
தமிழ்நாட்டில், தீராத நோய்களையும் தீர்த்து, மக்களால் வழிபடப்படும் சில முக்கியப் பிரசித்தி பெற்ற கோயில்கள் மாவட்டம் வாரியாக பார்த்து வருகின்றோம் அந்த வரிசையில் இந்த வாரம் மத்திய தமிழக மாவட்டங்களில் (West Region)உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம்,
மாவட்டத்திலுள்ள சில கோயில்களைப் பார்ப்போம்…
கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர் ஈச்சனாரி விநாயகர் கோயில்:
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மிகவும் சக்திவாய்ந்த விநாயகர் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள விநாயகர் சிலை சுமார் 6 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலை, வண்டி அச்சு முறிந்ததால் இந்த இடத்திலேயே தங்கிவிட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அதன் பிறகே இது ஈச்சனாரி விநாயகர் கோயிலாக மாறியது.

தொடர் விக்கல், வயிறு மற்றும் தொண்டை சம்பந்தமான உபாதைகள், நீண்ட நாள் உடல் சோர்வு மற்றும் பிணிகள் நீங்கப் பக்தர்கள் இங்கு வந்து விநாயகருக்குச் சிதறு தேங்காய் (தேங்காய் உடைத்தல்) உடைத்து வழிபடுகிறார்கள்.
விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் எண்ணெய் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்தும் வேண்டிக் கொள்கிறார்கள்.
சூலூர் வைத்தியநாதசுவாமி கோயில்:
இக்கோயில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மூலவர் வைத்தியநாத சுவாமி என்றும், தாயார் தையல் நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்தக் கோயில் தீராத நோய்களைத் தீர்க்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள வைத்தியநாதரை வழிபடுவதால் தீராத நோய்கள் மற்றும் வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் நீங்கவும், ராகு-கேது மற்றும் செவ்வாய் தோஷங்கள் நிவர்த்தியாகவும் இங்குப் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
இடிகரை ஸ்ரீரங்கநாதர் கோயில்:
ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோயிலின் நோய் தீர்க்கும் சடாரி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சடாரி திருவள்ளூர் வைத்திய வீரராகவ சுவாமி கோயிலின் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பெருமாளுடன் சேர்த்து ஆராதிக்கப்பட்டதாகும். திருவள்ளூர் பெருமாள் எவ்வாறு 'வைத்தியனாக' இருந்து நோய்களைக் குணமாக்குகிறாரோ, அதேபோல் இந்தச் சடாரியைத் தலையில் வைத்து ஆசி பெறும்போது, தீராத நோய்களும் உடல் உபாதைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கை.
இந்த கோயிலில் உள்ள சுயம்பு லிங்கத்தின் அருகே இருக்கும் எறும்புப் புற்றின் மண் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இந்த மண்ணைப் பிரசாதமாகப் பூசிக் கொள்வதன் மூலம் விஷப் பூச்சிக் கடிகளின் பாதிப்புகள் மற்றும் தோல் நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது.
கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் கோயில்:
இந்த கோயில் ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு திருத்தலமாகும்.
தண்டு மாரியம்மனை மனமுருகி வழிபட்டால், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நோய் பாதித்தவர்கள் இங்கு வந்து அம்மனுக்கு 'அம்மை வார்த்தல்' போன்ற சடங்குகளைச் செய்து வழிபடுகின்றனர்.
நீண்ட நாட்களாக இருக்கும் தீராத நோய்கள், உடல் உபாதைகள் நீங்கவும், நல்ல ஆரோக்கியம் பெறவும் இங்கிருந்த வேப்பிலை மற்றும் தீர்த்தத்தைப் பக்தர்கள் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.
நோய்கள் தீர வேண்டி அம்மனுக்கு உப்புக் கொட்டுதல், மாவிளக்கு ஏற்றுதல், கண் மலர் சாத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களைப் பக்தர்கள் செலுத்துகின்றனர்.
மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்:
மருதமலை ஒரு மூலிகை மலை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இயற்கைச் சுனைகளில் இருந்து வரும் நீர், பல்வேறு மூலிகைகளின் வேர்களைக் கடந்து வருவதால், அதில் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தை அருந்துவதும், தெளித்துக் கொள்வதும் உடல் பிணிகளை நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பதினெண் சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்த, தவம் செய்த குகை மருதமலையில் உள்ளது. இங்கு வழங்கப்படும் விபூதி பிரசாதம், மன அமைதியைத் தருவதோடு, தீராத நோய்களையும், மனக் கவலைகளையும் போக்கும் அருமருந்தாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.
தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில்:
பவானி ஆற்றின் கரையில், அடர்ந்த வனப்பகுதியின் பின்னணியில் அமைந்துள்ள இந்த கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பில்லி, சூனியம், செய்வினை போன்ற தீய சக்திகளின் பாதிப்பு மற்றும் மனநல பாதிப்பால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து அம்மனை தரிசித்து, கோயிலில் வழங்கப்படும் தீர்த்தம் மற்றும் திருநீற்றை உட்கொண்டால் குணமாகும்.
திருப்பூர் மாவட்டம்
கொடுவாய் நாகேஸ்வரசுவாமி கோயில்:
நாகப் பிரதிஷ்டை மற்றும் நாக வழிபாட்டிற்கு இக்கோயில் மிகவும் புகழ்பெற்றதால், இது கொங்கு நாட்டின் "திருநாகேஸ்வரம்" என்றே அழைக்கப்படுகிறது. நாகதோஷம், ராகு-கேது தோஷங்களால் நீண்ட நாட்களாகத் தீராத சரும வியாதிகள், நரம்புக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட கட்டிகளால் அவதிப்படுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதன் மூலம் நிவாரணம் பெறுகின்றனர். வரலாற்று ரீதியாக, இத்தலம் கண் பார்வை குறைபாடுகளைத் தீர்க்கும் அற்புதத் தலமாகவும் விளங்குகிறது.
அவிநாசி அவிநாசியப்பர் கோயில்:
அவிநாசி' என்ற சொல்லுக்கு 'அழிவில்லாதது' என்று பொருள். இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் தீராத நோய்களும், கால பயமும், விஷ தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் பாடலால் ஒரு குழந்தையே உயிர் பெற்று வந்த தலம் என்பதால், குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் உடல்நலக் குறைபாடுகள், அஜீரண கோளாறுகள், மாந்தம் மற்றும் குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான கண்டங்கள் அல்லது ஜாதக ரீதியான தோஷங்கள் இருந்தால், அவை நீங்கி நீண்ட ஆயுள் பெறப் பெற்றோர்கள் அவிநாசியப்பருக்கு நெய் தீபம் ஏற்றி, சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்கள்.
இங்குள்ள அவிநாசியப்பரையும் கருணாம்பிகை அம்பாளையும் வழிபட்டு விட்டு, அம்பாள் சந்நிதியின் பின்புறச் சுவரில் தேள் மற்றும் நாகத்தின் உருவங்களைத் தொட்டு வணங்குபவர்களுக்குத் தேள், பாம்பு மற்றும் இதர விஷப் பூச்சிகளால் ஏற்படும் விஷக்கடி தோஷங்கள் மற்றும் பயங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
வானவஞ்சேரி வலுப்பூரம்மன் கோயில்:
பக்தர்களின் உடலில் ஏற்படும் 'வலிப்பு' நோயைக் குணமாக்கியதால், இத்தலத்து அம்மன் வலுப்பூரம்மன் என்று அழைக்கப்படுகிறார். நரம்புத் தளர்ச்சி, கைகால் நடுக்கம் மற்றும் தீராத வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அம்மனை மனமுருகி வழிபட்டால் நோயின் பாதிப்புகள் நீங்குவதாக ஐதீகம் உள்ளது.
சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோயில்:
இராமாயண காலத்தில் சுக்ரீவன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றதால், இத்தலத்து இறைவனுக்கு சுக்ரீஸ்வரர் (குரக்கினீஸ்வரர்) என்ற பெயர் வந்தது.
இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள சிவபெருமானுக்கு மிளகு வாங்கித் தானமாகவோ அல்லது அர்ச்சனையாகவோ வழங்கினால், உடலில் உள்ள நாள்பட்ட தீராத நோய்கள் தோல் நோய்கள் மற்றும் இதர உடல் உபாதைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில்:
இந்த கோயில் மனநலம் சார்ந்த குறைபாடுகளை நீக்கும் மிக முக்கிய பரிகாரத் தலமாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது.
கடுமையான மன உளைச்சல், மன அழுத்தம், சித்தப் பிரமை மற்றும் அறியாமையால் ஏற்படும் மனநல பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கருவலூர் மாரியம்மன் கோயில் (காளியம்மன் என்றும் அழைக்கப்படுகிறது):
இக்கோயில் கண் நோய் தீர்க்கும் முதன்மைத் தெய்வமாகப் பக்தர்களால் பெரிதும் வழிபடப்படுகிறது. தங்களுக்கு ஏற்படும் கண் வியாதிகள், பார்வைக் குறைபாடுகள் நீங்க வேண்டி இந்த அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கண் நோய் குணமாக அம்மனுக்கு "கண்மலர்" (வெள்ளியால் செய்யப்பட்ட கண் உருவம்) வாங்கி காணிக்கையாகச் செலுத்துவது இங்கு மிக முக்கிய நேர்த்திக்கடனாகப் பின்பற்றப்படுகிறது.
