
இன்று 75 பிறந்த நாளைக்கொண்டாடும் , நம் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் அமரர் கிரேசி மோகனை மகிழ்வுடன் நினைவு கூறுவதில் எனக்கு மகிழ்ச்சியே. தமிழ் நாடக மேடைகளின் சூப்பர் ஸ்டார் நிச்சயம் கிரேசி மோகன் தான். ஒவ்வொரு டிராமாவையும் பக்கம்பக்கமாக எழுதி அது திரை வடிவம் பெரும்போது தானும் அதில் ஒரு கேரக்டரை எடுத்து நடித்து அந்த ட்ராமா வை புகழ்பெற்ற ஒன்றாக மாற்றி விடும் வல்லமை மோகனுக்கு உண்டு.

தம்பியை ஹீரோவாக போட்டு டிராமா எடுக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறியது மட்டுமல்லாமல் இன்றளவும் கிரேசி கிரியேஷனை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது. ராமனுக்கேற்ற லக்ஷ்மணன் போல மோகனுக்கு ஏற்ற பாலாஜி. கிரேசி மோகன் எழுதிய அனைத்தையும் தொகுப்புகள் ஆக்கி அல்லைன்யஸ் பதிப்பகம் வெளியிட்ட போது அதனை அனைத்தையும் படித்துப் பார்க்கும், அல்ல புரட்டிப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. எப்படி இந்த மனிதர் மூளையில் இவ்வளவு விஷயங்கள் தோன்றின? எங்கிருந்து கிடைத்தது அவருக்கு இவை எல்லாம்? என்று ஆச்சரியமாக இருந்தது.

மோகன் நிஜமாகவே ஒரு சகலகலா வல்லவர். ஓவியம் வரைவார், அவர் ஓவியம் வரைவது பற்றி ஓவியர் மணியம் செல்வன் என்னிடம் சொல்லியிருக்கிறார் நாங்கள் இருவரும் எங்க அப்பாவிடம் ஒன்றாக அமர்ந்து கற்றுக் கொண்டோம். என் அப்பா என்னை திட்டுவார் மோகன் எப்படி வரையறான் பார் நீ இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்கணும் என்று சொல்லுவார். எனக்கு அந்த மோகனை இன்னும் நினைவில் இருக்கிறது என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார், அந்த மோகனின் பக்கத்து வீட்டுக்காரர்.

மோகன் வெண்பா எழுதுவார், கதை எழுதுவார் ,குறுநாவல் எழுதுவார், சரித்திர நாவல் போல தோன்றும் நகைச்சுவை நாவல் எழுதுவார், கதை வசனம் எழுதுவார், திரைக்கதை எழுதுவார், கொஞ்சம்அவர் பாஷையில் செல்வதாக இருந்தால் இன்ஜினியரிங்..!!?? தெரியும், நல்ல பேச்சாளர் எல்லாவற்றையும் விட மிக அருமையான மனிதர் பழகுவதற்கு எளிமையானவர். அதிக தேவைகள் இல்லாதவர் நல்ல கும்பகோணம் கொழுந்து வெத்தலை தேவைப்படும்போது சூடாக ஒரு கப் பில்டர் காபி அது போதும் மோகனுக்கு ஒரு டிராமாவோ ஒரு சினிமாவோ அவருடைய எழுத்தில் உயிர் பெற்று விடும். சரஸ்வதி கடாக்ஷம் அந்த அளவுக்கு அவரிடம் அபரிமிதமாய் கொட்டிக் கிடந்தது.

