
ஹ்ரீங்கார வாச்யா ஹ்ரீங்கார
பூஜ்யா ஹ்ரீங்கார பீடிகா
ஹ்ரீங்கார வேத்யா ஹ்ரீங்கார
சிந்த்யா ஹ்ரீம் ஹ்ரீம் சரீரிணீ.
அம்பாளின் ரூபங்கள் எண்ணற்றவை. பஹீரூபா என்றே ஒரு நாமம் கூறுகிறது. பிரபஞ்ச பரிபாலனம் செய்யும் போது அந்தந்த காரியங்களுக்கு வெவ்வேறு ரூபம் எடுக்கிறாள் அம்பிகை. அவளே மும்மூர்த்திகளின் வடிவம். பல ஜென்மங்கள் புண்ணியம் செய்தவர்களே இவளைப் பூஜிக்க முடியும். இதையே ஆதிசங்கரர்
“ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய ப்ரபவதி”- என்கிறார்.
இதையே அபிராமி பட்டர்
“புண்ணியம் ஏது அம்மே புவி எழையும் பூத்தவளே” என்று பூரிக்கிறார்.
ஹ்ரீங்கார வாச்யா என்கிறது நாமம்.
இந்த ஹ்ரீம் என்ற ஓங்காரத்தின் மூலம் எல்லா சப்தங்களையும் அபிவிருத்தி செய்பவள்
அம்பிகை. அந்த நாமத்தாலேயே பூஜிக்கப்படுபவள்.
ஹீரீம் நமஹ என்று ஸ்ரீ சக்கரத்தில் பூஜை செய்வது ஜெகன் மாதாவுக்குப் பிடித்தமானது.
இந்த ஹ்ரீங்காரத்திற்கு ஆதாரமாக அன்னையே இருக்கின்றாள்.
குருமுகமாக உபதேசிக்கப்பட்ட இந்த நாமம் அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஹ்ரீங்காரத்தினால் அவள் ஆனந்தம் அடைகிறாள். இந்த நாமத்தின் மூலமே நாம் அவளை
சிந்திப்பது நல்லது என்கிறார்கள்.
அவளை நம்மிடம் இருந்து மறைக்கிறது அஞ்ஞானம் என்னும் இருள். ஹ்ரீங்கார வடிவ
மண்டலம் அந்த அஞ்ஞானத்தை விலக்கி, தேவியின் ஸ்ரூபத்தை நமக்குக் காட்டுகிறது.
ஓங்காரத்தைப் போல் பிரணவம் மந்திரம் என்றே கருதப்படுகிறது.
நம்முடைய அனைத்து பிராணங்களையும் பரமாத்மாவிடம் சென்று வணங்கச் செய்வது
பிரணவம் என்று கூறப்படுகிறது. அந்தப் ப்ரணவாமாக இருப்பவள் அம்பிகை. எனவே
அம்பிகையை ஹ்ரீம் என்று ஒரு நாமம் சொல்லி வழிபட்டாலே அவள் அதில் முழுவதும்
ஆக்கிரமித்து விடுவாள்.
நாமம் சொல்வதில் ஆத்மார்த்தமான நம்பிக்கையை மட்டுமே அவள் எதிர்பார்க்கிறாள்.
நம்பிக்கையும், ச்ரத்தையும், பக்தியுமே அம்பிகை நம்மிடம் எதிர்பார்ப்பது.
குரு ஒருவர் தன் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ வித்யா உபாசனையை கற்றுத் தந்தார்.
ஒருவனுக்கு அது நன்றாகப் பிடிபட்டது. அதை உலகியல் சுகங்களுக்காகப் பயன் படுத்தி
வெற்றி அடைகிறான். மற்றொரு சீடனுக்கு சமஸ்கிருத உச்சரிப்பே மனதில் பதியவில்லை.
அனுதாபத்துடன் குரூ “நீ அம்பிகையை நினைத்து இந்த மந்திரங்களைத் தொடர்ந்து சொல்”
என்று கூறி அவனை அனுப்பி விட்டார். அவன் அம்பிகையை நினைத்து கண்ணீருடன்
வேண்டுகிறான்.
“தாயே, உன் நாமங்களால், உன்னை பூஜிக்க விரும்புகிறேன். ஆனால் உச்சரிப்பு
எனக்கு வரவில்லையே நான் என்ன செய்வேன் என்று அழுகிறான். ஒரு வெறியுடன் தன்
நாக்கை அறுத்துக் கொள்ளப் போகும்போது அவனுக்குள் திடீரென்று ஒரு சிந்தனை. அவள்
தாய். குழந்தைகளின் தவறுகளை மன்னிக்கக் கூடியவள். என் உச்சரிப்பு பிழையையும்
பொறுத்து, அவள் எனக்கு கருணை காட்டுவாள் என்று உறுதியாக நம்புகிறான்.
மணலில் ஸ்ரீ சக்ரம் வரைந்து தனக்குத் தெரிந்த மந்திர உச்சரிப்புடன் அவளைத் துதிக்க
ஆரம்பிக்கிறான். சிரத்தை, பக்தியுடன் விடாமல் அவள் வருவாள் என்ற நம்பிக்கையுடன்
சுத்தமாகச் சொல்கிறான். கருணையுடன் நடக்கிறான். அம்பிகையின் நாமம் சொல்லி
வியாதிகள் தீர்க்கிறான். பலரும் அவனிடம் வந்து தங்கள் பிரச்சினைகள் தீர்ந்து
செல்கிறார்கள்.அனைத்துக்கும் பின்னால் அம்பிகை இருக்கிறாள் என்று நம்புகிறான்.
அவன் புகழ் பரவுகிறது. குரு அதைப் பற்றிக் கேள்விப் பட்டு அவனை வந்து
சந்திக்கிறார். அப்போது அவன் கண்மூடி அம்பிகையின் தியானத்தில் இருக்கிறான். உச்சரிப்பு
சுத்தமாக அவன் மந்திரங்களை உச்சரிக்கிறான்.அவன் எதிரில் புன்னகையுடன், அம்பிகை
அமர்ந்திருப்பதை வியப்புடன் பார்க்கிறார்.
“இது எப்படி சாத்தியம்?”- திகைப்புடன் கேட்கிறார் குரு.
“அவன் நம்பிக்கையுடன் சொன்னான். மந்திரங்களை உச்சரிப்பு தெரியாமல்
சொன்னாலும் அதில் உள்ள மனதை நான் பார்ப்பேன் என்று நம்பினான். தன் சுகம் என்று
எண்ணாமல் என் பெயர் சொல்லி பிறர் துன்பம் நீக்கினான். எனவே நான் அவனுக்கும் சுகம்
தந்தேன். புலமை தந்தேன்.”- என்ற அம்பிகை,
வாழ்வின் நம்பிக்கையே நான்.”- என்கிறாள்.
ஆம் அவளை நம்பினால் நம் சகல ஆசைகளையும் நிறைவேற்றி நம்முடன் நிலைத்து
நிற்பாள்.

Leave a comment
Upload