
சமீபத்தில் தெருவில் தீடீரென ராகமாக ஒரே கோஷங்கள்...
“சின்னப் பையா.. பாகிஸ்தான் பைய்யா....
காஷ்மீ..ர கேக்குறான்....
காஷ்மீர் மேல்ல கைய்ய வச்சா..
பாக்கிஸ்தானே இருக்காதே.....
கோட்டமேடே இருக்காதே.....
அய்யோத்தி ஒன்னும் மசூதி அல்ல.....
ராமர் வாழ்ந்த தேசம்டா....”
என்னடா இதுனு வெளியே வந்து பார்த்தால் பிள்ளையாரு கடுப்பாக உம்மென்று வண்டியில் உட்கார்ந்து இருக்க அவர் முன்னாடி ஊர்வலமா இந்த கோஷத்தை போட்டுகிட்டு சிலர் போறாங்க...
அடக் கடவுளே..! காஷ்மீர், பாகிஸ்தான் எல்லாம் பிள்ளையாருக்கு எதுக்கு? ஒரு வாரமா கொழுக்கட்டை சுண்டலை படைச்சு அவரை சந்தோஷப்படுத்திட்டு தண்ணியில் கொண்டு போய் கரைக்கிற நேரத்தில் இப்படி ஒரு திகில் ஊர்வலம் வச்சு அவரை கடுப்பாக்கி கொண்டு போறதே இவங்களுக்கு வேலையா போச்சு...
கோவையில் நடந்த இந்த ஊர்வலத்தின் போது, பள்ளிவாசல் இருக்கும் வீதியை கடக்கும் சமயம் இந்த கோஷங்கள் இன்னும் பலமாக ஒலிக்கின்றன..
அங்குள்ள இஸ்லாமியர்கள் “எங்க தெருவை கடக்கும் போது எதுக்கு இப்படி கோஷம் போடுறீங்க..?னு கேட்க... பதிலுக்கு, “பாகிஸ்தான், காஷ்மீரை சொன்னா உனக்கு ஏன்டா கோவம் வருதுனு” சொல்ல...
“அது வந்து... அது வந்து.... டேய் நீ கோட்டைமேட்டையும் சேர்த்து சொன்னியே..!’னு சொல்ல ஒரே பிரச்சினை...
“சாமி ஊர்வலத்துல ஏண்டா அயோத்தி, காஷ்மீர் எல்லாம் இழுக்கிறீங்க..?”னு அவங்க கேட்டா....
“அடேய்..! இதுல என்ன தப்பு? அப்ப நீங்க மசூதியில எப்பவும் தனியா கூட்டம் போட்டு பேசுறீங்களே..! அத வீடியோ எடுத்து தைரியம் இருந்தா வெளியே போடு பார்ப்போம்...”னு இவங்க சொல்றாங்க...
ஆக மொத்தம் இவங்க எல்லாரும் இறைவனை வணங்குவதை விட தேவையில்வாத வேலையெல்லாம் செய்றாங்கனு தெரியுது...
இந்த களேபரத்தின் நடுவுல தீடீரென ஒருத்தருக்கு ஒரு சந்தேகம் வந்துடுச்சு... சமூகவலைத்தளத்தில் அவர் இந்த கேள்வியை கேக்குறாரு...
“பிள்ளையாருக்கு சதுர்த்தி கொண்டாடுறோம்... அதுபோல பிள்ளையாருக்கு முன்னாடியே இருந்த நம் மாரியம்மன், கருப்புசாமி போன்ற தமிழர்களின் பல சாமிகளுக்கு சதுர்த்தி எப்போ? தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்...
பின்குறிப்பு: நானும் இந்துதான். ( இப்படி போட்டு ஒரு சேஃப்டி பண்ணிக்கிறாராம்)
இந்த கேள்விக்கு பலதரப்பட்ட மக்கள் அவரவர் தன்மைக்கேற்ப சொன்ன விதவிதமான கமெண்ட்களை பாருங்க...
**சரித்திரத்தை விரல் நுனியில் வைத்திருப்பவர்: விநாயகரும் ஆதியிலிருந்து இங்க இருந்தவரு தான்.. முருகன் வள்ளியை திருமணம் செய்தது பல 1000 வருடங்களுக்கு முன்... அப்போதே அவர்கள் திருமணத்திற்கு உதவியவர் வினாயகர்...
**அதிகம் சினிமா பார்த்து பக்தி வளர்த்தவர்: அட முட்டாளே.. கேள்வியா கேக்குற..? பிள்ளையாரு எவ்வளவு காலமா இங்க இருக்காரு... ஆதாரம் 60 வருசத்துக்கு முன்னாடியே வந்துருச்சேடா... அதான்டா... திருவிளையாடல்னு சினிமாவா எடுத்து போட்டுருக்காங்களே..! இன்னுமா ஆதாரம் கேக்குக்குற..?
