கலை
ஆச்சர்யப்படுத்தும் அனிதா குஹா! சந்திப்பு - வேங்கடகிருஷ்ணன் படங்கள் - அனிருத்

20190806172024277.png

"சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்காக உருவாக்கப்பெற்றது தான் அன்னமய்யாவின் வாழ்க்கை வரலாறு. அதை சொல்லும் 'பத கவிதா பிதாமஹா' நாட்டிய நாடகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து கிருஷ்ணகான சபா திரு. யக்ஞராமன் அவர்களின் ஆதரவோடும் , தீவிர முயற்சியாலும் உருவாக்கப்பெற்றது தான் 'சதா வேங்கடேசம், ஸ்மாராமி ஸ்மாராமி' நாட்டிய நாடகம். கலை ரசிர்களை மட்டுமல்லாமல், ஆன்மிக பக்தர்களால் வெகுவாக பாராட்டு பெற்ற படைப்பாகும் இது!" சொல்லும் போதே நடன மேதை அனிதா குஹாவின் கண்கள் மகிழ்ச்சியால் மின்னுகிறது. பரதாஞ்சலி எனும் அமைப்பு வைத்து நடத்தும் இவருக்கு அண்மையில் கலைமாமணி விருது தந்து கெளரவித்திருக்கிறது தமிழக அரசு.

அவரை சந்தித்தோம். தனது நிகழ்ச்சிகள் தொடர்பாக அவர் காண்பித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவினைக் கண்டவுடன் சமீபத்தில் பார்த்த வேறொரு நாட்டிய நிகழ்வு நம் நினைவில் வந்து போனது. அதைப் பற்றி பகிர்ந்து கொண்டவுடன் வருத்தத்தோடு சொன்னார். "எனக்கும் நிறைய பேர் அதைப்பற்றி சொன்னார்கள். இந்த நாட்டிய நாடகம் மட்டுமல்லாமல் எங்களின் பெரும்பாலான படைப்புகள் மற்றவர்களால் அப்படியே அரங்கேற்றப்பட்டன. முதல் முறை உருவாக்குவது தான் கஷ்டம் . அதைப் பார்த்து காப்பி அடித்து செய்வது சுலபம் தானே!" குரலிலும் முகத்திலும் வருத்தம் வெளிப்பட்டது. ஒரு படைப்புக்கலைஞன் மிகவும் வேதனைப்படும் தருணம் அது.


20190806172228906.jpeg

சற்று நேர அமைதிக்குப்பின் நமக்கு காபி வரவழைத்து தந்தார். (காபி வந்தவுடன்,பேசிக்கொண்டே அதை எங்களிடம் தரச்சொல்லி அவர் செய்த அபிநயம், அடடா அற்புதம்!)

ஒரு பெருமூச்சுக்குப் பின் அவர் கடமையே கண்ணாய் பேசத் துவங்கினார்.

