
உ
பிராணநாயகி
கரபோரு; கலாநாத முகீ கசஜிதாம்புதா!
கடாக்ஷ ஸ்யந்தி கருணா
கபாலி பிராண நாயிகா!!
ஈசனின் நெற்றிக் கண்ணால் காமதேகத்தை இழந்த மன்மதனின் சாம்பலிலிருந்து உருவானவன் பண்டாசுரன் என்ற அசுரன். அவன் கடுமையான தவம் புரிந்து மும்மூர்த்திகளாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான்.
அவனின் கொடுமை பொறுக்க முடியாத தேவர்கள் ஈசனிடம் முறையிட, தேவர்களின் துயர் துடைக்க யாகக் குண்டத்திலிருந்து பேரழகுடன் அன்னை ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரியாகப் பராசக்தி அவதரித்தாள். ஸ்ரீசக்கரம் மற்றும் காமேஸ்வரருடன் இணைந்து பண்டாசுரனைத் தன் படைகளுடன் சென்று வதம் செய்தாள்.
இந்த அம்பிகையின் பெருமைகளைப் போற்றும் வழிபாடே உலகப் புகழ்பெற்றலலிதா சஹஸ்ரநாமம் ஆகும். "சௌம்யா, சிதக்னீ குண்ட சம்பூதா, தேவர்ஷி, பண்டசைன்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா" என்றெல்லாம் ஸ்ரீலலிதாம்பிகையைப் போற்றுகிறது.
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியான அவளின் அழகையும், தோற்றத்தின் கம்பீரத்தையும், உருவ அமைப்பையும் லலிதா திரிசதி தொடர்ந்து சொல்கிறது. சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தையும் கொண்டவள் அம்பிகை.
யானைத் துதிக்கை போன்ற தொடைகளை உடையவள் என்கிறது 'கரபோரு' என்ற முதல் சொல். லலிதாம்பிகை மூன்று கண்களை உடையவள் என்று கூறுகிறது. ஈஸ்வரனைப் போலவே அம்பிகைக்கும் மூன்று கண்கள் உண்டு. தன் மூன்று கண்களாலும் இந்த உலகைக் காத்து ரட்சிக்கும் அவள், கவசமாக நின்று நம் பயம், நடுக்கம், துக்கம் போன்றவற்றிலிருந்து தன் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கிறாள்.
"சந்திரகலா" என்று புகழ்கிறது அவளை. அவள் முகமே சந்திரனைப் போல ஒளி வீசக்கூடியது. முழு நிலவு ஒத்த வதனம். அதில் மீன்களைப் போன்ற கண்கள்!
"தாயே, உன்னுடைய மீன் போன்ற கண்கள் சுற்றிச் சுற்றிச் சுழன்று இந்த உலகை ஆட்சி செய்கிறது" என்கிறார் நீலகண்ட தீட்சிதர்.
பூரண கலைகளுடன் கூடிய சந்திரன் போன்ற முகம் உடையவள்; அவளுடைய கருத்த நீண்ட கூந்தல் அலை அலையாகப் பரவுகிறது. அது நீருண்ட மேகங்கள் கருத்துக் காணப்படுவது போல் காண்கிறது. நடுநடுவில் மின்னல் வெட்டி வருவது போல் கூந்தலும் பளபளக்கிறது.
கருணை பெருகும் கடைக்கண் பார்வை உடையவள். கருணை பொழியும் கண்களுக்காகவே காமாட்சி துதிக்கப்படுகிறாள். அவளுடைய கண்களைப் பார்த்தாலே நம்முடைய கவலைகள் அனைத்தும் பறந்தோடிவிடும். “அவ்யாஜ கருணா மூர்த்தி”என்கிறார் தீட்சிதர்.
"தாயே, உன் கண்களிலிருந்து பெருகும் கருணை மழை என்னை நனைக்க வேண்டும். அதில் நான் மூழ்கி முத்துக் குளிக்க வேண்டும்" என்கிறார் ஸ்ரீமூகர்.
காமாட்சியின் கருணை விழிகளுக்கு ஈடானது எதுவுமே இல்லை. அந்தக் கருணை பொங்கும் விழிகளால் அவள் கனிவு ததும்பத் தன் குழந்தைகளுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறாள். தன் மனைவி அழகாக இருப்பது மட்டுமல்ல, அவளின் உள்ளமும் அழகாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆடவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். தன் மனைவியின் செயல்களை, அவளின் காருண்யத்தை, மனிதாபிமானத்தை, கனிவை இந்த உலகமே போற்ற வேண்டும் என்றுதான் அவன் எதிர்பார்ப்பான். ஈசன் மட்டும் விதிவிலக்கா?
அப்பனுக்கே அன்னமிட்டவள் அன்னை அன்னபூரணி! பிரம்மாவின் தலையைக் கொய்து அதன் கபாலம் ஈசனின் கைகளில் ஒட்டிக்கொள்ள, எந்த இடத்தில் அவருக்கு அன்னமிடும்போது கபாலம் கையை விட்டு நழுவுகிறதோ, அந்த இடமே பூரண சக்தி வாய்ந்தது என்று கூறுவார்கள். அதன்படி ஒவ்வொரு தலமாக வரும்போது காசியில் ஸ்ரீஅன்னபூரணி அவருக்கு உணவு இடுகிறார். அப்பொழுது கபாலம் ஈசனின் கையை விட்டு நழுவுகிறது. அதன் பின் ஈசனிடம் மூன்று படி அரிசி வாங்கிக் கொண்டு முப்பத்து ஆறு அறங்களையும் செய்வதற்காகக் காஞ்சிக்கு வருகிறார் அன்னை என்பது சில புராணக் குறிப்புகள்.
கபாலத்தைக் கையில் ஏந்திய ஈஸ்வரனின் பிராணநாயகி அவள். ஆனால், இந்த உலகம் முழுவதுமே அவளுடைய அன்னத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகையே காப்பது ஈசன் என்றாலும், அந்த ஈசனுக்குள் இருந்து அவரை இயக்குவது அம்பிகை அல்லவா? எண்ணங்களும் அவளே; எண்ணத்தின் வழி செல்ல வைப்பவளும் அவளே! அவளே கபாலத்தைக் கையில் ஏந்திய கபாலீஸ்வரருடைய பிராணநாயகி.
.

Leave a comment
Upload