கதை
தனிநாடு... - ஆர்னிகா நாசர்

20190814041844988.png

கிபி 2010 ஜுன் மாதம் 29ஆம் தேதி....


மேற்கு ஆஸ்திரேலியாவின் ஹெட்லாண்ட் துறைமுகத்திலிருந்து மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு ரெட் ஆக்டோபஸ் சரக்கு கப்பல் புறப்பட்டது. அக்கப்பலில் இருபது டன் தங்கம் இருந்தது. தங்கம் மும்பை துறைமுகத்தில் இறக்கப் படவேண்டும்.
கப்பல் பாங் என பெரும் சப்தம் எழுப்பி நீரில் பாய்ந்தது. கப்பலின் தங்கத்தை பாதுகாக்க நாற்பது மெஷின்கன் வீரர்கள் அரணாய் நின்றிருந்தனர்.


கப்பலில் எண்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருந்தனர். எண்பது ஊழியர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பராந்தகன், ஜெயக்கொடி எனும் இரு இளைஞர்களும் அடக்கம்.


பராந்தகன் 180 செமீ உயரன். சிவந்த நிறத்தன். மீசை இல்லாத க்ளாஸ்கோ பேபி முகம். வயது 28 ஆன பிரம்மச்சாரி. பராந்தகனை கடல் பயணம் எப்போதுமே குதூகலப்படுத்தும். நிறைய யோசித்து குறைவாக பேசக் கூடியவன்.


ஜெயக்கொடி 170 செமீ உயரன். கறுத்த நிறத்தன். முறுக்கு மீசைக்காரன். வயது 28ஆன பிரம்மச்சாரி. குறுகிய காலத்தில் நிறைய சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்கிற எண்ணம் உடையவன். நொடிக்கு அறுபது வார்த்தைகள் பேசக்கூடியவன்.


கப்பல் இந்தியப்பெருங்கடலில் மிதந்துகொண்டிருந்தது.


பராந்தகனும் ஜெயக்கொடியும் உயிர் நண்பர்கள். இருவரும் கப்பலின் மேல்தளத்துக்கு வந்து நின்றனர். “பரந்தகா! நாமிருவரும் அக்கா தங்கையை மணந்து கொள்ள வேண்டும். மதுரையில் பங்களா போல் வீடு கட்டி தரைத்தளத்தில் நீயும், முதல்தளத்தில் நானும் வசிக்க வேண்டும். நம்மைப் போலவே நம் மனைவிமாரும் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்…’


“ஆமாம் ஜெயக்கொடி!” ஒருவரையொருவர் கட்டிக் கொண்டனர்.


திடீரென்று சரக்கு கப்பலிலிருந்து அபாய ஸைரன் எழுந்தது. கப்பல் பரபரத்தது. அரை நாட்டிகல் மைலில் இன்னொரு கப்பல் தென்பட்டது.


“ஓவ்! கடல் கொள்ளையர்கள் வந்துவிட்டார்கள்!” கூவினான் பராந்தகன்.


‘ப்யூங்!’ ஜெயக்கொடியின் காதோரம் ஒரு தோட்டா சீறியது.


உக்கிரமான துப்பாக்கிச் சண்டை ஆரம்பித்தது.

அதற்குள் சரக்கு கப்பலை முட்டி மோதி நின்றது கொள்ளையர் கப்பல். கொள்ளையர் கப்பலிலிருந்து ஏணியை வீசினர்.


ஏணியில் குழிமுயலாய் கொள்ளையர் ஏறினர்.


ஏணியை அறுத்துவிட ரெட் ஆக்டோபஸ் வீரர்கள் முயன்றனர்.


ஆனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் ரெட் ஆக்டோபஸ் கப்பலுக்குள் புகுந்தோடினர்.


கொள்ளையர்கள் இடுப்பில் இருந்து கத்திகளை எடுத்து எதிராளிகளின் குரல்வளையில் செருகி இழுத்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் ரெட் ஆக்டோபஸ் கடல் கொள்ளையர்களின் கட்டுபாட்டுக்கு கீழ் போனது.


தங்கபெட்டிகளை தங்களது கப்பலுக்கு எடுத்துச் சென்றனர். அவர்களுக்குள் கர்ராமுர்ரா என பேசிக்கொண்டனர்.


அனைத்து தங்கத்தையும் தங்களது கப்பலுக்கு கடத்தியவுடன் ரெட் ஆக்டோபஸ்க்கு வெடி வைத்தனர்.


‘ரெட் ஆக்டோபஸ்’ வெடித்துச் சிதறியது.


ஒளிந்திருந்த பராந்தகனும் ஜெயக்கொடியும் லைஃப்ஜாக்கட் அணிந்து கொண்டு கடலுக்குள் குதித்தனர். கொள்ளையர் கப்பலை விட்டு வெகுதூரம் நீந்த ஆரம்பித்தனர்.

விடியும் போது அவர்களின் கண்களில் ஒரு தீவின் கரையோரம் தென்பட்டது. இருவரும் தீவின் கரையோரம் ஒதுங்கினர்.


பராந்தனின் முன் ஒரு குத்தீட்டி தரையில் குத்தி நின்றது.