ஒரு கேள்வி பதில் நிகழ்வில் எப்படி இறந்து போக விரும்புகிறீர்கள் ?என்று கேள்வி கேட்கப்பட்டபோது குளிக்கும் போது சோப்பு நுரை போல கரைந்து போய்விட வேண்டும் நமக்கும் எந்த தொந்தரவும் இருக்காது யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது என்று அவர் சொன்னது கிட்டத்தட்ட அவர் வாழ்விலும் நிகழ்ந்தது. ஒரு வயிற்று வலி என்று மருத்துவமனைக்கு சென்றவர் அங்கே நிம்மதியாக தன்னுடைய உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். கேட்டவர்களுக்கு அதிர்ச்சி அவரோ நம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்டு நிம்மதியாய் சென்று விட்டார்.

அதேபோல மற்றொரு நிகழ்வு மிகவும் கவனித்து பார்த்தால் ஒழிய மோகனுடைய அந்த உடனடி காமெடிகள் பலருக்கும் புரியாது. "கமலஹாஸ்யம் " என்ற ஜெயா டிவியின் நிகழ்வில் தன்னுடைய நகைச்சுவை குருநாதர்கள் என கமலும், கிரேசியும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய போது, மௌலி வந்திருந்தார். மௌலி, பேசும்போது சிறுவயதில் நாங்கள் அம்பத்தூரில் குடி இருந்தோம், அம்பத்தூர் அப்போதெல்லாம் நகரமும் அல்ல கிராமமும் அல்ல அப்படி ஒரு ஊர் என்றவுடன் கிரேசி மோகன் 'அம்பத்தூர்' என்றார். அதை அந்த சமயத்தில் புரிந்து சிரித்தது மௌலியும், கமல் மட்டுமே. உங்களுக்கு புரிகிறதா? இது கிரேசி மோகன் நகைச்சுவைக்கு ஒரு சோறு பதம். அவருடைய எழுத்து 40 படங்களுக்கும் மேல் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அவை இன்றும் காணக் கிடைக்கிறது. அவர் நடிப்பு அதற்கும் மேல், எந்த ஒரு மேக்கப் சமாச்சாரங்களோ மற்ற துணையோ இல்லாமல் சாதாரணமாய் வந்து கலக்கி விட்டுப் போவது மோகனின் வாடிக்கை.

சாக்லேட் கிருஷ்ணாவில் அவர் ரசித்து அந்த பாத்திரத்தை ஏற்றுக் கொண்டார். கண்ணாடி போட்டு மீசை வைத்த கிருஷ்ணரை தமிழ் நாடக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பாலாஜி அது பற்றி சொல்லும் போது "அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று அதற்கு அவர் கொடுத்த விளக்கம் அதை அவர் நாடகத்திலேயே சொல்லுவார் அந்த தைரியம் மோகனுக்கு இருந்தது மோகன் சொன்னதை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டார்கள்". அப்படி ஒரு ஆளுமையாய் நாடக உலகில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் கோலோச்சி , திரை உலகிலும் அதே நேரத்தில் வெற்றிக்கொடி நாட்டி, உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று நாடகங்களை அறிமுகப்படுத்தி தமிழ் நாடக உலகத்திற்கு பெருமை சேர்த்து, பெருமையாய் வளம் வந்தவர் mohan. யாரையும் புண்படுத்தாத நல்ல நகைச்சுவை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று கலைவாணருக்கு பிறகு அந்த ஒரிஜினல் திங்கிங் கிரேசி மோகனிடம் நாம் கண்டோம். அவருடைய இந்த 75வது பிறந்த நாளில் அந்த மாபெரும் கலைஞனை எழுத்தாளனை நன்றியுடன் சாரி மகிழ்வுடன் நினைவு கூறுவது அவருக்குச் செய்யும் மிகப் பெரிய ஒரு அஞ்சலி. கிரேஸி மோகன் இன்றும் நம்மிடையே அவருடைய வார்த்தைகளில், அவருடைய நாடகங்களில், அவருடைய திரைக்கதைகளில், வசனங்களில், மாது பாலாஜியின் மனதில் ஏன் நம் அனைவரும் மனதில் நீங்காமல் நிறைந்து வெற்றிலை பாக்கு வாயோடு சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்.


Leave a comment
Upload