**நடுவுல ஒரு தம்பி: தமிழ் கடவுள் முருகன் இருக்க வேறு எவனுக்கும் கை கூப்பி வணங்கமாட்டேன்.
**ஆதி தமிழர்: இறப்பு பிறப்புக்கு அப்பாற்பட்டவர் எம் கருப்பன். சாட்டை கருப்பு, சங்கிலி கருப்பு, கோட்டை கருப்பு, சண்டி கருப்பு, மண்டி கருப்பு, மார்நாட்டு மாயக்கருப்பு, பதினெட்டாம்படி கருப்பய்யா... வரலாறுகள் இருக்கு, தேடிப்படிங்க.. ஏழைகளுக்கு இதயத்தில் உறுதி தரும் பரிவேட்டை ஆடும் சூரிக்காரர்...
**சாப்பாட்டு பிரியர்: விவசாயம் நன்கு விளைகின்ற வருடம் மாரியம்மன் கோவிலில் கூழுடன் பாயசமும் கிடைக்கும்.. பொங்கலும் கிடா விருந்தும் தூள் கிளப்பும்.
அதுவே மாரியம்மன் சதுர்த்தி...
**தத்துவஞானி: சீக்கிரமே தெரிந்து கொள்வீர்! கேட்டுவிட்டீரல்லவா!
**அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்: 365 நாளும் நம்ம சாமிகளை கும்பிடுறோம். (கண்ணீர் மல்க அம்பி ஆகி). பிள்ளையாருக்கு வருஷத்தில ஒரு நாளு தானேடா! ( பின் அந்நியனாகி கோபமாக) அது உனக்கு பொறுக்கலையா..?!!!
**தேசபக்தர் (பல்லை கடித்து கொண்டு): டேய் நீ நிஜமாவே இந்துவாடா....? உன்னைய பார்த்தா ஆண்டி இந்தியன் மாதிரி தெரியுது..!
**ஆசிரியர்: _சதுர்த்தினா என்னானு சொல்லு முதல்ல..?
**இரண்டு பக்கமும் சண்டைய மூட்டி விட்டு குளிர்காய்பவர்: ஆஹா.. ஆஹா... சூப்பரான கேள்வி... அறிவாளிகள் மட்டுமே பதில் சொல்ல முடியும்... எங்க யாராச்சும் இதுக்கு பதில் சொல்லிடுங்கடா பாக்கலாம்...
**எப்போதும் கூகுளில் குடி இருப்பவர்: நெட்ல சர்ச்ச் பண்ணி பாரு தெரியும்...
I think Friday is for mariamman.. Tuesday is for veeran...
**இயற்கை மற்றும் தமிழ் ஆர்வலர் : மாரி என்றால் மழை.... காற்று, நிலம், நீர், சூரியன், மரம் ஆகிய இயற்கை வளங்களை வணங்கிய அறிவார்ந்த சமூகம் தமிழினம்... மழை பொழியும் போதெல்லாம் சதுர்த்தி தான்....
**கேள்வி கேட்டால் பதில் கேள்வி கேட்டு எகிறுபவர்: யோவ்! ஏகாதசின்னா என்னன்னு தெரியுமா..? ஒன்னும் தெரியாது. ஆனா ஏதாவது ஒளரிக்கிட்டே இருக்கவேண்டியது. கும்பல்ல கூத்தடிக்கும் ஆசாமி தானே நீ.
பெரிய கோயில் பக்தர்: மாரி என்பது மாயா.... மாயா என்பது மாறிக்கொண்டே இருக்கும் காட்சிப்பிழை.. அதனால் அதை மஹாமாயா... அதாவது, மஹா மாரி என்று மறுவிவிட்டது...
அவசரக்காரன்: டேய்.. இவரு நம்ம மாரிய மேரினு சொல்றார்டா..!!
பெரியகோயில் பக்தர் (பயந்து): ஐயோ..!! கிருஷ்ணா..! கிருஷ்ணா..! நான் அப்படி சொல்லல..!!
**ஆதி தமிழர்: கிருஷ்ணாவா...? நாங்க கருப்பராயன், கருப்பண்ணசாமி கும்பிடுறோம்... எங்கசாமி, வீரமா மீசை வச்சிருக்கும்! கையில அருவா வச்சிருக்கும்! கிருஷ்ணரு புல்லாங்குழல் வச்சிருப்பாரு.. மீசை இருக்காது.. அவ்வளவு தான்..
**தினமும் பஞ்சாங்கம் பார்ப்பவர்: எதையும் புவியிலிருந்து நாம் கணக்கிட வேண்டும்.... இதை வைத்தே நாம் சூரிய உதயாதி, ஹோரை, குளிகன் காலம், கிரஹணம் மற்றும் மழை அளவு அறிகிறோம்.. மாரியம்மன் சதுர்த்தி இதை வைத்து கணக்கிட முடியாது.
**சிறுவயதில் திருக்குறளில் முதல் பத்து குறள்கள் மட்டும் படித்தவர்: வள்ளுவருக்கு சதுர்த்தி தெரியுமா..? எங்கனாச்சும் போட்ருக்காரா..? புதுசா சதுர்த்திங்கிற..?