நிமிர்ந்தான்.

ஒரு ஆதிவாசி கிழவர் நின்றிருந்தார். அவருக்கு பின் மூன்று ஆதிவாசி பெண்கள், மூன்று ஆதிவாசி ஆண்கள்.


பராந்தகனையும் ஜெயக்கொடியையும் தூக்கிக்கொண்டு தங்களது குடிசைக்குப் போயினர்....


ஒரு மாதம் உருண்டோடியது.


இந்த தீவு 100 கிமீ நீளமும் 60 கிமீ அகலமும் கொண்டது, இத்தீவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தென்னைமரங்கள் உள்ளன. இந்த தீவில் மூன்று ஆதிவாசி குழுக்கள் உள்ளன.


ஒரு குழுவின் பெயர் லுலும்பா. இதில் இருபது பெண்களும் பத்து ஆண்களும் ஐந்து குழந்தைகளும் உள்ளனர்.


இரண்டாவது குழுவின் பெயர் வல்சோ. இதில் முப்பது பெண்கள் 15ஆண்கள் 10 குழந்தைகளும் உள்ளனர்.


மூன்றாவது குழுவின் பெயர் துரிச்சா. இதில் 15பெண்களும் 10ஆண்களும் 8 குழந்தைகளும் உள்ளனர்.


இவர்கள் ஆடு, மாடு, பன்றிகள் மேய்க்கின்றனர். விவசாயமும் தெரியும்.


ஆறுமாத இடைவெளியில் பராந்தகன் ஆதிவாசிகளின் மொழியை கற்றுக்கொண்டான். மூன்று குழுக்களையும் வரவழைத்தான்.


ஒரு மேட்டின் மீது ஏறி பேச ஆரம்பித்தான் பராந்தகன். “நானும் ஜெயக்கொடியும் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். இனி நீங்கள் அனைவரும் எங்கள் அடிமைகள்... உங்கள் குழுவிலுள்ள பெண்கள் அனைவரும் எங்களுக்கு மனைவிமார்கள். நாங்கள் காலால் இட்ட வேலைகளை நீங்கள் தலையால் செய்யவேண்டும்!”


ஆதிவாசிகள் அனைவரும் கோரஸாய் “அப்படியே செய்கிறோம்!” என கூவி இரு இளைஞர்களின் கால்களில் விழுந்து சேவித்தனர்.


ஆதிவாசிகளின் கடினஉழைப்பில் தீவு பொன்விளையும் பூமி ஆயிற்று. பராந்தகனுக்கு 18 மனைவிகள் ஜெயக்கொடிக்கு 16 மனைவிகள்.


கிபி 2100 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி...


பராந்தகனின் பேரன் வனராஜாவும் ஜெயக்கொடியின் பேரன் உதயபேரிகையும் தத்தம் நண்பர்களுடன் அரிசியிலான சாராயத்தை குடித்துக் கொண்டிருந்தனர்.


“இந்தத்தீவு முன்னேறுனதுக்கு காரணம் எங்க தாத்தா பராந்தகன்தான்!” என்றான் வனராஜா.


“ஏன் பிரிச்சுச் சொல்ற? பராந்தகனுக்கு பாதி பங்கு இருக்குன்னா எங்க தாத்தா ஜெயக்கொடிக்கு பாதிபங்கு இருக்கு!” என்றான் உதய பேரிகை.


“உங்க தாத்தா எங்க தாத்தா பேரைவச்சு ஆதிவாசி பெண்களை நல்ல அனுபவிச்சு நூத்துக்கணக்கான பிள்ளைகளை பெத்து போட்டாரு. இதுதான் உங்க தாத்தாவின் சாதனை!’


“ஏன் உங்க தாத்தா ஆதிவாசி பெண்களை அனுபவிச்சு அவர் பங்குக்கு நூத்துக்கணக்கான பிள்ளைகளை பெறலையா?”


“எங்க தாத்தா பெத்தது எல்லாம் வீர பிள்ளைகள். உங்க தாத்தா பெத்தது எல்லாம் சொத்தை பிள்ளைகள்!’


“என்னடா விட்டா ஒரேடியா பேசிக்கிட்டே போற?”


வனராஜாவுக்கும் உதயபேரிகைக்கும் கைசண்டை மூண்டது. நாட்டுத் துப்பாக்கிகள் வெடித்தன. மரண ஓலங்கள் எழுந்தன.


தொடர்ந்து இருதரப்புக்கும் சண்டை வலுத்தது. ஜெயக்கொடி தரப்பு கால்நடைகளுக்கு விஷம் வைத்து கொன்றனர் பராந்தகன் தரப்பு.


பராந்தகன் தரப்பு வயல்கள் ஜெயக்கொடி தரப்பால் நாசமாக்கப்பட்டன.


வனராஜாவின் இளம் மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால்.


உதயபேரிகையின் இரண்டு மனைவிகள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.


இடையில் பல சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்தன. எனினும் பயனில்லை.


கிபி 2120ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள்...


பராந்தகன் தரப்பு நூறு பேரும் ஜெயக்கொடி தரப்பு நூறுபேரும் இருதரப்பாய் பிரிந்து பேச ஆரம்பித்தனர்.


