
உ
ஸர்வமாதா:
ஸர்வா தாரா ஸர்வகதா
ஸர்வாவகுண வர்ஜிதா |
ஸர்வாருணா ஸர்வமாதா
ஸர்வ பூஷண பூஷிதா ||
அம்பிகை அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பவள். "ஸர்வாதாரா ஸுப் பிரதிஷ்டா" என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.
உலக இயக்கத்திற்கே அவள்தான் ஆதாரமாய் இருக்கிறாள். ஒரு அச்சை ஆதாரமாய்க் கொண்டு பூமி சுழல்வது போல் அவளைச் சுற்றியே இந்த பிரபஞ்சம் இயங்குகிறது.
அவள் தன்னிடமே அனைத்தையும் ஈர்க்கிறாள். எங்கும் நிறைந்த பரபிரம்மம் அம்பிகை. அவளே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்திருக்கின்றாள்.
சர்வ லலித குணங்களும் நிரம்பியவள் அம்பிகை. பரிபூரணமான நிறைந்த குணங்கள் என்று சொல்லக்கூடிய அனைத்தையும் தன்னிடத்தே கொண்டவள். எந்த ஒரு தீய குணங்களோ, எண்ணங்களோ இல்லாத பரிசுத்தமானவள் அம்பிகை.
எந்த ஒரு கீழான குணங்களும் தன்னிடம் நெருங்காமல் பரிபூரண வாசினீ. சத்துவம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று இழி குணங்கள் இல்லாதவள். அவளை வணங்கும் பக்தர்களுக்கும் அந்தக் குணங்கள் இல்லாமல் காத்தருள்பவள்.
அவள் தேஜோமயமானவள்.
அவளின் ஒளியாலேயே உலகங்கள் பிரகாசிக்கின்றன.
சிவந்த நிறம் உடையவள். ஆடை, ஆபரணம், உருவம் எல்லாமே சிவப்பு நிறமானவை.“சிந்தூராண விக்ரகாம் என்கிறது தியான ஸ்லோகம். "ஸர்வாருணா" அணவத்யாங்கி என்கிறது அதே லலிதாவின் நாமம்.
மாதுளம்பூ நிறத்தாள் என்கிறது அந்தாதி. குங்கும நிறத்தவள். பவளக்கொடி போன்றவள்.
அவள் அனைத்தையும் யோசித்து, இது எப்படி என்று அனுமானித்து, அறிவதற்கு உரியவள். தன் பக்தர்களுக்கு இது நல்லது என்று யோசித்து, அதை அருள்பவள்.
எல்லா பூஷணங்களாலும் அலங்கரிக்கப் பட்டவள்.
பரதேவதை சர்வ ஆத்ம சொரூபினி. மனிதர்களின் ஆத்மாவுக்குள் நிறைந்து இருப்பவள் அவளே. மனோசக்தி. ஆதலால், மக்கள் அணியும் ஆபரணங்கள் அனைத்தும் பரதேவதையின் திருமேனியையே அலங்கரிக்கின்றன.
அம்பிகை என்றும் நிரந்தரமானவள். அழிவில்லாத ஆனந்தக் கடல். பிரளய முடிவில் பிரம்மா அழிவை அடைகிறார், விஷ்ணுவும் முடிவை அடைகிறார், எமனும் நாசத்தை அடைகிறார். ஒருவர் பின் ஒருவராக வரும் இந்திரர்களின் கூட்டமும் பெருந்துஞ்சலில் (தூக்கத்தில்) ஆழ்கிறது.
அப்படிப்பட்ட மகா பிரளய காலத்தில் பதிவிரதையான அம்பிகையின் அருளால், சதாசிவர் மட்டும் அவளுடன் இருக்கிறார் என்கிறது சௌந்தர்ய லஹரி. "அஸ்மின் விகரத்தே சதி..." என்கிறார் ஆதி சங்கரர்.
நமது வினை வலிமையே கொடுமையான காலன். காலன் நம்மை நடுங்க வைத்து அழைக்கும் பொழுது "அஞ்சேல்" என்பவள் அம்பிகை மட்டுமே. அவளே என் துன்பத்தின் போது என் அருகில் ஓடி வந்து நிற்க வேண்டும் என்றுதான் அபிராமி பட்டரும் கூறுகிறார்:
"இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய்!
என்கிறார் அபிராமி பட்டர்.
அழைக்கும் பொழுது உன்னையே அன்னையே! என்பன் ஓடிவந்தே"
என்கிறார்.
அம்பிகையை வணங்குபவர்களின் அனைத்து ஜெபமும் அவளே ஆவாள்.
இந்தப் பிரபஞ்சமே அவள் எனும் போது, நாம் ஜெபிக்கும் அனைத்து நாமங்களும் அவளையே சென்றடைகிறது. அவள் ஆணையினாலேயே மற்ற தேவதா மூர்த்திகள் நமக்கு வேண்டியதை அருள்கிறார்கள்.
எல்லா நதிகளும் கடலில் போய்ச் சேருவது போல் எல்லா தேவதா மூர்த்திகளின் பூஜைகளும் அவளையே சென்று சேர்கிறது. “சாம்ராஜ்யம் தாயினி” என்கிறது லலிதா.
அம்பிகையின் சிம்மாசனத்தை தாங்கும் தூண்களாக மும்மூர்த்திகளும் இருக்கிறார்கள். அவர்களே அவளைத் தினம் தினம் பூஜிக்கிறார்கள் என்கிறது லலிதா. நாம் மும்மூர்த்திகளுக்கு செய்யும் பூஜையும் அம்பிகையையே சென்று அடைகிறது. நம்முடைய செயல்கள் எல்லாமே அவளையே வலம் வருகிறது. நாம் செய்யும் சிந்தனைகள், செயல்கள், நடைகள் அனைத்துமே ஹோமத்தில் போடப்படும் ஹவிசாக அவளையே சேர்கிறது. நாம் படுப்பது அவளுக்குச் செய்யும் வணக்கம். கருத்து ஒன்றிச் செய்யும் செயல்கள் எல்லாமே அவளுக்கான பூஜை.
நம்முடைய ஆவி, உடல் அத்தனையும் அம்பிகையுடனே ஐக்கியமாகி விட வேண்டும். ஏனெனில் இதைத் தந்தவள் அவளே.
"இருந்தும், கிடந்தும், நடப்பதும், நினைப்பதும் உன்னை என்றும்
வணங்குவது உன் மலர்தாள்"
என்கிறார் அபிராமி பட்டர்.
நாம் இருப்பதும், மூச்சு விடுவதும், அசைவதும் அனைத்துமே ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால்தான். கணம்தோறும் நாம் அவளையே நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால், அவளே நமக்கு வேண்டிய அனைத்தையும் தருவாள்.
******************************

Leave a comment
Upload