உணவு
ரசி... ருசி..! - வேங்கடகிருஷ்ணன்

20190811150951159.jpg

மயிலாப்பூரில் இருக்கும் மற்ற உணவகங்களை பற்றிப் பேசிவிட்டு, மாமி மெஸ் பற்றி பேசவில்லை என்றால் கபாலீஸ்வரர் கண்ணை குத்தி விடுவார். அதனால் இந்த வாரம் நான் பார்த்து வளர்ந்த இல்லை, என்னை தன் கூடவே வளர்த்த மாமி மெஸ் பத்தி சொல்லப் போகிறேன்...

90-களில் கபாலி கோயில் அருகில் பிச்சுப்பிள்ளை தெருவில் பெஞ்ச் போட்டு, தன் வீட்டு வாசலிலேயே உணவினை ஆசையாய் எல்லாருக்கும் பரிமாறுவார் மாமி. இன்றுவரை மாமிதான். அவர் பெயரையே யாரும் நினைவில் கொள்ளவில்லை. மாமி காலத்திற்கு பிறகு பெஞ்ச் உள்ளே போனது வீட்டு வாயிலில் கடை வந்தது.

மாமி மெஸ்ஸின் ஆரம்ப காலங்கள் இப்படித்தான் இருந்தது. பின்னர், நின்று கொண்டு சாப்பிடும் வசதி. முதல் முதலில் சட்னி-சாம்பார் தனியாக கரண்டி போட்டு ஒரு வாளியில் வைத்து, நாம் இஷ்டம்போல புகுந்து விளையாடுவதற்கு ஏற்றார்போல் வசதியாக இருந்தது. (இன்று இதை நிறைய பேர் பின் தொடர்கிறார்கள்) நிறைய பேர் பகவதி படத்தில், சிங்கமுத்து சொல்வது போல் சட்னி, சாம்பாரோடு இட்லியை பிசைந்து அடிப்பதை பார்க்க முடியும்.

மாமி இருந்தபோது மதியம் கலந்த சாதம் செய்து விற்பார், அது இன்றும் தொடர்கிறது. இவர்களுடைய ஸ்பெஷல் பாகற்காய் சாதம், அவ்வளவு சுலபமாக இது எங்கும் கிடைக்காது. மாமி மெஸ்ஸில் இது ரொம்ப டேஸ்ட். (கசக்காத பாகற்காய் இவர்களுக்கு எங்கேயிருந்து தான் கிடைக்குமோ?).

வெள்ளிக்கிழமை மாலை கபாலி கோவிலை சுற்றிவிட்டு நேராக வந்தால், சுட சுட கொழுக்கட்டை கிடைக்கும். உப்பும் காரமும் கலந்து ஒன்று இனிப்பு ஒன்று, இரண்டு வகையும் கிடைக்கும். ஆனால் ஆறரை மணி தாண்டிவிட்டால் தட்டு காலி.

20190811150702577.jpg


டிபன் வகைகளில் எல்லாம் கிடைக்கும். அரிசி உப்புமா, அடை இரண்டும் இவர்களது தனிச்சிறப்பு. அடைக்கு தொட்டுக்கொள்ள அவியல் மட்டுமல்லாமல், வீட்டில் சாப்பிடுவதுபோல் கூடவே வெல்லமும் தருவார்கள்.


எங்கள் வீட்டில் யார் போனாலும் ஆர்டர் செய்வது நெய் மசாலா தோசை, மசாலாவை தோசை மேல் பரப்பி தரச் சொல்வேன். அதேபோல ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் உண்டு. கேசரி, சூடாக மைசூர் பாக், குலாப் ஜாமுன் என்று சிறப்பு இனிப்புகளும் உண்டு.
மாமியின் இரண்டு புதல்வர்களின் அயராத உழைப்பால் இன்று நான்கு கிளைகள் துவங்கி, வெற்றிகரமாக பயணிக்கிறது மாமி மெஸ்.

20190811151114321.jpg


கடைக்கு வெளியே சாட் கடையும், ஜூஸ் கடையும் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
மாமி மெஸ்ஸில் சமீபத்திய இணைப்பு, ஏசி உணவகம். உட்கார்ந்து சாப்பிட வசதியாக...
இவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், தங்கள் துவக்கத்தை மறக்காமல் கவனிப்பு, உபசரிப்பு, தரமான சுவையான பில்டர் காபி.

20190811150836934.jpg


மயிலாப்பூர் வாழ் ரிட்டயர்டு மனிதர்கள் கபாலி கோயில் போவதாய் சொல்லிவிட்டு, நண்பர்களை சந்தித்து பஜ்ஜி, போண்டா காப்பியோடு பேசி சிரிக்க இன்றும் துணையாய் இருப்பது மாமி மெஸ் தான் (கேட்கும் டிபன் கிடைக்கும், வீட்டம்மாவுக்கு பார்சல் கண்டிப்பாக கிடையாது).

மைலாப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது கபாலி கோயில் மட்டுமல்ல, கூடவே மாமிமெஸ் கொழுக்கட்டையும் தான் .....!