“கடந்த இருபது வருடங்களாக நம்மிரு பிரிவினருக்குள் முட்டல் மோதல்கள் ஏராளம். அதனால் இருதரப்புமே வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறோம். நமக்கிடையே ஆன பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் நம்மில் யாருமே இந்த தீவில் உயிருடன் இருக்க முடியாது!”


“இந்தத் தீவுக்கு பராந்தகன் ஜெயக்கொடி என்று இரண்டு ராஜாக்கள். ஒரே உறையில் இருகத்தி இருக்க முடியாது. ஒரே காட்டில் இரண்டு சிங்கங்கள் ராஜாவாக ஆட்சி செய்ய முடியாது!”


“அதனால்?”


“இந்த தீவை அளந்து சரிபாதியாக இரண்டாக பிரிப்போம். ஒரு பாதிக்கு பராந்தகன் ராஜா. பராந்தகன் பகுதிக்கு பராந்தகன் நாடு என பெயர் சூட்டுவோம். இன்னொரு பகுதிக்கு ஜெயக்கொடி ராஜா. ஜெயக்கொடி பகுதிக்கு ஜெயக்கொடி நாடு என பெயர் சூட்டுவோம்!”


“தனித்தனி நாடு என்றால் தனித்தனி தேசீயக்கொடி தனித்தனி தேசீயகீதம் உண்டுதானே?’


“ஆமாம் பராந்தகன் தரப்பு பராந்தகன் நாட்டுக்குரிய தேசீய கொடியையும் தேசீய கீதத்தையும் தயாரிக்கட்டும். ஜெயக்கொடி தரப்பு அவர்களின் கொடியை அவர்களின் கீதத்தை!’


“பராந்தகன் நாட்டையும் ஜெயக்கொடி நாட்டையும் பிரிக்கும் எல்லைக்கோடு வரையப்படும் தானே?”


“கட்டாயம்… அவரவருக்கான இராணுவத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம்!”


“அவரவர் பகுதியினை நவீனப்படுத்த மற்ற நாடுகளின் உதவிகளை நாடலாம்…!’


“இருதனி நாடுகள் உருவாகும் தேதியினை முடிவு செய்வோமா?’


“வருகின்ற ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி பராந்தகன் நாடும் ஜெயக்கொடி நாடும் உதயமாகின்றன!”

- பராந்தகன் தேசீயக்கொடியில் குறுக்கே மூன்று வர்ணங்களும் நடுவில் கடலலைகளும் வலது கீழ் ஓரத்தில் ஒரு கப்பலும் காணப்பட்டன.


ஜெயக்கொடியின் தேசியக் கொடியில் 12 சதுரங்கள் காணப்பட்டன. முதல் சதுரத்தில் புள்ளிகள். இரண்டாவது சதுரத்தில் படுக்கை வச கோடுகள். மூன்றாவது சதுரத்தில் குறுக்கே கோடுகள். நான்காவது சதுரத்தில் சிறுசிறுவட்டங்கள். ஒருசதுரத்தில் கறுப்பு வர்ணம். ஒரு சதுரத்தில் தென்னை மரங்கள். ஒரு சதுரத்தில் மீன். ஒரு சதுரத்தில் விண்மீன்கள். ஒரு சதுரத்தில் பெரிய வட்டம். ஒரு சதுரத்தில் பிறைநிலா. ஒரு சதுரத்தில் பிரமிடு. ஒரு சதுரத்தில் இரு செவ்வகங்கள்.


பராந்தகனின் புகழையும் ஜெயக்கொடியின் புகழையும் இரு தேசியகீதங்கள் தனித்தனியே பாடின.


கிபி 2140 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி...


பராந்தகன் நாட்டு பிரதிநிதியிடமும் ஜெயக்கொடி நாட்டு பிரதிநிதியிடமும் ஆதிவாசி இளைஞன் மகிச்சோ பேசினான். “இந்த தீவின் உரிமையாளர்கள் நாங்கள்தான். கடவுளின் பெயரைக் கூறி பராந்தகனும் ஜெயக்கொடியும் எங்களை அடிமைப்படுத்தினர். தீவின் வடப்பகுதியை பிரித்து மகிச்சோ நாடாக்கி எங்களுக்கு கொடுத்து விடுங்கள். எங்களுக்கு தனிநாடு கொடுக்கவில்லை என்றால் உங்களிரு நாட்டிலும் தினம் தினம் வன்முறை வெடித்துக்கொண்டே இருக்கும்!”


நூற்றியெட்டு பேச்சுவார்த்தைகளுக்கு பின் இரு நாட்டு பிரதிநிதிகளும் “மகிச்சோ நாட்டை பிரித்து தர சம்மதிக்கிறோம்!’ என்றனர்.


- பூமியில் ஒரே ஒரு மனிதன் மிஞ்சியிருந்தாலும் அந்த மனிதனின் நிழல் தனிநாடு கேட்டு உரிமைக்குரல் எழுப்பவே செய்யும். மனிதனின் டிஸைன் அப்படி மக்களே.