தொடர்கள்
தொடர்கள்
அம்பை-4-கி. ரமணி

அத்தியாயம் 4: சிகண்டி

20260707180457247.jpeg

​அம்பை காட்டுக்குள் சென்றுவிட்டாள். மரவுரி தரித்தாள்; கையில் வில்லும் வாளும் கொண்டு காட்டு மிருகங்களைச் சமாளித்தாள். தன் உணவு, இருப்பிடம் ஆகியவற்றிற்கு வழி தேடிக்கொண்டாள்.

நாட்டு மக்களை முற்றிலும் தவிர்த்தாள்.
​எப்படியாவது பீஷ்மரை ஜெயிக்க வேண்டும்; அது எப்படி நடந்தாலும் பரவாயில்லை. அவரைப் பழிவாங்க வேண்டும், இல்லையென்றால் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும்—இதுவே அவளுடைய வாழ்க்கையின் ஒரே நோக்கமானது.

​காட்டுக்குள் அவள் சந்திக்கும் முனிவர்களிடம் எல்லாம் கேட்பது ஒரே ஒரு விஷயம்தான்: எப்படியாவது அவள் பீஷ்மரை ஜெயிக்க அவர்கள் உதவ வேண்டும்.

நிறைய முனிவர்களைப் பார்த்தாள்; நிறைய வருடங்களும் ஓடின. ஆனால், ஒருவரும் அம்பைக்கு உதவத் தயாராக இல்லை. காரணம், பீஷ்மர் வெல்ல முடியாதவர், அவருடன் பகை கொள்வது யாருக்கும் நல்லதல்ல என்பதே.

​பல வருடங்கள் கழிந்தன. அம்பை தன் இளமையைத் தொலைத்திருந்தாள். காட்டு மரங்கள், செடி கொடிகளுடன் வாழ்ந்து அவளுமே ஒரு காட்டு முள்செடி போல் ஆகிவிட்டாள்.

​நீண்ட வருடங்களுக்குப் பிறகு, அவளுக்குப் பரசுராமரின் சீடரான அகிருதவிருணர் மூலமாகப் பரசுராமரின் சந்திப்பு நிகழ்கிறது. பரசுராமர் மகா பெரிய வீரர்; மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர்.

​பரசுராமரிடம், "பீஷ்மரைத் தனக்கு அடிபணிய வைத்துத் திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் அவரைக் கொன்றுவிட வேண்டும்" என்று அம்பை வேண்டுகோள் விடுக்கிறாள். பரசுராமர் பீஷ்மருக்கு முன்னாள் குருவாக இருந்தவர்.

​தன் சிஷ்யனிடம் சென்ற குரு, "நீ அம்பையை மணக்க வேண்டும்" என்கிறார். பீஷ்மரோ தன் சபதத்தைக் காரணம் காட்டி மறுக்கிறார். இதனால் கோபமுற்ற பரசுராமர், பீஷ்மரைப் போருக்கு அழைக்கிறார்.

குருக்ஷேத்திரத்தில் 23 நாட்கள் பீஷ்மருக்கும் பரசுராமருக்கும் இடையே கடுமையான போர் நடக்கிறது. ஆனால், யாருக்கும் வெற்றியோ தோல்வியோ கிடைக்கவில்லை; ஒருவரை ஒருவர் ஜெயிக்க முடியவில்லை.

​இறுதியில், தேவர்கள் வானுலகில் இருந்து வந்து சண்டையை நிறுத்தி வைக்கிறார்கள்.

பரசுராமர்,அம்பையிடம், அவள் விஷயத்தில் தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது என்று மிகுந்த மனவருத்தத்துடன் கூறிவிடுகிறார்.

​ஆனால், அம்பை விடுவதாய் இல்லை. "பரசுராமரே! உம்மால் இந்த காரியம் முடியவில்லை என்றால் பரவாயில்லை, வருந்த வேண்டாம். நான் அந்தப் பரமேஸ்வரனை நோக்கித் தவம் இருந்து நீதி கேட்கிறேன். நான் ஓயமாட்டேன்!" என்கிறாள்.

