பொது
தலைவர் இருக்கிறார்... ஜி. சுஜாதா

20190812182952556.jpg

என் பெயர் சுஜாதா. அமெரிக்காவில் வசிக்கிறேன். இந்திய நாட்டைப் பற்றியும் சென்னையைப் பற்றியும் அமெரிக்காவைப் பற்றியும் ஏதோ சிறிது தெரியும். ஆனால் நமக்கு வெகு தொலைவே இருக்கும் நிலவைப் பற்றி ஏதும் தெரியாது. பெளர்ணமி அருகே வரும் போது அந்த நிலவின் அழகை ரசிக்கத் தெரியும். அதற்கு மேல் அந்த நிலவைப் பற்றியோ அந்த நிலவை ஆராயும் விண்கலன்களைப் பற்றியோ ஏதும் தெரியாது.

ஜூலை மாதம் இந்தியா வந்திருந்த சமயம்…. இருபத்தி இரண்டாம் தேதி திருப்பதியில் ஶ்ரீ நிவாசரை சேவித்து விட்டு, கோவிலில் இருந்து வெளியே வந்த போது என் மகன் ஆகாயத்தை சுட்டிக் காண்பித்து “சந்திராயன் இந்த வானத்துல தான் போயிண்டு இருக்கும். இங்க பக்கத்துல ஶ்ரீஹரிகோட்டாலேந்து தானே லாஞ்ச் பண்ணிருக்கா…” என்ற போது கூட நான் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை.

வாட்ஸப்ப்பில் ஒரு மெசேஜ் வந்தது. செப்டெம்பர் ஏழாம் தேதி அதிகாலை 1:40 மணியளவில் சந்திராயன்-2 நிலவில் இறங்குவதால், அந்த மகத்தான சாதனையைக் கண் விழித்து காணுமாறு அந்த செய்தி சொல்லியது. அதை படித்துவிட்டு மறந்து போனேன்.

இப்படி இருக்ககையில் செப்டெம்பர் ஏழு வந்தது. இந்தியாவில் அதிகாலை ஒன்றரை மணி. அமெரிக்காவில் நான் வசிக்கும் இடத்தில் செப்டெம்பர் ஆறாம் தேதி மாலை நான்கு மணி. அன்று இரவு சாப்பிட்டிற்கு என்ன செய்யலாம் என்று கம்ப்யூட்டரில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது…. ஏதோ ஒரு தளத்தில் “சந்திராயன்-2 விக்ரம் லாண்டர் லைவ்” ஓடிக் கொண்டிருந்தது. சரி, என்ன தான் நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தால்….. விக்ரம் லாண்டரின் பாதையைக் காண்பித்தார்கள். அந்த பாதையின் விவரங்களை ரன்னிங் காமெண்ட்ரி போல் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். பின் ISRO விஞ்ஞானக் கூடத்தில் விஞ்ஞானிகள் அனைவரும் கம்ப்யூட்டர் திரையில் விக்ரம் லாண்டரின் பயணத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதை காண்பித்தார்கள். அந்த விஞ்ஞானிகளில் பலர் பெண்கள்…. சந்தோஷமான ஆச்சரியம்… இந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த சமயம், பாரதப் பிரதம்ர் நரேந்திர மோடி அவர்கள் திரையில் தெரிந்தார். வெள்ளை ஜிப்பாவிற்கு மேல் கருப்பு ஓவர் கோட் அணிந்து கொண்டு விக்ரம் லாண்டரை அவரும் தீவிரமாக பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. விக்ரம் லாண்டர் ஓவ்வொரு அடியாய் முன்னேற விஞ்ஞானிகள் கை கொட்டி ஆரவாரித்தனர்….. ஒரு திருமண இல்லத்தில் இருக்கும் பரப்பரப்பும் சந்தோஷமும் ISRO கூடத்தில் இருந்தது. அவர்கள் பேசுவது பலது புரியவில்லை என்றாலும், விக்ரம் லாஞ்சர் நிலவை நோக்கி முன்னேறி செல்வது நன்றாய் புரிந்தது…. அவர்கள் ஒவ்வொரு முறை கைதட்டி ஆராவரிக்கும் போதும், ஏனோ தெரியவில்லை மயிர்கூச்செறிந்தது…..

ஆனால் அரை மணியில் சூழ்நிலை மாறியது. பச்சைப் புள்ளியாய் திரையில் நகர்ந்து கொண்டிருந்த விக்ரம் லாண்டர், திடீரென்று நின்றுவிட்டது. என்ன ஆனது என்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து அதிலிருந்து தகவல் ஒன்றும் வரவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் காத்திருந்து பார்த்தனர். தகவல் வரவில்லை. விஞ்ஞானிகளின் முகத்தில் கலவரம். மாடியில் அமர்ந்திருந்த பிரதமருக்கு தகவல் சொல்வதற்காக ISRO தலைவர் திரு. சிவன் மற்ற விஞ்ஞானிகளுடன் சென்றார். அவர் நடையில் தளர்வு இருந்தது. பிரதமரிடம் மெல்ல விஷயத்தை சிவன் அவர்கள் சொல்ல, பிரதமர் கீழே இறங்கி வந்தார். அங்கு சோகத்தில் இருந்த விஞ்ஞானிகளைப் பார்த்தார்.

