
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தினை சிபிஐ கைது செய்து நீதிமன்ற காவலில் 14 நாட்கள் திஹார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். மாலை நேரத்தில் விசாரணை கைதியாக ப.சிதம்பரம் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். திஹார் ஜெயில் எண் 7 தனி செல் ரெடியாக இருக்க, அதில் ப.சி அடைக்கப்பட்டார். ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு உடல்பரிசோதனை செய்யப்பட்டது.
ப.சி-க்கு ஒரு மரக்கட்டிலும், ஆறு பெட்ஷீட்களும் சிறைத்துறையினரால் கொடுக்கப்பட்டது. ப.சி செல்லில் ஒரு வெஸ்டன் டாய்லட் இருக்கிறது. ப.சி. அறைக்கு அருகே இருக்கும் திஹார் சிறையின் நூலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் காலாற நடந்து சென்று டிவி பார்க்கலாம் அல்லது நாளிதழ்களை படிக்கலாம். ப.சி தங்கி இருக்கும் ஜெயில் எண் 7 ல் 600 முதல் 700 சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ப.சி.வயதை கருத்தில் கொள்ளப்பட்டு, ஜெயிலில் இருக்கும் சிறப்பு மருத்துவர் தினம் தோறும் இரவு 10 மணிக்கு அவரின் ரத்தகொதிப்பினை பரிசோதனை செய்து வருகிறார். ப.சி-யின் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உடையை தவிர வேறு எந்த பொருளையும் சிறைதுறையினர் அவரது செல்லுக்குள் அனுமதிப்பதில்லை. விடியற்காலையில் சில நேரம் ப.சி. அசந்து தூங்கி விட்டாலும், சிறைகைதிகள் எழுந்து பிரார்த்தனை கூடத்திற்கு செல்லும் சத்தத்தினை கேட்டு, தானும் ரெடி ஆகிவிடுகிறார். இருப்பினும் வாடிய முகத்துடன்தான் அவர் தனது செல்லில் இருக்கிறார் என சிறைதுறை அதிகாரி தெரிவித்தார்.

ப.சி. இருக்கும் செல்லிற்கு பக்கத்தில், மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் மருமகன் ரத்தூல் பூரி என்பவரை அகஸ்டா வெஸ்டாலேண்ட் மற்றும் வங்கி மோசடி வழக்கிற்காக அமலாக்க பிரிவினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக், பிரிட்டிஷ் தொழிலதிபதிபர் கிறிஸ்டியன் மைக்கேல் மற்றும் கார்ப்பரேட் குற்றவாளி தீபக் தல்வார் ஆகியோரும் ப.சி.யின் சிறையின் அடுத்தடுத்த அறைகளில் விசாரணை கைதிகளாக உள்ளனர்.. ப.சி. ஜெயில் செல்லில் முதல் நாள் இரவு முழவதும் தூக்கம் வராமல் தவித்ததாக சிறைதுறை வார்டன்கள் தெரிவித்தனர்.
தற்போது ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கிட்டதட்ட தனது அனைத்து விசாரணையும் முடித்து விட்டது என்றே தகவல். ஐஎன்எக்ஸ் வழக்கில் உடந்தையாக இருந்த சில அதிகாரிகளும் வழக்கில் கைது செய்யப்படலாம். இவ்வழக்கில் மிக விரைவில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய அமலாக்க பிரிவும் சிபிஐயும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஒரு வேளை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டால், ப.சிக்கு ஜாமீன் வழங்காமல் நீதிமன்ற காவலில், அதாவது ஜெயிலில் வைத்தே வழக்கினை தினம் தினம் நடத்தி இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் நீண்ட காலம் ஜெயிலிலேயே இருக்க வாய்ப்பு உள்ளது என்று சட்டத்துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள அதன் நிறுவனர்களில் ஓருவரான ராணி முகர்ஜி, தற்போது தன் மகள் கொலை வழக்கிற்காக கைது செய்யப்பட்டு மும்பை பைகுலா சிறையில் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்து, ராணி முகர்ஜியிடம் பல முக்கிய தகவல்களை ப.சிக்கு எதிராக பெற்று ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியினை தீவிரப்படுத்தியுள்ளது.
பல நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், வெளிநாட்டு பண பரிமாற்றம் செய்தற்கான வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. ப.சி.மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுபடுவது மிகக்கடினமாக இருக்கும் என்று சிபிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து சோனியாவின் சார்பாக காங்கிரஸின் மூத்த வழக்கறிஞர் முகுல் வாஸ்நிக், பி.சி.சாக்கோ, மாணிக்கம் தாகூர் உட்பட மூத்த தலைவர்களுடன் திஹார் ஜெயிலில் இருக்கும் ப.சி-யை பார்க்கச் சென்றனர். திஹார் ஜெயில் சூப்பிரடெண்ட் காங்கிரஸ் குழவினரை உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டார். நீதிமன்ற உத்திரவில் 'அவருடைய குடும்பத்தாரும் வழக்கறிஞரும் மட்டும்தான் சந்திக்க உத்திரவு இருக்கிறது என்பதால் உங்கள் கோரிக்கையை நிராகரிக்கிறேன்' என அவர் கூறியுள்ளார்.
"என் தந்தை ப.சி சிறையில் இருப்பதை அவமானமாக கருதவில்லை. அரசியல் ரீதியாக எங்களை பழிவாங்குகிறார்கள். பதில் சொல்ல முடியாதவர்களுக்கும், விமர்சனங்களை தாங்க முடியாதவர்களுக்கும், எதிர்க்க முடியாதவர்களுக்கும்தான் இது அவமானம். என் தந்தை அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். என் தந்தை சிறை செல்வதற்கு முன்பு மிகவும் தெளிவாகவும், தீவிரமாகவும் மத்திய அரசை விமர்ச்சித்தவர் என்பதை இந்த கைது உறுதிப்படுத்துகிறது. கடந்த வருடம் என்னையும் சிறையில் அடைத்தார்கள். வழக்கின் விசாரணை நடந்து வருகிறது, விரைவில் குற்றப்பத்திரிக்கை எங்கள் மீது தாக்கல் செய்ததும் நாங்கள் எங்களின் பதிலை தெரிவிப்போம். ஐஎன்எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் ஒன்றுமில்லாதவை!" என ப.சி. மகனும் காங்கிரஸ் எம்பி-யுமான கார்த்திக் சிதம்பரம் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
திஹார் சிறையில் தனக்கு கிடைக்கும் அனுபவங்களை சொல்வதாக டிவிட்டரில் அவரது சார்பாக ட்வீட் செய்யப்பட்டது . "உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. சில நாட்களாக ஏழைகளுடன் பேசும் வாய்ப்பினை பெற்ற போது அவர்கள் நியாயம் அநியாயத்தையும் பிரித்துப் பார்க்கும் தன்மையை கண்டு வியக்கிறேன். பொருளாதாரம் குறித்து கவலை கொள்கிறேன். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தையும் தற்போதைய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என்பதால் இந்த இருளிலிருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் எங்கே?" என்று சமூக வலைதளங்களில் தன் கேள்வியை எழப்பியுள்ளார்.
ம்...அடுத்த வாரம் ஹாட் டாபிக் அவரது ஜாமீன் சட்டப் போரட்டங்களாகத்தான் இருக்கும்! லெட் அஸ் வெயிட் அண்ட் ஸீ!

Leave a comment
Upload