"நாங்கள் நிகழ்த்திய அடுத்தடுத்த நாட்டிய நாடகங்கள் எங்களின் திறமையையும் , பரதாஞ்சலியின் புகழையும் பரப்பிட , 2011 ல் கிளீவ்லாண்டிலிருந்து திரு .சுந்தரம் அழைத்தார். நிறைய பரத குழுக்களை அழைத்து ராமாயணம் முழுவதையும் நாட்டிய நாடகங்களாய் நிகழ்த்திட வேண்டினார். எங்களுக்கு கிடைத்தது சுந்தர காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும். மேடையில் வாலி சுக்ரீவன் கட்டிப்புரண்டு சண்டை போட, மறைந்திருந்து ராமன் அம்பு எய்ய, அம்புடன் வாலி நியாயம் வேண்ட ...எல்லார் கண்களிலும் கண்ணீர் ஊற்று...'நெய்வேலி சந்தான கோபாலனின் உருக்கமான பாடல்களோடு நாங்கள் த்ரேதா யுகமே சென்று திரும்பினோம்' என்ற அமெரிக்க ரசிகர்களின் பாராட்டே "வன விராட விஜயம் " என்ற மஹாபாரத நாட்டிய நாடகத்தையும் நடத்திட அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அதே போல கிளீவ்லண்ட் தியாகராஜ ஆராதனையின் போது கிருஷ்ணாவதாரத்தை "விஜயதே கோபால சூடாமணிம் " என்ற நாட்டிய நாடகமாக நடத்தப்பெற்றது. அது மட்டுமல்ல. 2015ம் ஆண்டு பரதாஞ்சலிக்கு 25வது வருடம். எனது 150 மாணவர்கள் பங்குபெற்ற நிகழ்வுகள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை” என்ற அவர் மேலும் சொன்னார். "பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் உருவாக்கிய "Aim for seva US அமைப்பின் ஸ்ரீனி ராமன் அவர்களுடன் இணைந்து என்னுடைய மூத்த மாணவர்கள் அமெரிக்காவில் 19 இடங்களில் ராமாயணம் நாட்டியநாடகத்தை நிகழ்த்தினார்கள். அந்த வருடம் தான் புகழ் பெற்ற வாக்கேயக்காரர்களில் ஒருவரான அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் படைப்புகளில் முக்கியமான ஒன்றான "க்ஷேத்திராம்புஜாமாலா" வையும் உருவாக்கினோம்"


இந்த 2019ம் ஆண்டு இவருக்கு மிக முக்கியமான ஒன்று. ஏற்கனவே அரேங்கேற்றிய 'விஜயதே கோபால சூடாமணிம்' நாடகத்தை இன்னும் மெருகேற்றி பன்மொழிப் பாடல்களோடு மிக பிரமாண்டமான முறையில் 'நந்தலாலா' என்னும் நாட்டிய நாடகமாக்கி ஸ்ரீனி ராமன் அவர்களின் Aim for seva உடன் இணைந்து அமெரிக்காவில் 15 இடங்களில் நடத்தியிருக்கிறாராம்!

சென்னையில் பிப்ரவரி மாதத்தில் அரங்கேறியது. மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று 25 வது நாட்டிய நாடகத்திற்குண்டான முக்கியத்துவத்தையும் பெற்றுவிட்டது. இதன் 10 நிமிட தொகுப்பினை பரதாஞ்சலியின் youtube channel ல் பார்க்க நேர்ந்தது. கண்ணனோடு வாழ நமக்கு கொடுப்பினை இல்லையே என்ற குறையை போக்கி விட்டது இந்த நாட்டிய நாடகம்.

இது வரை 25 நாட்டிய நாடகங்கள் உருவாக்கி தந்துள்ள இவருக்கு ஆசிரியராய் இது 30 ம் வருடம். வாழ்த்தி, வணங்கி அடுத்த நாட்டிய நாடகத்திற்கு ஏன் நீங்கள் ராம நாடகக் கவிதைகளையோ, குற்றாலக்குறவஞ்சியையோ எடுத்துக்கொள்ளக்கூடாது? என்று கேட்டோம். அதற்கு அவர் " என் மனத்திலும் குறவஞ்சி இருக்கிறது. இதுவரை மேடையேற்றாத ஒரு விஷயம் அது " என்றார். ஒரு வருடத்திற்கும் மேலாக கடுமையாக தாக்கிய நோயின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது தான் வணங்கும் சத்ய சாய் பாபாவின் அருளாலும், சொல்லித்தரும் மாணவர்களாலும்தான் என்று சந்தேகமின்றி நம்பிடும் இவர், தனது மாணவர்களிடம் கோபித்துக்கொண்டதே இல்லையாம்!

இங்கு வந்து குழந்தைகளை பரதநாட்டிய வகுப்பினில் சேர்க்கும் பெற்றோர்களிடம் இவர் கறாராய் போடும் கண்டிஷன் ஒன்று உண்டு. அது அரங்கேற்றத்திற்கு அவசரப்படுத்த கூடாது என்பதே. "இங்கு குழந்தைகள் சந்தோஷமாய் இருக்க வேண்டும் . அவர்கள் அரங்கேற்றம் செய்ய தயாராகி விட்டார்களா என்பதை நான் அவர்கள் வளர்ச்சியைப் பார்த்து முடிவு செய்வேன். அவசரப் படுபவர்கள் வேறு எங்கும் போய் சேர்ந்து கொள்ளலாம். பரதம் நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பவர்களுக்கான இடம் மட்டுமே இது" என்று சொன்னார்.