​பல வருடங்கள் பரமசிவனை நோக்கித் தவம் இருந்தாள். முதுமையின் எல்லைக்குள் அவள் எட்டிப் பார்த்தபோது, பரமசிவன் அவளுக்குக் காட்சியளித்து வேண்டிய வரத்தை அளிக்கிறார். "ஆம்! நீ பீஷ்மரைக் கொல்வாய்... உன் அடுத்த ஜென்மத்தில்!" என்று வரமளித்து மறைகிறார் பரமேஸ்வரன்.

​அம்பை யோசிக்கிறாள். பரமேஸ்வரன் எனக்குப் பீஷ்மரைக் கொல்லும் வரத்தை அடுத்த ஜென்மத்தில் அளித்திருக்கிறார். ஆனால், அடுத்த ஜென்மம் வரைக்கும் யாரால் காத்திருக்க முடியும்? இந்தத் துயர நெருப்பு நம் உடலில் இருந்து நம்மை எரிப்பதைவிட, நம்மையே நாம் தீக்கிரையாக்கிக் கொண்டுவிடலாம்" என்று எண்ணிய அம்பை, பெரிய தீ வளர்த்து அதற்குள் புகுந்து தன் உயிரை விடுகிறாள்—சீக்கிரமாக அடுத்த ஜென்மம் எடுத்துப் பீஷ்மனைப் பழிவாங்க வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன்!

​அடுத்த பிறவியில், துருபத மன்னனின் அரண்மனையில் அவனுக்கு மகளாகப் பிறக்கிறாள் அம்பை. ஆம்....மீண்டும் பெண்ணாகத்தான் பிறக்கிறாள். ஆனால் துருபதன் வேண்டியதோ, தன் அரியணை வாரிசாக ஒரு ஆண் பிள்ளை. (இந்தச் சமயத்தில் துருபதனுக்கு வேறு பிள்ளைகள் கிடையாது. பிற்காலத்தில்தான் அவன் யாகத்தின் மூலம் திரௌபதியையும் திருஷ்டத்யும்னனையும் மக்களாக அடைகிறான்).
​சிகண்டி பிறப்பதற்கு முன்பே துருபதனுக்கு ஒரு அசரீரி (தெய்வ வாக்கு) கேட்டிருந்தது: "உனக்கு ஒரு மகள் பிறப்பாள், ஆனால் அவள் பின்னாளில் ஆணாக மாறுவாள்."

​துருபதனும் அவனது மனைவியும் இந்த அசரீரியை அப்படியே நம்பினார்கள். இதனால், அந்த குழந்தையை ஆண் குழந்தையாகவே (சிகண்டி) உலகிற்கு அறிவித்து, போர்க்கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து ஒரு வீரனாகவே வளர்க்கிறான் துருபதன்.

​குழந்தை வளர்ந்து திருமண வயது வரும் வரை அவள் ஆணாக மாறவில்லை. என்றாலும், "திருமணம் நடக்கும்போதோ அல்லது அதற்குப் பின்போ தெய்வ வாக்கு பலிக்கும், அவள் ஆணாக மாறிவிடுவாள்" என்று பெற்றோர் தீவிரமாகக் காத்திருந்தார்கள்.

இதன் விளைவாக, தங்கள் பெண்ணான சிகண்டினிக்கு (சிகண்டிக்கு) ஒரு பெண் பார்த்துத் திருமணம் நிச்சயம் செய்யும் அபத்தத்தை நிறைவேற்றினார்கள். அந்தப் பெண் மற்றொரு நாட்டு அரசகுமாரி வேறு!

​சிகண்டியாக மறுபிறவி எடுத்த அம்பை ஏன் இதற்கு உடன்பட்டாள்?

