தொடர்கள்
நேயம்
கைவிடப்படும் வெளிநாட்டு நாய் இனங்கள்-ப ஒப்பிலி 

20260707154947611.jpg

பக், கிரேட் டேன் உள்ளிட்ட வெளிநாட்டு இன நாய்களை வளர்த்து பின்னர் தெருக்களிலும் விலங்கு காப்பகங்களின் முன்பும் கைவிடும் சம்பவங்கள் சென்னை முழுவதும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 10 நாட்களிலேயே 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இன நாய்கள் கைவிடப்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

முழு கொள்ளளவில் இயங்கி வரும் விலங்கு காப்பகங்களுக்கு இது கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

20260707155549600.jpg

செல்லப்பிராணிகளை கைவிடுபவர்களுக்கு தண்டனை விதிக்கும் சட்ட ஏற்பாடுகள் இல்லாததால், பெருநகர சென்னை மாநகராட்சியின் மைக்ரோசிப் திட்டமும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பெசன்ட் மெமோரியல் அனிமல் டிஸ்பென்சரியைச் சேர்ந்த ஷ்ரவண் கிருஷ்ணன் கூறுகையில், வெளிநாட்டு இன நாய்களுக்கு இந்திய இன நாய்களை விட அதிக பராமரிப்பும் மருத்துவச் செலவும் தேவைப்படுகிறது.

இதனால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் காப்பகங்கள் அவற்றைப் பராமரிக்க பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன என்றார்.

கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை மீள்படுத்த அரசின் சார்பில் தனிப்பட்ட மறுவாழ்வு மையங்கள் இல்லாததும் நிலையை மோசமாக்குவதாக அவர் கூறினார்.

20260707155622275.jpg

காப்பகங்களுடன் இணைந்து பணியாற்றும் கீர்த்தனா கூறுகையில், அனைத்து இன நாய்களும் கைவிடப்படுகின்றன.

குறிப்பாக ஒரு டோபர்மேன் நாய் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் புதிய உரிமையாளரை ஏற்க மறுத்தது. அதனை மறுவாழ்வு அளிக்க முடியாததால் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பராமரிக்கப்படுகிறது என்றார்.

செல்லப்பிராணிகளுக்கு கட்டாய மைக்ரோசிப் பொருத்தினால் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்று பலர் நம்பியிருந்தாலும், தண்டனை அமலாக்கம் இல்லாததால் அதன் பயன் குறைந்துவிட்டதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தண்டனை இல்லை என்ற எண்ணத்தால் உரிமையாளர்கள் இன்னும் துணிச்சலாக நாய்களை கைவிடுகின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

20260707155646119.jpg

ஆவடி மாநகராட்சியுடன் இணைந்து தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் “ஸ்மைல்ஸ் ஆஃப் ஸ்ட்ரேஸ்” அமைப்பின் நிறுவனர் இ மார்டினா, வெளிநாட்டு இன நாய்களின் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கத்தைத் தடுக்க கடுமையான கொள்கைகள் தேவை என்றும், இனப்பெருக்கத்திற்கே தடை விதிப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி கமால் ஹுசைன் கூறுகையில், ஆகஸ்ட் மாத மன்றக் கூட்டத்தில் வெளிநாட்டு இன செல்லப்பிராணிகளை கைவிடுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் பிரிவு சேர்க்கப்பட உள்ளது என்றார்.

மாநில விலங்கு நல வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சொக்கலிங்கம், தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் தொடர்பான புதிய கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் செல்லப்பிராணிகளை கைவிடுபவர்களுக்கு தண்டனை வழங்கும் விதிமுறைகளும் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.