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில்:
பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையின்படி சரும நோய்களைத் தீர்க்கும் ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. அம்மை நோய், தீராத சொறி, சிரங்கு போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அம்மனை வேண்டிச் சென்று குணமடைவதாகத் தீவிரமாக நம்புகிறார்கள்.
ஈரோடு மாவட்டம்
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்:
காவிரி ஆற்றின் கரையில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோர் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் சிறப்புமிக்க பரிகாரத் தலமாகும். இங்குள்ள காவிரி நதியிலும், தேவ தீர்த்தத்திலும் நீராடி மும்மூர்த்திகளை வழிபடப் பக்கவாதம், வாத நோய்கள், மன உளைச்சல், தீராத பிணிகள், பில்லி, சூனியம், பித்ரு தோஷம் மற்றும் நாக தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில்:
இக்கோயிலில் அம்மனுக்குச் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தமும், வேப்பிலையும் மிகச்சிறந்த நோய் நிவாரணியாகக் கருதப்படுகிறது. குறிப்பாகச் சின்னம்மை, தட்டம்மை போன்ற வெப்பம் சார்ந்த நோய்கள், கடுமையான காய்ச்சல் மற்றும் விஷக்கடிகளால் ஏற்படும் உபாதைகள் இந்த பிரசாதத்தால் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பாலதொழு நஞ்சுண்டேசுவரர் கோயில்:
சென்னிமலை அருகே ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள பாலதொழு நஞ்சுண்டேசுவரர் கோயிலில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருக்கும் நஞ்சுண்டேசுவரருக்குக் கண் மலர் மற்றும் கண்ணடக்கம் ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கண் நோய்கள் குணமாகும் குணமாகும் என்பது ஐதீகம்
திண்டல் மலை வேலாயுதசுவாமி கோயில்:

ஈரோடு திண்டல் மலை வேலாயுதசுவாமி கோயில் முருகப்பெருமானின் புகழ்பெற்ற பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகும். இந்த மலைக் கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை மனமுருகி வழிபட, உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வ வளமும் பெருகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.
சேலம் மாவட்டம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்:
சேலம் மாநகரில் திருமணிமுத்தாறு ஆற்றின் கரையில், பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகும். வழக்கமான மாரியம்மன் கோயில்களைப் போலல்லாமல், இங்குள்ள அம்மன் தனது கால்களைத் தாமரை மலர் மீது வைத்து, மிகவும் சாந்தமான மற்றும் கருணை பொழியும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்து அம்மனை வழிபடுவதால் சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்கள், கடுமையான காய்ச்சல் மற்றும் கண் பார்வைக் கோளாறுகள் தீரும் என்பதும், குழந்தை வரம் வேண்டுவோருக்கு அருட்கிடைக்கும் என்பதும் பக்தர்களின் வலுவான நம்பிக்கையாகும்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்:
இந்த கோயில் தன் அதிசயிக்கத்தக்கச் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலைத் திறனுக்காக உலகப் புகழ்பெற்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவதலமாகும். கோயிலின் தூய்மையான காற்று, நறுமணம் மற்றும் அமைதி ஆகியவை நரம்புகளைத் தளர்த்தி, நரம்புத் தளர்ச்சி மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒரு தியானம் செய்த உணர்வைத் தருகிறது.
கஞ்சமலை சித்தேசுவரர் கோயில்:
இந்த கோயில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 18 சித்தர்களில் ஒருவரான காலங்கி நாதர் (கஞ்சமலை சித்தர்) ஜீவசமாதி கொண்ட புனித இடமாகும். இவர் திருமூலர் சித்தரின் சீடர் ஆவார். இக்கோவிலின் அருகே உள்ள மூலிகை கிணறுகளில் (ஏழு வற்றாத மூலிகை கிணறுகள்) நீராடினால் அல்லது மூலிகைத் தீர்த்தம் பயன்படுத்தினால், தீராத தோல் வியாதிகள் மற்றும் பிணிகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அடுத்த வாரம் தொடர்ந்து மத்திய தமிழக மாவட்டங்களில் (West Region) உள்ள நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டத்திலுள்ள தீராத நோய்கள் தீர்க்கும் சில கோயில்களைப் பார்ப்போம்…

Leave a comment
Upload