
இந்தியா என்றால் புது டெல்லியும், மும்பையும்தான் வெளி நாட்டவர்களுக்குத் தெரியும்.
முதல் முறையாக மகாபலிபுரமும் சென்னையும் பிரபலமாகவிருக்கிறது.
இந்தியாவிற்கு குறிப்பாக சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெரிந்த ஊர் தான் என்றாலும் மற்றவர்களுக்கு மகாபலிபுரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கோவில்களுக்கும், சிற்பங்களுக்கும் பெயர் பெற்ற மகாபலிபுரம் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை நிர்மாணிக்கப்பட்டது. யுனெஸ்கோவில் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று அடையாளங்கள்.
வரலாறு பாடம் போல இதெல்லாம் எதற்கு என்றால், கிருஷ்ணரின் வெண்ணை உருண்டை என்று வர்ணிக்கப்படும் பெரிய உருண்டை பாறையையும் அர்ஜுனன் தவத்தையும் பார்க்க முதல் முறையாக சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை அழைத்து வருகிறார் பிரதமர் மோடி.


ஊர் என்னவோ பாதுகாப்பு சோதனைகளால் இரண்டு படப் போகிறது.
சீன அதிபரை புது டெல்லிக்கோ அல்லது மும்பைக்கோ அழைத்து செல்லாமல் மகாபலிபுரத்தை தேர்ந்தெடுத்ததைப் பற்றி சமூக ஊடகங்களில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உலா வருகின்றன.
அதாவது தமிழ்நாட்டில் மத்திய அரசை எதிர்த்து பல குரல்கள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், தமிழ் தேசியம் பேசும் பேச்சுக்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதால் பிரதமர் தமிழ்நாட்டை குறிப்பாக மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறாராம். தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு முக்கியமான பகுதி தான் என்று சொல்லாமல் சொல்வதாம் இது. அது போலவே உலகத் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் துவங்கினால் உள்ளூர் குட்டி தலைவர்களின் மவுசு குறையும் என்ற கணக்காம். அதையும் மீறி பிரச்சினை பண்ணினார்கள் என்றால் தமிழக மக்களுக்கே அவர்கள் மீது வெறுப்பு வரும் என்றும் நம்புகிறார்களாம்.
இன்னொரு குழுவில் போதிதர்மன் பல்லவ மன்னனின் மூன்றாவது மகனாக பிறந்தவர். இங்கிருந்து தான் தியானக் கலையையும், வர்மக் கலையையும் சீனாவுக்கு எடுத்துச் சென்றார். இன்றும் ஷாவலின் கோவிலில் போதி தர்மரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது . அதனால் தான் மகாபலிபுரத்தில் இந்தக் கூட்டதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும் சொல்கின்றனர்.
நினைவிருக்கிறதா..? 2015-ல் மோடி சீனாவிற்கு சென்ற போது, ஷியான் நகருக்கு சென்று டெரகோட்டா போர் வீரர்கள் இருக்கும் இடத்தை பார்வையிடச் சென்றார். அன்று ஷீ ஜின்பிங் அவரை பீஜிங் தலைநகர் அழைத்துச் செல்லவில்லை. ஷியான் நகரில்தான் இந்த சந்திப்பு நடந்தது. அது சீன அதிபரின் சொந்த ஊர்.
அப்படி பார்த்தால் குஜராத்திற்கு தானே மோடி அழைத்து செல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. செப்டம்பர் 2014-ல் சீன அதிபர் இந்தியா வந்திருந்த போது அகமதாபாத்தில்தான் சந்திப்பு நிகழ்ந்தது.
சீனாவும் இந்தியாவும் ஆசியக் கண்டத்தில் இரு பெரும் நாடுகள். ஏன் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிக்கும் கொஞ்சம் குறைவாக இருப்பது இந்த இரு நாடுகளில் தான். அடிக்கடி எல்லையில் பதட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருக்க, இரண்டு தலைவர்களும் என்ன பேசப் போகிறார்கள் எனும் ஆர்வம் இரு தரப்பிலும் கட்டாயம் உண்டு!

