தொடர்கள்
மில்லேனியல்கள் - 11 - வேங்கடகிருஷ்ணன்

புரிந்து கொள்வோம்... புரிய வைப்போம்...

20190811204215967.jpg

மில்லேனியல்களின் தேர்வு எப்படி அமைகிறது? ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்கும் முறையில் அவர்கள் எவ்விதம் செயல்படுகிறார்கள் என்பதை கவனித்தால் சில சமயம் ஆச்சரியமும் சில சமயத்தில் அதிர்ச்சியும் தோன்றும். அவர்களை பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் சில வாய்ப்புகள் / ரகங்கள் / விருப்பங்கள் உண்டு என்றால் முதலில் சிறிது குழம்பவே செய்வார்கள். முதலில் வருவதற்கே முன்னுரிமை என்பது அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் தேர்வு. (எதற்கு தேவையில்லாத பிரச்சினை என்கிற நினைப்பு) ஆனால், மற்றவர்கள் தங்களுக்கு தரப்பட்டிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பார்த்து, யோசித்து, அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து பின்னரே முடிவெடுப்பார்கள்.


உணவு விஷயத்தில் அவர்களை ஏமாற்றவே முடியாது. இதில் இரண்டே விஷயங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். பிடித்தது, நல்லது ஆகிய இரண்டு தான். அதே சமயம், பிடித்தது, நல்லதாய் இல்லாதிருக்கும் பட்சத்தில் ஆசைக்கே முன்னுரிமை. 'ம்ம் பரவாயில்லை, இந்த ஒருமுறை தானே..உடலுக்கு கேடு என்றாலும் பிடித்த பீட்ஸாவை ஒரு வெட்டு வெட்டுவோம்!' என்பது அவர்கள் தங்களுக்கு தாங்களே சொல்லிக்கொள்ளும் சமாதானம். நல்லது பிடித்ததாயிருக்கும் பட்சத்தில் அது முன்னுரிமை பெறும்.

வேலை தேடும்போது பிடித்ததை விட தங்கள் திறமை, அதற்கேற்ற ஊதியம் இதற்கே முன்னுரிமை அளிப்பார்கள். பெரிய கம்பெனி என்பது இரண்டாம்பட்சம் தான். இந்த இடத்தில் தான் இவர்களை பாராட்ட வேண்டியுள்ளது. தங்கள் திறமை வெளிப்பட வாய்ப்பு கொடுப்பவர்களே சரியான நிறுவனம் என்பது இவர்களின் தீவிர நம்பிக்கை. தன்னுடைய திறமையை மதிக்காத பெரு நிறுவனங்களில் வேலைக்கு சேர்பவர்கள் சில நாட்களிலேயே வெளி வந்து, வேறு திறமையை மதிக்கும் நிறுவனங்களில் சேருவது நிறையவே நடப்பதை நான் கண்கூடாக பார்க்கிறேன். வெறும் சம்பளத்தால் மட்டும் இவர்களை கட்டி வைத்திட முடியாது.


அதே நேரம், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை என்பது வருத்தம் தரும் விஷயம். அதுவாக நல்லபடி அமைந்தால் சரி, இல்லாவிட்டால், பெரிய முயற்சிகள் எதுவும் செய்து வெற்றிகர உறவாக அதை வழி நடத்த முனைவதில்லை! மனதைக் கவரும் அந்த துணைக்கே முன்னுரிமை, மற்றதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். ஏதாவது சரியில்லாமல் போனாலோ உடனே அந்த தொடர்பும் ரிலேஷன்ஷிப்பும் கட். அடுத்தது.... அடுத்தது என சட்டென 'மூவ் ஆன்' ஆகிவிடுவார்கள். அதுவே திருமணம் நடந்து அதன் பிறகு இருவருக்கும் ஒத்து வரவில்லையென்றால்.... உடனே டைவர்ஸ்.... அவ்வளவு தான்.... (இது பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்) அவர்களைப் பொறுத்தவரை பிரச்னை உடனே முடியவேண்டும். அநாவசியமாக இழுத்துக்கொண்டு நாலு பேர் "என்னாச்சு உங்களுக்குள்ள? ஃபேஸ்புக்ல ரெண்டு பேர் ஜோடி போட்டோவும் காணமே?" என யாரும் கேட்கக்கூடாது. அதை விட "ஓ! டைவர்ஸ் ஆயிடுச்சா? அடுத்து கமிட் ஆகிட்டீங்களா? இல்லே இன்னும் சிங்கிளா?" எனும் கேள்விக்கு பதில் சொல்வது பெட்டர்! ஆனால், இதுதான் பல பிரச்சினைகளின் ஆரம்பம் என்பதை அவர்கள் ஏனோ உணர்வதேயில்லை..... நம் வருத்தமே அது தான்....!


தீவிரமான விஷயங்கள் எதையும் வருங்கால பார்வையோடு அணுகுதல் இவர்களுக்கு கற்றுத் தரப்படவே இல்லை. ஒவ்வொரு நாளும் ஏற்படும் மாற்றங்கள், அதன் வேகம் இவை அவர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி ஒரு பிரச்னையை பார்க்க அனுமதிப்பதே இல்லை. அவர்களும் அதனைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. எல்லாம் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்கிற மனோ நிலை நிரந்தரமாகவே இவர்களோடு தங்கி விட்டது. சிலவற்றையாவது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்பதை நாம் இவர்களுக்கு புரிய வைக்கவேண்டியது அவசியமாகிறது. அது நமது தலையாய கடமையும் கூட... அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்... கூட... புரிய வைக்க முயல்வோம்!