20190806172438896.jpeg


அப்போது உள்ளே நுழைந்த அவரது மாணவர்களின் கண்களில் அந்த சந்தோஷத்தை நம்மால் பார்க்க முடிந்தது. அந்த மாணவர்கள் எல்லோரும் பணிவாய் அவரின் பாதம் பணிந்து வணக்கம் சொல்லி பயிற்சியை துவக்கினார்கள். அனிதா குஹா தனது தட்டுக்கோலினை தட்டிக்கொண்டே ஜதி சொல்லத்துவங்கினார் 'தத் தித் தரிகிட தோம்'....! சலங்கை கட்டிய திறமையான கால்கள் அதற்கேற்றாற்போல் ஆட , கண்ணும் கையும் ஒருமித்து அசைய, குருவின்ஆசி அங்கே அனைவருக்கும் பரிபூரணமாய் இருக்கிறது என்பது அந்த இடத்தின் அதிர்விலிருந்தே நமக்குத் தெரிந்தது.


20190807044946371.jpeg

அனிதா குஹா பற்றிய முக்கிய குறிப்புக்கள்:

இரட்டை நகரங்கள் என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஐதராபாத் மற்றும் செகந்தராபாத், இதுதான் இவரின் பாதம் பூமியில் முதலில் பட்ட இடம். மூன்றரை வயதில் குழந்தைக் கையால் அம்மாவைப் பார்த்து அபிநயம் பிடித்து துவங்கினார், ஆறு வயதில் காளியன்தலை மீது கால் வைத்து ஆடிய ஆட்டத்தை செகந்தராபாத் கேரளா சமாஜம் இன்னும் மறக்கவில்லை. அன்று தொடங்கிய சலங்கை காதல் இன்று வரை அதே இளமையோடும், அர்ப்பணிப்போடும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இவரின் ஹஸ்த, நயன தீக்ஷையால், ஏராளமான இளம் நடனமணிகள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

12 வயதில் “பஸ்மாசுர மோஹினி” நாட்டிய நாடகம் முதன் முதலில் அரங்கேற்றம் ஆனது. அடுத்து, அடுத்து என ஆர்வமாய் அனிதா ஆட வள்ளி திருமணம், சீதா கல்யாணம், சிவா பார்வதி என்று நாட்டிய நாடகங்கள் உருவாகி, மேடையேற்றப்பெற்று மக்களை மகிழ்வித்தன. இதன் தொடர்ச்சியாய், ஊர்வசி நாட்டிய நாடகத்தில் ஏற்ற, “ஊர்வசி” கதாபாத்திரம் 1984-ம் ஆண்டு ரயில்வே அமைச்சர் விருதினை வாங்கித் தந்தது.

இதே நேரம், இதுவரை பயின்ற வழுவூர் மற்றும் பந்தநல்லூர் பாணியையும் தாண்டி அவர் என்றும் ஆர்வமாய் பயில விரும்பிய கலாக்ஷேத்ரா பாணியை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைந்தது. டாக்டர். ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் அவர்களிடம் சிறுது காலம் அதனை கற்றுக்கொண்டார்.

