
சீன அதிபர் ஷீ ஜின்பிங், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இணைந்து உலகில் ஒரு வர்த்தக வல்லரசாக வேண்டும் என்று இந்த வருட பிரிக்ஸ் மாநாட்டில் வலியுறித்தினார்.
இந்தியாவும் ரஷ்யாவும் தற்போது ஒரு புதிய அத்தியாயத்திற்கு வித்திட்டிருக்கிறது.
அதிலும் இந்தியாவின் இந்த புதிய முன்னெடுப்பு தமிழகத்திற்கு நிச்சயம் பயன் தரக் கூடியது.
மும்பையிலிருந்து செயிண்ட். பீட்டர்ஸ்பர்க் வரை கடல் மார்க்கமாக 40 நாட்கள் செல்லும் சரக்கு கப்பல்கள் இனி புதிய தடம் வழியாக (கொஞ்சம் மாநகர பேருந்து அறிவிப்பு போல இருக்கோ) சென்னையிலிருந்து, விளாடிவாஸ்டோக் வரையில் 24 நாட்களிலேயே சென்றடையும்படியான புதிய சரக்கு கப்பல் சேவையை துவங்க இருக்கிறது. கடந்த பல நாட்களாக ஊடகங்களில் இந்த செய்தி வந்தாலும் இங்கே கொஞ்சம் விலாவாரியாக பார்க்கலாம்.

மேலே குத்து மதிப்பாக காட்டப்பட்டிருக்கும் வரைபடத்தில் பார்த்தால் ரஷ்யாவை மும்பையை விட சென்னையிலிருந்து அணுகும் தூரம் வெகு குறைவு என்பது புரியும்.
ஆனால் ரஷ்ய வியாபாரிகளுக்கு இது எந்த வகையில் பயன் தரும்..?
மும்பையிலிருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு செல்ல 40 நாட்கள் ஆகும். அதிலும் சூயஸ் கால்வாய் வழியாகத்தான் செல்ல வேண்டும். அதற்கு உபரி கட்டணம். அதையும் மிச்சப்படுத்தலாம்.
விளாடிவாஸ்டோக்கிற்கு 24 நாள் தான். (நேரடியாக நடுவில் வேறு எந்த துறைமுகத்திலும் நிற்காமல் சென்றால் 15 நாட்களுக்கும் குறைவாக சென்று விடலாமாம். கி.மீ கணக்கில் 10,300 கி.மீ. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் பெரிய கப்பல்கள் சென்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்).
உண்மையில் ரஷ்யாவை இவ்வளவு குறைந்த நாட்களில் சென்றடைவது அனுகூலம் தான். ஆனால் ரஷ்யா என்பது தம்மாத்தூண்டு நாடு அல்ல.
அனைத்து ஊடகங்களும் ஒரு விஷயத்தை குறிப்பிடவேயில்லை. அதாவது பீட்டர்ஸ்பர்க்குக்கும் மாஸ்கோவுக்கும் உள்ள தூரம் 700 கி.மீட்டர் தான்.

சாலை வழியாக 8 மணி நேரம்.
விளாடிவாஸ்டோக்குக்கும் மாஸ்கோவிற்கும் 9131 கி.மீட்டர்கள்.

சாலை மார்க்கமாக டிரக்குகள் 6 நாட்களில் கடக்கும்! மாஸ்கோவிலிருந்து தூரமாக இருந்தாலும், சாலை வழி அல்லது ரயில்வே வழி செளகரியம் தான்.
நிச்சயமாக ஏற்றுமதி இறக்குமதிக்கு இது சிறந்த வழி. சந்தேகமேயில்லை.
இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில் இந்த கடல் வழி அதிலும் குறிப்பாக தென் சீனக் கடல் பகுதியைக் கடந்து செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய - ரஷ்ய உறவு என்பது இரு தலைநகரங்களுக்கு மட்டுமானதல்ல என்றிருக்கிறார் ரஷ்ய அதிபர் புடின்.
விளாடிவாஸ்டோக் நகரம் ரஷ்யாவின் ஒரு முக்கிய துறைமுகம். ரஷ்ய மொழியில் விளாடிவாஸ்டோக் என்றால் கிழக்கின் அதிபதி என்று அர்த்தமாம். பசிஃபிக் பெருங்கடலில் ரஷ்யாவின் மிகப் பெரும் துறைமுகம் விளாடிவாஸ்டோக். ரஷ்ய கடல்படையின் தலையிடமும் அது தான். டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் கிழக்கு தலைமையகம். மாஸ்கோ வழியாக ஐரோப்பிய நாடுகளையும் சுலபமாக இணைத்து விடும். ஆட்டோமொபைல் தான் இந்த துறைமுகத்தின் மிகப் பெரிய இறக்குமதி.
சென்னைக்கு விளாடிவாஸ்டோக்கிலிருந்து கிளம்பும் கப்பல்... ஜப்பான், கொரிய தீபகற்பம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூரை கடந்து அந்தமான் நிகோபார் வழியாக சென்னையை வந்தடையும். இது புதிய, உற்சாகமளிக்கும் கடல் பாதை தான்.
அது சரி... ஒரேயொரு சந்தேகம். இத்தனை நாளிந்த யோசனை வராமல் திடீரென வந்தது எப்படி..?
எப்படியோ, சரக்கு கப்பல்கள் மட்டுமல்லாமல் ஒரு சொகுசுக் கப்பலையும் அறிமுகப்படுத்தினால் அப்படியே தமிழக சுற்றுலா துறையும் பயன் பெறும். நாமெல்லாமும் ஜாலியா ஒரு டூர் போய் வரலாம்!

Leave a comment
Upload