காரணம், அவளுக்கு அப்போது தன் முன்பிறவியின் நினைவுகள் தெரியாது. மேலும், "திருமணம் முடிந்ததும் நீ ஆணாகிவிடுவாய்" என்று பெற்றோர் சொன்ன வாக்கில் அவளுக்கு இருந்த நம்பிக்கையும், பெற்றோர் சொல்லுக்குக் கீழ்ப்படிவதே கடமை என்ற பண்பும்தான் இதற்குக் காரணம்.

​கல்யாணம் முடிந்தது. ஆனால், முதலிரவு முடிந்த அன்றே அந்த ரகசியம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. நினைத்தது போல் சிகண்டி ஆணாக மாறவில்லை! அவளை மணந்த இளவரசியும் அவளது பெற்றோரும் கடும் கோபம்கொண்டு துருபதனை வசைபாடினர். மேலும், துருபதனின் பாஞ்சால தேசத்தின் மீது போர்தொடுக்க ஆயத்தமானார்கள்.

​இதையெல்லாம் எதிர்பார்க்காத சிகண்டி, அவமானம் தாங்காமல் நாடு துறந்து காடு சென்றாள். முதலில் அவள் தற்கொலைக்குத்தான் முயன்றாள். "என்னால் என் பெற்றோருக்கு அவமானம், ஒரு பெண்ணின் வாழ்வு பாழ், என் நாட்டுக்கே அழிவு... நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?" என்று துயரத்துடன் காட்டின் அடர்ந்த பகுதிக்குச் சென்று, பட்டினி கிடந்து சாக முடிவெடுத்தாள்.

​அவள் சாகக் கிடந்த அந்த வனத்தின் அதிபதியான ‘ஸ்தூணாகர்ணன்’ என்ற யக்ஷன் (கந்தர்வன்) அவளது அழுகுரல் கேட்டு வந்தான். அவளது தூய்மையான குற்ற உணர்ச்சியைப் பார்த்து இரக்கப்பட்டு, தற்காலிகமாகத் தன் ஆண்மையை அவளுக்குக் கொடுத்து அவளைக் காப்பாற்றுகிறான். சிகண்டி அந்த யக்ஷனுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறாள்:

​"நான் ஆணாக ஊர் திரும்பிச் சென்றால் பாஞ்சால நாட்டுக்கு எதிராக நடக்கும் போர் நின்றுவிடும்; அமைதி திரும்பும். நான் மீண்டும் இங்கு வந்து என் ஆண்மையை உனக்கு அளித்து, பழையபடி பெண்ணாக மாறிவிடுகிறேன்" என்கிறாள் சிகண்டி. யக்ஷனும் அதற்குச் சம்மதிக்கிறான்.

​சிகண்டி ஆணாக ஊர் திரும்பி, பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் ஆச்சரியம் அளிக்கிறான். பாஞ்சாலத்தை எதிர்த்த போர் நிற்கிறது. நிலைமை சரியானதும், சிகண்டி சொன்னபடி மீண்டும் காட்டுக்குச் சென்று யக்ஷனைத் தேடுகிறான். ஆனால் அதற்குள், தன் ஆண்மையை ஒரு பெண்ணுக்குத் தந்ததற்காக யக்ஷன் அவனுடைய தலைவனான குபேரனால் சபிக்கப்பட்டிருந்தான். அந்தச் சாபத்தின்படி, தற்காலிகமாகப் பெண்ணாக மாறிய யக்ஷன், சிகண்டி உயிரோடு இருக்கும் வரை மீண்டும் ஆணாக மாற முடியாது என்று விதிக்கப்பட்டது.
​இது சிகண்டிக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிர்ஷ்டம்! ஆனால், சிவபெருமானால் அம்பைக்கு அளிக்கப்பட்ட வரமும் இதுதானே? குபேரனின் சாபத்தால் சிகண்டிக்கு முழுமையான ஆண்மை ஏற்பட்டவுடன், அவனுக்கு அவனுடைய பழைய ஜென்ம ஞாபகமும் முழுமையாகத் திரும்பியது!
​"நான் தான் அம்பை!" என உணர்ந்தான். சிவபெருமானின் அருளால் ஆணாகி, நம் எதிரியான பீஷ்மரை அழிக்கப் போகிறோம் என்பதை அறிந்துகொண்டான். அம்பை என்ற தன் முந்தைய ஜென்மக் கதையைச் சிகண்டி தன் தகப்பனிடம் சொல்ல, துருபதனும் அவனுக்கு மேலும் பல வில்வித்தை மற்றும் போர் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்து மாவீரனாக்கினான்.
​இப்போது இருப்பது சிகண்டி என்ற துருபதனின் பிள்ளை மட்டுமல்ல; காசி நாட்டு இளவரசியும், வீராங்கனையுமான, பீஷ்மரை பழிவாங்கத் துடிக்கும் அம்பையின் ஆன்மாவால் இயக்கப்படும் ஒரு மகா வீரன்!