1986-ல் குஹாவுடன் பாணிக்கிரஹணம் பரதத்தை தமிழகத்தின் தலைநகருக்கு அழைத்து வந்தது. பெரிய கூட்டு குடும்பத்தின் தலை மகளாய் அடியெடுத்து வைத்தார். பரதத்தில் இருந்த அதே காதல், பாசத்தோடு செய்த சமையலிலும் இருந்தது. கிடைத்த வாழ்க்கையை கடவுளின் ஆசிர்வாதமாய் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். தான் வசித்த அபார்ட்மெண்டின் ஆண்டு விழாவில் குழந்தைகள் ஆட த் தகாத சினிமா நடனம் அரங்கேற்றப்படுவதற்கு ஆயத்தம் ஆவதை அறிந்து, இடையில் புகுந்து தேசிய ஒருமைப்பாடு குறித்து ஒரு சிறிய நாட்டிய நாடகம் ஒன்றை தானே தயாரித்து, குழந்தைகளுக்கு பயிற்சியளித்து, அரங்க அமைப்புகளோடு அரங்கேற்றினார்....

அனைவரின் பாராட்டை அள்ளியது அந்நாடகம். அவருக்குள் இருந்த ஆசிரியரை அவரின் புகுந்த வீடு அறிந்தது. என்ன இருந்தாலும் சொந்த அத்தை மகன் தானே குஹா, அவருக்கு இவரின் ஏக்கம் புரியாமல் இருக்குமா?. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இராது என்று தெரியாதவரா? பரதம் சொல்லிக் கொடுக்கலாமே என்று அடி எடுத்துக் கொடுத்தார் அன்புக் கணவர். இரண்டு வருடங்கள் இதோவென ஓட... 1989 நவம்பர் 23-ல் பரதம் சொல்லித் தந்து பார் புகழ் பெற்றிட “பரதாஞ்சலி” பிறந்தது, வெறும் மூன்று மாணவர்களோடு. மூன்று, முப்பதானது மூன்று வருடங்களிலேயே... இன்று இவரின் மாணாக்கர்கள் உலகெங்கும் “அனிதா குஹா”வின் அடவுகளை அற்புதமாய் அடுத்த தலைமுறைக்கு ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

"பரதாஞ்சலி நடனப்பள்ளி துவங்கி இந்த 2019 ம் வருடம் நவம்பர் 23 அன்று வெற்றிகரமாய் 30 வருடங்கள் முடியப் போகிறது. இதைப் பற்றி கேட்கும்போது அவர் சொன்ன பதில் “எனது மாணவிகள்தான் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள், நான் இன்னும் ஆரம்பித்த அன்று இருந்த அதே ஆசிரியராகத்தான் இருக்கிறேன்... அடுத்த குழந்தையின் வருகையை எதிர் நோக்கி” என்கிறார்.

பேர் சொல்லும் பல பிள்ளைகள், இவரிடம் பயின்று பல இடங்களுக்கு சென்றாலும், உலகெங்கிலும் பரதாஞ்சலியின் புகழ் பரவ முக்கிய காரணமானவர்களில் ஐஸ்வர்யா நாராயணசாமி, மேதா ஹரி, சாத்விகா சங்கர், ஜனனி சேதுநாராயணன், யத்தின் அகர்வால் , சாத்விகா ராஜாமணி ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

இவரது நாட்டிய நாடகங்கள் பெரும் புகழ் பெற இவருக்கு உறுதுணையாய் இருந்தவர்கள், இருப்பவர்கள் என்று பலரை குறிப்பிடலாம். அவர்களில் என்றும் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டியவர்கள் திருமதி. லீலா சேகர், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் திரு.கார்த்திக் ராஜகோபால், கிருஷ்ணகாண சபா திரு.யக்ஞராமன் திருமதி. ஒய். ஜி.பி., திருமலை திருப்பதி தேவஸ்தானம் திரு. ஸ்ரீனிவாசன் ஆகியோர். இவருடைய பெரும்பாலான நாட்டிய நாடகங்களின் பாடல்களை எழுதி, இசையமைத்தவர் டாக்டர். P.R. வேங்கடசுப்ரமணியம் அவர்கள்.

பரதாஞ்சலியின் எல்லா நாட்டிய நாடகங்களுக்கும் கலைமாமணி திருமதி.ரேவதி சங்கரன் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பார். கடந்த 25 வருடங்களாக இவர்களின் நாட்டிய நாடகங்களை மேலும் மெருகேற்றிடும் திறமையாளர்.