“நான் உங்களுடன் இருக்கிறேன்..Be courageous” என்று கையை உயர்த்தி வாழ்த்திவிட்டு, வலது பக்கத்தில் நின்றிருந்த ISRO தலைவர் சிவனின் முதுகையும், இடது பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு விஞ்ஞானியின் முதுகையும் பலமாய் தட்டிக் கொடுத்தார். வார்த்தைகளுக்கும் மிஞ்சிய வாஞ்சை அந்த முதுகு தட்டலில் தெரிந்தது.

மீண்டும் விக்ரம் லாண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர் விஞ்ஞானிகள். தொடர்பு கொள்ள இயலவில்லை. அதிலிருந்து தகவலும் வரவில்லை. மணித் துளிகள் கரைய... தகவல் வரவில்ல. அங்கிருந்த ஒருவர் கை குவித்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். ISRO தலைவர் சிவன் உட்பட ஆங்காங்கே விஞ்ஞானிகள் தலையைப் பிடித்துக் கொண்டபடி சோகத்தில் மூழ்க... இனி விக்ரம் லாண்டரிலிருந்து ஏதும் தகவல் வரப் போவதில்லை என்பது உறுதியானது. விஞ்ஞானிகள் துவண்டு போயினர். எத்தனை வருட உழைப்பு என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த சமயம்...

பிரதமர் மீண்டும் விஞ்ஞானிகளிடம் பேசினார்…..

“விக்ரம் லாண்டரிலிருந்து தொடர்பு வரவில்லை என்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் அனைவரின் முகங்களும் ஏதோ போல் ஆனதையும் பார்த்தேன். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். ஆனால் உங்களின் இந்த செயல் ஏதும் குறைந்த சாதனை இல்லை. இந்த தேசம் உங்களால் பெருமை கொள்கிறது. உங்களின் உழைப்பு மகத்தானது. விஞ்ஞானிகள் என்னிடம் கூறியபடி விக்ரம் லாண்டரிலிருந்து தொடர்பு வரத் தொடங்கினால், நமக்கு பல தகவல்கள் தெரிய வரும். Hope for the best. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பல. தேசத்திற்காகவும், விஞ்ஞானத்திற்காகவும், மனித குலத்திற்காகவும் நீங்கள் மிகச் சிறந்த சேவை செய்துள்ளீர்கள். உங்களுடன் என்றும் நான் இருக்கிறேன். நம்பிக்கையுடன் முன்னேறுவோம்…”

விஞ்ஞானிகள் அனைவரும் கைத்தட்ட பிரதமர் சிரித்தபடியே “உங்களுடைய கடமை, தேசத்தை மீண்டும் மகிழ்ச்சி ஆக்குவது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. Wish you all the best. Thank You”.

பிரதமர் விடை கொண்டார். ஆனால் அன்று அந்த சூழ் நிலையில், பிரதமரின் இந்த உரையைக் கேட்ட போது….. கண்ணில் நீர் வந்து விட்டது. பேசியது மொத்தமே நான்கு நிமிடங்களுக்குள் மட்டுமே இருக்கும். அந்த நான்கு நிமிடத்தில்…. துவண்டு போன விஞ்ஞானிகளைத் தட்டிக் கொடுத்து, ஊக்குவித்து, பாராட்டி கடைசியில் அவர்களின் கடமையும் நினைவுறுத்தி…. அப்பப்பா…

(இதற்கு நடுவில் ட்விட்டரில் ISRO தலைவர் சிவன் அவர்களுக்கும் மற்ற விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள் பறந்தன. “சந்திராயன் தோல்வி அடையவில்லை... சற்று தாமதத்துக்குள்ளாகியிருக்கிறது... விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்….” என்று ட்வீட்டுகள் பறந்தன.

நம் சாதனையைப் பொறுக்காத பாகிஸ்தானி ஒருவர் “சந்திராயன் தோல்வி அடைந்ததால் பிரதமர் மோடி ஏதும் பேசாமல் கோவத்துடன் வெளியேறினார்…” என்று டீவிட் செய்திருந்தார். இதற்கு பேர்தான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது. எவ்வளவு அழகாய் பேசிச் சென்றிருக்கிறார். அதை அப்படியே மறைத்து புரளி கிளப்புவது தான் அவர்கள் வேலை போல்.

விக்ரம் லாண்டர் ஒழுங்காய் நிலவில் சென்று இறங்கியிருந்தால், தேசம் பெருமை பட்டிருக்கும். பல்வேறு நாடுகள் நம்மை வாழ்த்தியிருக்கும். வெற்றியில் கூட நிற்பவர்களை விட தோல்வியில் துவண்டு போனபோது கைக் கொடுத்து தூக்குபவர் நமக்கு பிடித்தமானவர் ஆகிறார்.

என்ன தான் நடந்தாலும் தட்டிக் கொடுப்பதற்கு தலைவர் ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக்கை இருந்தால் எந்த தோல்வியும் வெற்றி ஆகும்.