
பஞ்சமும், பசியும், பட்டினிச் சாவுகளும் சாதாரணமாயிருந்த பல நூற்றாண்டுகளாகவே இந்தக் கொடுமைகளுக்கு பழகிப் போன ஒரு நாட்டில், காந்திஜி அதையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார். ஒரு நியாயமான காரணத்திற்காக, இலட்சியத்திற்காக அவர் பட்டினி கிடந்தார். கிரேட் பிர்ட்டன் என்றழைக்கப்படும் சாம்ராஜ்யத்தின் தூண்களை அவர் தமது பட்டினியின் மூலம் தலைகுனியச் செய்தார்.
உலகம் முழுவதிலும் சென்று தங்களது வீரத்தினாலும் தந்திரத்தினாலும், விடா முயற்சியினாலும் உலக வரைபடத்தில் முன்னூற்றுக்கு மேற்பட்ட இடங்களையும் உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களையும் தங்களது ஆட்சியின் கீழ் வைத்திருந்த பிரிட்டிஷ்காரர்கள் இந்த எளிய மனிதரின் அஹிம்சைப் போராட்டத்திற்கும் அவரது உண்ணா நோன்பிற்கும் பயந்திருந்தார்கள். இயல்பாகவே தெய்வநம்பிக்கை உள்ள இந்திய மக்கள் இந்த எளிய உருவத்தில் ஒரு மகாத்மாவைக் கண்டார்கள். மக்களுக்கு அவர் உபதேசித்த எளிமை, பொறுமை, தொண்டு புரிதல் இவைகளுக்கு அவரே ஒரு உதாரணமாக வாழ்த்தும் காட்டினார். விவாதித்திற்கே இடமில்லாமல், இந்த நூற்றூண்டின் புனித ஆத்மா, மகாத்மா, இவரே. பிரிட்டிஷார் வெளியேறுவதை ஒரு நிச்சியமான விஷயமாக்கிய அவரை அவர்கள் வெறுத்ததிலும், பலவிதமான குற்றச்சாட்டுக்களை அவரை நோக்கி வீசியதலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
காந்திஜி எங்கிருக்கிறாரோ அந்த இடம்தான் இந்தியாவின் தலைநகர் என்றொரு வழக்கு இருந்தது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக ஒரு புத்தாண்டு தினத்தன்று வங்காளத்தின் மிகச் சிறிய கிராமமான ஸ்ரீராம்பூர், அப்படிக் கருதப்பட்டது. இந்த குக்கிராமத்தில் இருந்து கொண்டு நாடு முழுவதிற்கும் ரேடியோ, டெலிவிஷன், போன்ற எந்த வசதிகளும் இல்லாத அவரது அதிகாரம், செலுத்தப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர் இருக்கும் இடத்திலிருந்து ஒற்றையடிப் பாதைகளில் நீங்கள் நூற்றைம்பந்ததைந்து மைல்கள் நடந்தால், தான் டெலிபோன், மின்சாரம், அல்லது குழாய் தண்ணீர் கிடைக்கும் இடத்தை அடைய முடியும். ஸ்ரீராம்பூர் என்கிற குக்கிராமம் இருந்த நவகாளி என்கிற பிரதேசம் சுலபத்தில் சென்றடைய முடியாத இடங்களில் ஒன்று. கங்கை, பிரம்மபுத்திரா நதிகளின் பிரதேசங்களில் அதுவும் ஒன்று. நாற்பது சதுர மைலுக்கும் குறைவான இந்த ரத்த பூமியில் இருபத்தைந்து லட்சம் மக்கள் கூட்டம் ஒட்டிக்கொண்டு வாழ்ந்தது. இவர்களில் எண்பது சதவிதத்தினர், முஸ்லிம்கள். ஏராளமான அருவிகளினாலும், வாய்க்கால்களினாலும் பிரிக்கப்பட்ட இந்த கிராமங்களில் பலவற்றை மிதவைகள் மூலமும், படகு மூலமும், கயிறு, அல்லது ஆடிக்கொண்டிருக்கும் மூங்கில் பாலங்களின் மூலமும் தான் அடைய வேண்டும். அவரது இறுதி லட்சியமான இந்திய சுதந்திரம் நெருங்கிக் கொண்டிருந்த இந்த 1947 புத்தாண்டு தினம் காந்திஜிக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மாறாக அவர் எல்லையற்ற வேதனையில் மூழ்கியிருந்தார்.
