17) ஹ்ரீங்கார பீஜா

ஹ்ரீங்கார ரூபா-ஹ்ரீங்கார நிலையா ஹ்ரீங்பத ப்ரியா I
ஹ்ரீங்காரபீஜா ஹ்ரீங்காரமந்த்ரா ஹ்ரீங்கார லக்ஷணா II
லலிதா த்ரிசதீ முழுவதும், அம்பாளின் மந்திர ஸ்வரூபத்தையும், அவளின் அழகையும் பற்றியே விவரிக்கிறது. அம்பிகை வழிபாட்டில் ஈடுபட்டவர்களுக்கும் ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரம் மிக முக்கியமானது. அந்த மந்திரமே ஊமையைப் பேச வைத்தது.
ஊமையாய்ப் பிறந்த சத்யதர்மன் ஹ்ரீம், ஹ்ரீம் என்று அர்த்தம் தெரியாமல்
உளறியதைக் கேட்டே அம்பாள் அவனுக்குப் பேசும் சக்தியையும், அளவில்லாத ஞானம்,அறிவு, தெளிவைத் தருகிறாள்.
ஹ்ரீம் என்பது அம்பிகையின் பஞ்ச தசாக்க்ஷரியில் ஐந்தாவது எழுத்து. அதன்
வடிவமாக இருக்கிறாள். இந்தப் பிரபஞ்சமே அவளின் இந்த மந்திர சப்தங்களால்
நிறைந்திருக்கிறது. பிரபஞ்சமே அம்பிகைதானே!
அவளின் இருப்பிடமாகவும் அதே இருக்கிறது. அம்பிகைக்கு ஹ்ரீம் என்னும் பதத்தில்மிகவும் விருப்பம். இதை உச்சரிப்பவர்களுக்கு மகிழ்ந்து சகல சௌபாக்கியங்களையும்அளிப்பாள்.
ஒரு சின்ன விதையில் மிகப்பெரிய மரம் உண்டாவது போல் இந்த ஹ்ரீம் என்ற
பீஜாக்ஷரமே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது. இந்த எழுத்து, மாயையும், சுத்த சைதன்யத்தையும் குறிக்கிறது. அவளின் மந்திரமாகவும் இதே விளங்குகிறது. ஹ்ரீங்காரீ,ஹ்ரீமதி என்கிறது ஸ்ரீலலிதா.
அம்பிகை சகல லக்ஷணங்களும் அமைந்தவள். அவளில் இருந்தே சகல ஜீவராசிகளும் உண்டாகின்றன. அனைத்து உயிர்களையும் தனக்குள் அடக்கியவள் அம்பிகை. எனவே ஹ்ரீம் என்ற மந்திரம் அவளின் ஸ்வரூபத்தை விளக்குகிறது.
இதில் ஹ என்பது சிவ தத்துவம். ர அக்னியையும், சக்தி தத்துவத்தையும் குறிக்கிறது. ஈ ஸ்திதிக்கான விஷ்ணு தத்துவம். படைத்தல், காத்தல், அழித்தல் என்று முத்தொழில்களையும் தனக்குள் அடக்கியவள் அம்பிகை. எனவே அவள்தான் பரம்பொருள் என்றும் உணரப்படுகிறது.
பரம்பொருள் நீயென்று உணர்ந்தேன் தாயே.
பதம் தந்து காத்திடுவாய் என்றுதான் அம்பிகையைக் கெஞ்சுகிறார் அபிராமி பட்டர்.
அறுபத்து நான்கு கலைகளும் அம்பாளின் நிலைகளே. அந்த கலைகள் எல்லாமே
அம்பாளின் உருவமாக இருக்கின்றன. சதுஷ் சஷ்டி கலாராத்யா, சதுஷ் சஷ்டி கலாமயி என்பது அம்பாளின் நாமங்களாக சொல்லப் படுகிறது. எனவே எந்த ஒரு கலைகளையும் நாம் தனித்து, பிரித்துப் பார்க்க முடியாது.
ஸ்ரீ வித்யா உபாசகர்கள் குரு பக்தியுடன் இதனை சாதனை செய்வதன் மூலம் ஆத்ம தத்துவத்தையும் தெளிவாக அறிய வேண்டும். அம்பிகையின் சூத்திரங்கள் பரசுராமரால் செய்யப்பட்டது. ஸ்ரீ வித்யா உபாசனைக்கு இதுவே ஆதாரமாக இருக்கிறது. அம்பாளின் உபாசனையையும் மகிமையையும் தெளிவாக ஸ்ரீ வியாச பெருமாள் தான் எழுதிய புராணங்களில் காட்டியுள்ளார்.
18 புராணங்களை எழுதினாலும் அவருக்குள் ஒரு திருப்தி என்பது இல்லாமல் இருந்தது.
அதன் பிறகு நாரதரின் உபதேசத்தால் ஸ்ரீ வரிசையை லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் என்ற ஒரு மிகப்பெரும் நாமங்களை எழுதினர்.
லலிதையே பூரணமானவள் என்று பிரம்மாண்ட புராணத்தில் விளக்கினார் இதில்
தேவியின் லீலைகள் மிக விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா உபாசகர்களில் மிகச்சிறந்தவரும் முதன்மையானவர் ஸ்ரீ பரமேஸ்வரனே. சக்தியும் சிவனும் சேர்ந்துதான் லலிதா திரிசதியையும் உண்டாக்குகிறார்கள்.
வேத மந்திரங்கள் பெண்களால் தனியாக அனுஷ்டிக்க முடியாததாக இருந்தது. ஆனால் ஸ்ரீவித்யா உபாசனை அனைவராலும் எப்பொழுதும் கையாளக் கூடியதாக இருந்தது.
தன்னைத் துதிக்கும் அடியவர்களின் அன்பில் மகிழ்ந்து அவர்களுக்கு வேண்டியதை தருபவள் ஸ்ரீலலிதா. அவளை ஸ்தோத்திர பிரியா என்று கூறுகிறது நாமம். ஸ்தோத்திரம் என்பதற்கு ஆறு வகையான பொருள்களைக் கூறி இருக்கிறார் ஸ்ரீபாஸ்கரராயர்.
நமஸ்காரம், ஆசீர்வாதம், சித்தாந்தத்தை சொல்வது, பராக்கிரமத்தை சொல்வது, விபூதியை கூறுவது, பிரார்த்தனை என்பன. இவை அனைத்தையும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தையும் லலிதா திரிசதியையும் படிப்பதால் பூர்த்தியாக.
பூமியில் வந்து பிறந்த ஜீவன்கள் சுகத்தையே விரும்புகின்றன. இதுவே புருஷார்த்தம் எனப்படும். இந்த புருஷார்த்தங்களை பூமியில் வாழக்கூடிய வரை நமக்கு அளித்து, பின்பு அழியாத மோட்சம் எனப்படும் சாஸ்வதமான அழிவில்லாத சுகத்தை கொடுக்கக் கூடியவள் ஸ்ரீ அம்பிகை.
அவளை நாமங்கள் சொல்லி வழிபடுவதன் மூலம் சகல விதமான சுகங்களையும் நம்மால் அடைய முடியும்.
தொடர்கள்
தொடர்கள்

Leave a comment
Upload