​அம்பை இன்னும் காத்துக்கொண்டே இருந்தாள்; காலமும் பறந்துகொண்டே இருந்தது. "எப்போதுதான் என் பழியைத் தீர்த்துக்கொள்வேன்?" என்ற எண்ணத்துடனேயே சிகண்டி வாழ்ந்து வந்தான்.
ஆனால் இந்த ஜென்மத்து உலகியல் கடமையை பரிபூரணமாக செய்ய தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தான் சிகண்டி. மனைவியின் நாட்டுடன் பாஞ்சாலத்துக்கு இருந்த பகைமை முழுமையாக தீர்ந்தது.


​இதற்கிடையில் சிகண்டியின் தந்தை துருபதன், திரௌபதியையும் திருஷ்டத்யும்னனையும் வாரிசுகளாக அடைந்தான். திரௌபதி பாண்டவர்களை மணக்க, பாண்டவர்கள் துரியோதனனுடன் சூதாடி நாட்டை இழக்க, திரௌபதி அவமானப்பட... எனப் பல நிகழ்வுகள் கடந்து, இறுதியில் மகாபாரதப் போர் மூண்டது.

​இதுதான் சிகண்டியின் தருணம்! சிகண்டி,.....தர்மர், கிருஷ்ணர், அர்ஜுனன்.... ஆகியோரிடம் சென்று தன் சபதத்தைப் பற்றிக் கூற, அது அவர்களுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது.

, பீஷ்மரை வீழ்த்த சிகண்டியை வைத்துக் கிருஷ்ணர் ஒரு வியூகம் வகுத்தார்.

​பாரதப் போரில் முதல் பத்து நாட்கள் பீஷ்மர்தான் கௌரவப் படையின் நாயகர். யுத்தத்திற்கு முன்னால் பீஷ்மர் துரியோதனனிடம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறியிருந்தார்:
​"துரியோதனா! பாண்டவர் பக்கம் துருபதனின் மகனான மாவீரன் சிகண்டி இருக்கிறான். ஆனால், அவன் முந்தைய பிறவியில் அம்பை என்ற பெண்; என்னுடைய ஜென்ம விரோதி. என்னை அழிக்கச் சபதம் எடுத்தவள். ஆனால் ஒன்று... என்னை எதிர்க்கும் சிகண்டியை நான் என்றும் ஒரு பெண்ணாகவே கருதுவேன். சிகண்டியின் மீது எக்காரணம் கொண்டும் நான் அம்பு செலுத்த மாட்டேன். இது என் கொள்கை, இதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்!" என்றார்.

​முதல் ஒன்பது நாள் போரில் பீஷ்மர் காட்டுத்தீ போல் போர்க்களம் முழுவதும் பரவி, எதிரிப் படைகளை நாசம் செய்தார். பீஷ்மரை வீழ்த்த வழியே இல்லையோ என்று பாண்டவர்கள் கவலைப்பட்ட போது, கிருஷ்ணன் அதற்கான யுக்தியைக் கூறினார்.

​பத்தாம் நாள் போரின்போது, பரந்தாமன் சிகண்டியை அர்ஜுனனின் தேரில் ஏற்றி, அர்ஜுனனுக்கு முன்னால் நின்று பீஷ்மருடன் போர் தொடுக்கச் சொல்கிறார்.