வெறிபிடித்த அரசியல்வாதிகளினால் தூண்டிவிடப்பட்ட பாமர மக்கள் கொலைவெறி கொண்டலைந்தனர். அவர்களுக்கு நேர்ந்த அவலங்களுக்கு எதிரடியாக கல்கத்தாவில் முஸ்லீம்கள் இந்துக்களை கொல்வதும், தீவைப்பதும், கற்பழிப்பதும், பசு மாமிசத்தை உண்ணச்சொல்லி அவர்களை நிர்பந்திப்பதும், பெரிய அளவில் நடந்தன. ஸ்ரீராம்பூரிலிருந்த குடிசைகளில் பாதிக்குமேல் எரிந்து போயிருந்தன. காந்திஜி தங்கியிருந்த குடிசை கூட ஒரு பகுதி எரிந்து போனதுதான். பக்கம் பக்கமாக சில அடிகள் இடைவெளியில் ஒரு கணக்குக்கும் ஒத்துவராமல் இந்துக்களும், முஸ்லீம்களும் இரண்டறக் கலந்து – ஒரே விதமான வறுமை, துன்பம் இவைகளில் உழன்று கொண்டிருந்த இந்த மக்கள் தீடிரென்று ஆவசேமூட்டப்பட்டு தங்களது அண்டை வீட்டின் மீது பாய்வது எவ்வளவு கொடுமையான விஷயம்? ஆனால் இந்த அவலம்தான் இங்கேயெல்லாம் நடந்தது. நதிகளிலும், அருவிகளிலும் எறியப்பட்டவர்கள், தீயினால் கருகி மாண்டவர்கள் போக, மீதியிருந்த பிணங்களைப் புதைக்கக் கூட இவர்களிடம் பணம் இல்லை.
காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க அவர்களிடம் பணம் இல்லை. இப்படி வறுமைக் கோட்டிற்க்குக் கீழே வாழ்ந்த மக்களிடம் பல ஏமாற்றங்கள், துன்பங்கள், வறுமை இவற்றின் அடியில் கனன்று கொண்டிருந்த பெரு நெருப்பை, வக்கிரம் பிடித்த அரசியல் தலைவர்கள் தூண்டிவிட்டு, இதோ பார் எனது அழிக்கும் சக்தி என்று உலகுக்கு அறிவித்து அதன் மூலம் பயனடைந்தார்கள். நவகாளிப் பகுதியில் ஆங்காங்கே வெடித்தெழுந்த இந்த இனப்படுகொலைகள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி நாடே பற்றி எரியும் காலம் தூரத்தில் இல்லை என்று தோன்றியது.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஸ்ரீராம்பூருக்கு வந்த காந்திஜி அங்கு நடந்து முடிந்திருந்த சம்பவங்களை நேரில் கண்டு மத வெறியின் கொடுமை எந்த அளவிற்கு மனிதர்களை மிருகங்களை விடக் கொடியவர்களாக மாற்ற முடியும் என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார். அவரது இலட்சியங்களும் மனித குலத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையும் ஆட்டம் காண ஆரம்பித்தன. இந்த மதவெறி என்கிற
கொள்ளை நோய் இந்தியா முழுவதையும் விழுங்கிவிடுமோ... ஒ, ஐம்பது ஆண்டுகளாக நாம் பட்ட பாடுகள் அத்தனையும் வீண்தானா? என்று மனம் வெதும்பினார். நடந்து முடிந்த சம்பவங்களை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி நடக்கமாலிருக்க என்ன செய்யலாம் என்கிற தீவிர சிந்தைனையிலிருந்தார். எப்போதும் இப்படிப்பட்ட நெருக்கடியான சமயங்களில் அவருக்கு வழிகாட்டிய அந்தராத்மாவின் குரலுக்காக அவர் காத்திருந்தார். "உலகத்தில் நடக்கும் ஏராளமான தவறுகளுக்காக நாம் அழ முடியாது. அதற்காக
பிராயச்சித்தமும் செய்ய முடியாது. ஆனால் இந்திய மக்களின் தவறுகளுக்கு நான் ஒரு பிராயச்சித்தம் செய்ய வேண்டும்" என்று காந்திஜி நினைத்தார். ஏன் அப்படி நினைத்தார்?
(தொடரும்)

Leave a comment
Upload