
"தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச்செயல் " என்னும் குறளின் வழியே தனது புதல்வர்களை முந்தி இருக்கச்செய்த அற்புதமான தந்தை. அவரை போற்றி வருடாவருடம் அவருடைய பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடி, அவர் பெயரால் பல கலைஞர்கள், சான்றோர்களுக்கு விருது வழங்கி கௌரவம் செய்யும் " மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்" என்பதை நிரூபிக்கும் மகன்கள் என ஒரு உயரிய பாரம்பரிய குடும்பத்தின் தலைவர் "ஹரிகதா வாசஸ்பதி " ப்ரஹ்மஸ்ரீ T.S. பாலகிருஷ்ண சாஸ்திரிகள். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு.
பல கலை வித்தகர்கள் பிறந்த தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூரில் 1919 ல் ஆவணி மாதம் கிருஷ்ணா ஜெயந்தி அன்று பிறந்தவர் , அதனாலேயே அவருடைய தந்தை சாம்பமூர்த்தி கனபாடிகள் "பாலகிருஷ்ணன் " என்று பெயர் சூட்டினார். சிறுவயதிலேயே தந்தையாரால் வேதம், புராணம், இதிகாசம், தேவாரம், திருவாசகம், திவ்யப்ரபந்தம் என சகலமும் சொல்லித்தரப்பட்டவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்க்ரிதம் என ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஆசிரியர் என பாலகிருஷ்ணன் தந்தையை மிஞ்சிய தனயனாக இருக்கவேண்டும் என்று தயார் செய்து விட்டார். பதினாறு வயதில் ஹரிகதை காலக்ஷேபத்திற்கு பாலகிருஷ்ணன் தயார். இளவயதிலேயே , அன்றைய இம்பீரியல் வங்கி (இன்றைய ஸ்டேட் பேங்க்) யில் வேலையில் சேர்ந்தார், அபார ஆங்கில அறிவு, அத்துடன் திறமையாய், சரியானமுறையில் செய்த வேலை மேலாளர் உயர்வை சீக்கிரத்திலேயே வாங்கித் தந்தது.
அவரது மூத்த மகன் இயக்குனர், நடிகர் TSBK மௌலி சொல்வது போல் " காலையில் 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால், பேங்க் வேலை முடித்து , நேரே ப்ரவசன மண்டபத்தில் ஹரிகதை முடித்து அவர் வீட்டுக்கு வரும்போது இரவு 10 மணி ஆகிவிடும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டே ஆகவேண்டும் என்கிற வழக்கம் வைத்திருந்தார். என் தந்தை நாங்கள் என்ன செய்தாலும் அதை தடுத்ததில்லை, நாங்கள் எங்கள் துறையில் இன்னின்னபடி சாதித்திருக்கிறோம் என்று எல்லோரிடமும் பெருமையாய் சொன்னவர் அவர்".
அவருடைய சமகாலத்தவரான கிருபானந்த வாரியார் முன்னே இவர் நிகழ்த்திய ஹரிகதையை கண்ணில் நீர் வழிய வாரியார் கேட்டதை, அன்று கேட்டவர்கள் , பலரும் நெகிழ்வுடன் நினைவு கூறுவார்கள்..
மகன்கள் நடத்திய 97 வது வருட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விருது பெற்ற தமிழ்ப்புலவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் தனது ஏற்புரையில் குறிப்பிட்டது போல் " கமலஹாசன் அவர்கள் சாஸ்திரிகளை பற்றி சொல்லும்போது , 'கிருபானந்த வாரியார் அவர்களின் கதாகாலட்சேபம் K.S . கோபாலகிருஷ்ணன் அவர்கள் படம் போல , சாஸ்திரிகள் அவர்களின் ஹரிகதை K.பாலச்சந்தர் அவர்களின் நாடகம் போல' என்றார். அதனால் தான் அன்றைய ஜனங்கள் இருவரையும் அப்படி ரசித்துக் கொண்டாடினார்கள். துருவ சரித்திரம், நந்தனார் சரித்திரம் இதெல்லாம் சாஸ்திரிகள் சொன்னால், கேட்பவர்கள் எல்லாரும் நந்தனாய் மாறி சிவ தரிசனத்திற்காக அழுவார்கள், துருவனாய் மாறி தந்தை பாசத்திற்காய் ஏங்குவார்கள்.