சிகண்டி பீஷ்மரின் மீது அம்பு மழை பொழிகிறான். முந்தைய ஜென்மத்துப் பகையின் உக்கிரம் அவன் தொடுத்த ஒவ்வொரு அம்பிலும் இருந்தது.

​அம்பையின் (சிகண்டியின்) அம்புகளைத் தடுக்காமல் உதாசீனம் செய்து, அவளுக்குப் பின்னால் இருந்து வந்த அர்ஜுனனின் அம்புகளை மட்டுமே தன் மார்பில் தாங்கிக் கொள்கிறார் பீஷ்மர்.

பத்தாம் நாள் மாலை, தன் மீது பாய்ந்த நூற்றுக்கணக்கான அம்புகளுடன், ஒரு பெரிய கோபுரம் தரையில் சாய்வது போல் சாய்ந்து, அம்புப் படுக்கையில் ஐக்கியமாகிறார் பிதாமகர்.

​சிகண்டியாக மாறிய அம்பை, பல வருடங்கள், ஜென்மங்கள் தாண்டித் தன் சபதத்தை நிறைவேற்றுகிறாள்.

* * * * * * *

​கதையைச் சொல்லி முடித்தார் பிதாமகர்.

​"விதுரனே! என் மனதில் இருந்த எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிட்டேன். பாண்டவர்களுக்கு நான் செய்த துரோகத்திற்குப் பலனாகக் கௌரவர்கள் தோற்று, பாண்டவர்கள் ஜெயித்துவிட்டார்கள். அம்பைக்கு நான் செய்த அநீதிக்குப் பரிகாரமாக நான் வீழ்த்தப்பட்டு இங்கே அம்புப் படுக்கையில் கிடக்கிறேன்.

ரொம்ப வருஷமாக நானும் அம்பையும் நடத்தி வந்த மனப்போர் என்னைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது. இப்போது பாண்டவர்களுக்கும் வெற்றி கிடைத்துவிட்டது."

​"மகனே! நீ எனக்கு ஒரு உதவி மட்டும் செய். எப்படியாவது அந்தச் சிகண்டியை... அதாவது அந்த அம்பையை... அவளை என்னிடம் கூட்டிக்கொண்டு வா. நாளையே இதைச் செய்தாலும் நான் உனக்கு நன்றி உள்ளவனாய் இருப்பேன். நான் அவளிடம் என் மன்னிப்பைக் கேட்க வேண்டும். அவள் என்னை மன்னித்தாலும் சரி, மன்னிக்காவிட்டாலும் சரி, அதைப் பற்றிக் கவலையில்லை. இதைச் செய்வாயா விதுரனே?"
என்று விதுரனின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டார் பிதாமகர்.
​தன் கைகளை மெதுவாக விடுவித்துக்கொண்டு, பீஷ்மரின் கண்ணீரைத் துடைத்துக் கூறினார் விதுரர்:
​"பெரியப்பா! நீங்கள் இந்த உலகிற்கே பெரிய கர்மயோகி. எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் தன் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்.
அம்பையின் பார்வையில் இருந்து பார்த்தால், அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அவள் போராடிய விதம் மிகவும் நியாயமானது.

வேடிக்கை என்னவென்றால், உங்கள் பார்வையும் அம்பையின் பார்வையும் முற்றிலும் வேறானவை."

​"ஒருவேளை இவை அனைத்தும் நடந்தது, இந்த பாரதப் போர் நடப்பதற்காகத்தானோ என்னவோ?யாருக்குத் தெரியும்? பெரியப்பா! நீங்கள் கூறியது போலவே நான் சிகண்டியை அழைத்து வருகிறேன்... கூடிய விரைவில். அதுவரை தாங்கள் அமைதியுடன் இருங்கள்."
​என்று கைகூப்பி வணங்கிய விதுரர், குருக்ஷேத்திரக் களத்தின் பனிப்படலத்தில் கரைந்து மறைந்து போனார்.

(தொடரும் )