**பெரியகோயில் பக்தர்: வள்ளுவர் வட மொழி புலமை பெற்றவர்..
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”
ஆதி என்பது வடசொல்...
பகவன் என்பது வட சொல்....
உலகு என்பது லோக் வடசொல்...
லோக் என்பது ஆங்கிலத்தில் look....
அது தமிழில் பார்....
பார் என்றால் உலகம் ....
விளையாட்டு புத்தியுடையவர்:
தமிழுல பாரு....
அதோ பாரு காரு....
காருக்குள்ள யாரு...
நம்ம நாட்டு நேரு...
நேரு என்ன சொன்னார்..?
எழுதி படிக்க சொன்னார்..!
அவசரக்காரன்: த... ச்சே..! உன்னைய ஒதைக்க சொன்னாரு..! வாயமூடு.. வெளாடுற நேரமாடா இது..? அந்த ஆளு அநியாயமா திருவள்ளுவரை வட நாட்டு சேட்டுங்குறான்..! கேக்க நாதியில்லையா..?
வெட்டொன்று துண்டு இரண்டு என முடிவை சொல்பவர்: அட நீ சும்மா இருப்பா..! பிள்ளையார் பிறந்தது தெரியும், அதனால் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மாரியம்மன் பிறந்தது தெரியாது, அதனால் அவருக்கு பிறந்த திதி நட்சத்திரம் தெரியாது...
லா பாயிண்ட் பேசுபவர் (அடி குரலில்): ஹலோ மிஸ்டர்..! பிள்ளையார் பிரதர் “முருகன் சதுர்த்தி’ ஏன் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தவும்.
நாத்திகவாதி: ரொம்ப ஆச்சர்யமா இல்ல... நம்ம எல்லா மத கடவுள்களுக்கெல்லாம் பிறந்த தேதி, பிறந்த ஆஸ்பத்திரி, பிரசவம் பார்த்த நர்ஸம்மா இவங்கள பத்தி ரெக்கார்ட் வச்சிகிறது....
இப்படி வலைதளங்களில் பிள்ளையார் சதுர்த்தி பற்றி விவாதங்கள் கலந்துரையாடல்கள் எழ, தீடிரென்று பார்த்தால் சென்னையில் திராவிட விடுதலை கழகத்தினர் போட்டிக்கு புத்தர் ஊர்வலத்தை நடத்தினர்...
இந்த ஊர்வலங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், “டாய்.. எல்லை மீறி போயிட்டு இருக்கீங்கடா..!” என புலம்ப...
“புத்தரைதான் நீங்க பிள்ளையாரா மாத்தி வச்சிருக்கீங்க.. கோயில்ல எல்லாம் புத்தர் சிலையோட தலைய உடைச்சிட்டு யானை தலை செஞ்சு வச்சிட்டீங்க..!”னு அவங்க குற்றம் சாற்ற...
“ஹலோ!! உங்க கண்ணு என்ன அவிஞ்சி போயிருக்கா? புத்தர் எந்த காலத்துல தொப்பை தொந்தியோட இருந்தாரு? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்” என்று திருப்பி கேட்டதோடு நிற்காமல், “வடக்கிலிருந்து வந்த பிள்ளையார்னு சொன்னீங்க... புத்தர் மட்டும் என்ன கன்யாகுமரிலிருந்து வந்தாரா? அவரும் வடக்கத்திய சாமி தான். பிள்ளையார் ஊர்வலமும் புத்தர் ஊர்வலமும் ஒன்னுதான்.. என்ன பிள்ளையாருக்கு இங்க தமிழ்நாட்டுல தமிழ்ல கோஷம் போடுவோம்.. புத்தருக்கு நீங்க... “புத்தம் சரணம் கச்சாமி - சங்கம் சரணம் கச்சாமி - தர்மம் சரணம் கச்சாமி”னு சமஸ்கிருதத்தில கோஷம் போடனும். அதான் வித்தியாசம்.. வந்தேறி மொழினு கோஷம் போடாம இருந்துராதீங்க.. சாமி குத்தம் ஆயிடும்..”னு திருப்பி நக்கலடிக்கிறாங்க...
நடுவில் “ஏன் புத்தர்..? நம்ம சாமியை வைத்து ஊர்வலம் நடத்திருக்கலாமே..!” என்று சற்குணமுள்ளவர்கள், சாந்த குணமுள்ளவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருத்தப்பட்டதாக கேள்வி...
இப்படியாக கோலாகலமாய் இந்த வருட பிள்ளையார் சதூர்த்தி நிறைவு பெற்றது.
கடைசியாக பிள்ளையார், “நானே தேவல.. உமக்கு கருப்பு கொடிகளோட ஊர்வலம் நடந்துச்சு போல.. சரி விடுப்பா..! அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா”னு புத்தர்கிட்ட சொல்லி சமாதானப்படுத்தி இருப்பார்.

Leave a comment
Upload