இவரின் தனிச்சிறப்பு "தியாகராஜ ராமாயணம் ". என்னது? தியாகராஜர் ராமாயணம் எழுதினாரா ? இதென்ன புதுக்கதை என்று , வேண்டாதவர்கள் (அதாவது, நல்லவற்றை வேண்டாதவர்கள்?) காஞ்சி மஹாபெரியவரிடம் போய் "பற்ற" வைத்தார்கள். குடத்திலிட்ட விளக்கை குன்றில் இட விரும்பியது அந்த பேசும் தெய்வம். " பாலக்ருஷ்ணனை வரச்சொல்லுங்கோ " என்றார். நடக்கப்போவதை அறியாமல் தெய்வத்தின் சன்னதியில் பணிவாய் நின்றார் சாஸ்திரிகள்
" ஏன்டா, தியாகராஜர் ராமாயணம் பண்ணியிருக்காரா?" பணிவுடன் தலையை ஆட்டி மறுத்தார். " நீ ஏதோ சொல்றியாம்" சாஸ்திரிகள் பணிவாய் சொன்னார் " ஆழமா வாசித்துப் பார்த்தல், வால்மீகி சொன்னதைத்தான் , தியாகராஜரும் சொல்லியிருக்கார். ஒரு நானுறு பாட்டு அப்படி சரியாய், பொருத்தமாக இருக்கிறது , அதைத்தான் நான் தியாகராஜ ராமாயணம் என்று சொல்கிறேன் " என்றார். " ஓ அப்படியா ? எனக்காக ஒரு கதை சொல்லேன்" என்ற பெரியவருக்காக விபீஷண சரணாகதியை அங்கேயே சொன்னார் பாலகிருஷ்ண சாஸ்திரிகள்.. ரசித்துக் கேட்ட பெரியவா, "பிரமாதம் பாலா " என்று ஆசி வழங்கினார். " தியாகராஜ ராமாயணம் சரித்திரத்தில் நிலைத்து நின்றுவிட்டது "

அதேபோல அமெரிக்காவில் ஹரிகதை சொல்ல இவருக்கு அழைப்பு வந்தது. உத்தரவு கேட்டு பெரியவாளிடம் சென்ற போது நீண்ட அமைதிக்கு பின் பெரியவா கேட்டார் " கிராமத்துக்கெல்லாம் போய் கதை சொல்லியிருக்கியோ ? " இதையே தனக்கு கிடைத்த உத்தரவாக எடுத்துக்கொண்டு உடனடியாக தனது பேங்க் வேலையை ராஜினாமா செய்தார். தானே கார் ஒட்டிக்கொண்டு நிறைய கிராமங்களுக்கு சென்று ஹரிகதையால் அவர்களை மகிழ்வித்தார். பின்னர் அமெரிக்கப் பயணமும் அவரை தேடி வந்தது, இந்த முறை பெரியவாளின் ஆசியோடு போய் வந்தார்..
பதினாறு வயதில் துவங்கிய இந்த ஹரிகதை மழை 66 வருடங்கள் இடைவிடாமல் பெய்து 82 ம் வயதில் தான் நின்றது.
பாமரனும் ரசிக்கும் வண்ணம் கதையும் , சங்கீதம் அறிந்தவர்கள் போற்றும் வண்ணம் இசையும் , எல்லாரும் சிரிக்கும் வண்ணம் பிறக்கும் நகைச்சுவையும் இவரது காலட்சேபத்தின் தனித்தன்மை.
இவரின் இரண்டாவது மகன், கிரேசி மோகனின் நாடகங்களின் இயக்குனர். S.B. காந்தன் , தனது தந்தை மறைவிற்கு பின்னர் அவரது பிறந்தநாளை வெகு விமரிசையாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி , கலைஞர்களை சிறப்பிப்பதை தனது தந்தைக்கு செய்யும் நன்றிக் கடனாகவே நினைத்து செய்கிறார்.
கிரேசி மோகன் ஒரு முறை மேடையில் பேசிய போது " பாலகிருஷ்ண மாமாதான் எனக்கு பெரிய ஊக்கம், சின்ன வயதிலிருந்து அவரின் கதா காலட்சேபங்கள் கேட்க எனது பாட்டியுடன் செல்வேன், பின்னர் அவர்கள் குடும்பத்தில் ஒருவனானேன். ஒரு முறை மாமா கதை சொல்லிக்கொண்டிருந்தபோது மின்சாரம் நின்றுபோய் விளக்குகள் அணைந்து விட்டன, ஒருவர் மேடையில் ஒரு ராந்தல் (ஹரிகேன் விளக்கு ) கொண்டு வந்து வைத்தார். மின்சாரம் வந்துவிட உடனே மாமா சொன்னார் " ஹரிக்கு ஏன் லைட் ? " அதான் மாமா. அப்போதே பன்ச் வசனங்கள் சொன்னவர் அவர் , அவை பன்ச் என்று தெரியாமலேயே."
கிரேசி மோகன் அன்று மேலும் சொன்னார் " அவர் ஒரு ரத்தினம். நூறு வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் அறிய வகையான ரத்தினக்கல். "
அவரின் நூற்றாண்டு வருடமான இந்த ஆண்டில் அந்த அதிசய ரத்தினக்கல்லை அன்போடு நினைவு கூறுவோம். செப்டம்பர் 15ம்தேதி மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் நிகழவிருக்கும் அவரது நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வோம்.

Leave a comment
Upload