப்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Worshipping the goddess by pouring porridge..!!

ஆடி கூழும், அறிவியல் காரணமும்:
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் வார்ப்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. ஒரு வருடத்தின் மாதங்கள் இரு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயனம் எனவும், தை முதல் ஆனி வரை உத்தராயணம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயணம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இருப்பதாகவும் ஜோதிட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துப் பண்டிகைகளும், விரதங்களும் தொடர்ந்து வருகின்றன.

Worshipping the goddess by pouring porridge..!!

ஆடி மாதம் தொடக்கத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கிறது. அப்போது வெளிப்படும்.சூரியக் கதிர்கள் விவசாயத்துக்கு நன்மை தரும். அதனால் தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்றார்கள். சூரியனிடமிருந்து வெளிப்படும் சூட்சும சக்திகள் பிராணவாயுவை அதிகரிக்கும். சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் இக்காலத்தில் சந்திரன் சூரியனைக் குளிர்விக்கிறது. இதனால் பகல் பொழுது குறைந்தும் இரவு நீண்டும் இருக்கும். சந்திரனின் குளிர்ச்சியால் பூமியும் குளிர்ந்து காற்றினாலும், மழையினாலும் ஈரப்பசை இருக்கும்.

Worshipping the goddess by pouring porridge..!!

இதனால் கிருமிகளின் தாக்கம் அதிகமாகும். குறிப்பாக அம்மை நோய் தாக்கக்கூடிய காலம். அம்மை நோயைத் தடுக்க அதிக எதிர்ப்புச் சக்தி தேவை. அதனைக் கேழ்வரகு கூழ் ஈடு செய்கிறது.
நம் முன்னோர் அறிவியல் ஆற்றல் மட்டுமல்லாமல், அதை ஆன்மிகம் வாயிலாக மக்களுக்குக் கொண்டு செல்லும் பக்குவத்தையும் அறிந்திருந்தனர். அதனால் ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் வார்க்கும் விழா மூலமாக அறிவியலையும் கலந்து வைத்துள்ளனர். இதன் மூலமாக மக்கள் அனைவரையும் கூழ் குடிக்க வைக்க, அம்மனுக்குக் கூழ் வார்த்து, பிரசாதமாகக் கூழை கொடுத்து வந்தனர். இந்த வழக்கம்தான் இன்றைக்கும் தொடர்கிறது.

Worshipping the goddess by pouring porridge..!!

கூழ் வார்த்து வழிபாடு :
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் பால் குடம் எடுப்பது, கூழ் வார்ப்பது, அலகு குத்துதல், திருவிழா எடுப்பது, அக்னிக் குண்டம் இறங்குவது போன்ற பலவிதமான வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும். ஆடி மாதத்தில் கோயில்களில் மட்டுமின்றி, வீடுகளிலும் கூட கூழ் வார்த்தல் வழக்கம் உண்டு. கூழ் அம்மனுக்கு விருப்பமான உணவாகவும் சொல்லப்படுகிறது. இது கலாச்சார பாரம்பரிய வழக்கமாக மாறியது. அதன் பொருட்டு அம்மன் கோயில்களில் ஆடி மாதங்களில் கூழ் வார்த்து, இனி வரக்கூடிய காலங்களில் மழையானது நிறைவாகக் கிடைத்து விவசாயம் செழிப்படையவும் எல்லோரும் சுபிட்சமாக வாழவும் பிரார்த்தனை செய்து கொண்டு கூழ் வார்த்தல் வழிபாடு செய்கின்றனர்.

Worshipping the goddess by pouring porridge..!!

நாமும் ஆடி மாத த்தில் அம்மனை வழிபட்டு அம்மனின் அருள் பெறுவோம்.

Worshipping the goddess by pouring porridge..!!