இது ஒரு சம்பிரதாயமான சந்திப்பு இல்லை என்று சொன்னாலும்,இருவரும் என்னென்ன விஷயங்கள் குறித்துப் பேசவிருக்கின்றனர் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் இந்திய - சீன எல்லைகளைப் பற்றிய பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது போலவே சீனாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி குறித்தும் பேசக்கூடும். இது பொருளாதார சமனுக்கு மிக முக்கியம்.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முனைப்பில் இந்தியா, பங்களாதேஷ், சீனா, மியான்மார் போன்ற நாடுகளுடன் உள்ள பகுதியைப் பற்றியும் பேசக்கூடும்.
மோடி, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எல்லைப் பிரச்சினைகள் சீனாவுடன் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தக் கூடும்.
சமீபத்தில் ஜூன் மாதம் பிஷ்கேக்கில் ஷீ ஜின்பிங்கை சந்தித்த மோடி, அவரை இந்தியாவிற்கு மீண்டும் அழைப்பு விடுத்தது விளையாட்டுக்கல்ல.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லாததால், சீனாவுடன் நட்பு பாராட்டுவதற்காகவும் அழைத்திருக்கக் கூடும்.
பிஷ்கேக்கில் சந்தித்த போது, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவிற்கு அழைத்ததாகவும் சொல்கிறார்கள். குறிப்பாக பாங்க் ஆஃப் சைனா இந்தியாவில் கடை பரப்பும் ஒப்பந்தம் உட்பட. இந்த வருடம் ஜுன் மாதம் மும்பையில் முதல் கிளையை துவங்கி விட்டது பாங்க் ஆஃப் சீனா என்பது லேட்டஸ்ட் செய்தி.
தொலைத் தொடர்பு பொறுத்த வரையில் 5G பற்றியும், வாவே நிறுவனம் பற்றியும் பேசுவதற்கு முகாந்திரம் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை வர்த்தக சமன்பாடு மிக முக்கியம். ஆனால் சீனாவின் யுவான் தற்போது அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவிழந்து போவதால், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதிக்கே அதிக வாய்ப்பு. இதைத்தான் செம கடுப்பில் டிரம்ப் சீனாவை 'கரன்சி மானிபுலேட்டர்' (கரன்சி பரிமாற்றத்தில் விளையாடுபவர்கள்) என்று கடுமையாக சாடுகிறார்.
இதில் இன்னொரு முக்கியமான கோணம் இருக்கிறது.
அமெரிக்கா...
ரஷ்யாவை உடைத்ததில் இருந்து எகிப்து புரட்சி முதல், ஏன், இன்று தம்மாத்தூண்டு ஹாங்காங் போராட்டம் வரை பலர் கைகாட்டுவது அமெரிக்காவைத் தான். அது உண்மையோ இல்லையோ... உலகின் எல்லா பிரச்சினைகளுக்குள்ளும் மூக்கை நுழைப்பது அமெரிக்காவின் போக்காகவே இருந்து வருகிறது என்பது தான் பலரின் குற்றச்சாட்டு.
அமெரிக்கா தவிர சர்வ வல்லமை வாய்ந்த சோவியத் யூனியன் உடைக்கப்பட்டவுடன் இரு பெரும் நாடுகள் தான் உலகின் வல்லரசாக முடியும் என்ற நிலையில் இந்தியாவை வல்லரசாக விடாமல் உள்ளூரிலேயே பல உள்ளடி வேலைகள் நடக்க (இன்றல்ல... பல மாமாங்களாக இது தான் நிலை) சீனா சத்தமில்லாமல் இந்தியாவை முன்னேறி விட்டது.
இந்த சமயத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஒன்றுபட்டால் எப்படி இருக்கும்?!
இந்த வருட பிரிக்ஸ் மாநாட்டில் இதைத்தான் ஷீ ஜின்பிங் கோடி காட்டினார்.

குறிப்பாக அமெரிக்காவின் டிரம்ப், சீனாவுக்கு எதிராக தொடுத்திருக்கும் வர்த்தகப் போரில் இந்த நிமிடம் வரை சீனா பந்தயத்தில் முன்னணியில் இருப்பதாகவே தோன்றுகிறது.
இருந்தாலும் எதற்கு வம்பு என்று கடந்த பிரிக்ஸ் மாநாட்டில் ஷீ ஜின்பிங் விடுத்த அறைகூவல், இந்தியா மற்றும் ரஷ்யா, சீனாவுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது தான். (இந்தியா ரஷ்யாவுடன் தனது அடுத்த காய் நகர்த்தலை துவங்கி விட்டது தனிக் கட்டுரையாக)
உலகளாவிய பொறுப்பை இந்த மூன்று நாடுகளும் மேற்கொண்டு பன்முகத் தன்மையான உலகை ஏற்படுத்த வேண்டும். அதே சமயத்தில், உலக ஒற்றுமைக்கு ஜனநாயகமான ஒரு முன்னெடுப்பை துவக்க வேண்டும் என்றார். சுருக்கமான வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் அமெரிக்காவை மட்டும் சார்ந்து உலகம் இயங்குவது சரியல்ல என்பது தான் சீன அதிபர் சொன்னது!.
தற்போதைக்கு மோடிக்கும் ஷீ ஜின்பிங்கிற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது.
இருவருமே மிகப் பெரிய இராணுவ பலத்தை சேர்த்து வைத்துள்ளனர்.
இருவருமே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் தலைவர்கள்.
இருவருமே மக்கள் ஆதரவு கொண்ட புகழ் பெற்ற தலைவர்கள்.
ஷீ ஜின்பிங் அதிபரானதும் கம்யூனிச கட்சிகளில் உள்ள ஊழல்களை கண்டறிந்து, அந்த முக்கியஸ்தர்களை அகற்றினார். அது போலவே இதுவரை மோடியின் ஆட்சியில் பெரிதாக ஊழல் கறை எதுவும் படியவில்லை.
ஷீ ஜின்பிங் சீனாவின் நிரந்தர தலைவர். மோடியும் ஏறக்குறைய அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு இப்படியே தொடர்வார் என்பதும் இருவருக்கும் பரஸ்பர ஒப்பந்தகளை சுலபமாக ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் பிரதமாராக நேருவும், சீன அதிபராக மா சேதுங்கும் இருந்த போது அக்ஷாய் சின் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சினையால் போர் வெடித்தது. 1962 ஒரு மாதம் ஒரு நாள் நடந்த இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். பலர் காணாமலே போனார்கள்.
இனியும் இவ்வுலகம் ஒரு போரை சந்திக்கும் வலிமையில் இல்லை.
இந்தியாவும் - சீனாவும், ரஷ்யாவுடன் இணைந்து தங்கள் சக்தியை ஒருங்கிணைத்தால் ஆசியா மட்டுமல்ல உலகிலேயே மிகப் பெரிய வல்லரசாக உருவாக முடியும்.
இதைத்தான் இந்த மூன்று நாடுகளும் முன்னெடுக்கின்றன.
ஆக...நம் மகாபலிபுரம் வரலாற்றில் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிய இருக்கிறது. காத்திருப்போம்!

Leave a comment
Upload