
இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழசை சௌந்தராஜனை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது சமூக வலைதளங்களில் 'விரைவில் தமிழக பாரதிய ஜனதா தலைவராக ரஜினிகாந்த் நியமிக்கப்படுவார்' என்ற வாந்தி பலமாக பரவியது. இதை ரஜினி மற்றும் பாரதிய ஜனதா மறுக்கவில்லை.
ஆனால் அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் இந்த சேதியை மறுத்தனர். ரஜினியின் நெருங்கிய ஆலோசகரான தமிழருவி மணியன் 'ரஜினி பாரதிய ஜனதாவில் சேர மாட்டார். அவர் தனிக் கட்சித்தான் துவங்குவார்' என்றார். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான திருநாவுக்கரசர் "ரஜினி தமிழக பாரதிய ஜனதா தலைவராக மாட்டார். அவர் சூப்பர் ஸ்டார். வேண்டுமானால் அவரை அகில இந்திய பாரதிய ஜனதா தலைவராக நியமிப்பார்கள் என்று சொன்னால் ஓரளவு நம்பலாம்" என்றார்.
பாரதிய ஜனதாவை பொறுத்தவரை என்றைக்கு ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தாரோ அப்போது முதலே அவரை பாரதிய ஜனதா தன் வளையத்துக்குள் இழுக்கும் முயற்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. பிரதமர் மோடி அந்த முயற்சியை மேற்கொண்டார். பாரதிய ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா பேசிப் பார்த்தார். மத்திய அமைச்சரான நிதின் கட்காரி வற்புறுத்தினார். குருமூர்த்தி நேரிலேயே பலமுறை பேசிப் பார்த்தார். யாருக்கும் எந்த உத்தரவாதமும் ரஜினி தரவில்லை.
ரஜினியை பொறுத்தவரை தனிக்கட்சி துவங்குவது நிச்சயம். தனிக்கட்சி பற்றிய அறிவிப்பு அநேகமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இருக்கக் கூடும். தனிக் கட்சிக்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தையும் ரஜினி செய்து முடித்து விட்டார். திராவிடக் கட்சிகள் பூத் கமிட்டி அமைக்க மிகுந்த சிரமப்படும். பெரும்பாலும் தேர்தல் நெருங்கும் நேரம் பூத் கமிட்டிகளை திராவிடக் கட்சிகள் அமைக்கும். ஆனால் ரஜினி பூத் கமிட்டி கூட ஓசைப்படாமல் அமைத்து விட்டார். ரஜினி தனது இயக்க உறுப்பினர்களுக்கு சொல்லியிருப்பது இதுதான். "நம் இயக்கம் சம்பந்தமான ஏற்பாடுகளை பத்திரிகைகளுடனோ மற்ற கட்சி நண்பர்களுடனோ இப்போதைக்கு யாரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நேரம் வரும்போது நானே முறையாக அறிவிப்பேன்" என்று அவர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.

நாம் அறிந்த வரையில் ரஜினி பாரதிய ஜனதாவில் சேர மாட்டார். அதே சமயம் பெரும்பான்மை பலத்துடன் டெல்லியை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவுடன் எந்த மோதல் போக்கையும் அவர் ஏற்படுத்திக் கொள்ள மாட்டார். அவரைப் பொறுத்தவரை தனிக் கட்சிதான். யாருடனும் கூட்டணி கிடையாது. இருநூற்றி முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்பதில் அதி உறுதியாக இருக்கிறார். இந்த அவரது முடிவுக்கு ஏற்றார் போல் பாரதிய ஜனதாவும் சற்று வளைந்து கொடுக்க முன் வந்திருக்கிறது. அதாவது முன்பு கலைஞர் - இந்திராகாந்தி கூட்டணியின் போது ஏற்பட்ட ஒப்பந்தம் போல "மாநிலம் முழுமையாக உனக்கு...மத்தியில் உனது பேராதரவு எனக்கு" எனும் தத்துவம்! இப்படியொரு புது உறவுக்கு கூட பாஜக ரஜினியோடு கை கோர்க்கத் தயாராகி விட்டதாகவும் அது தொடர்பாகவும் ரஜினியிடம் தீவிரமாக பேசி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தருகின்றன.
ரஜினியின் நெருங்கிய நண்பர்களிடம் நாம் பேசினோம். அவர்கள் சொன்னது: "ரஜினியின் ஃபார்முலா எம்.ஜி.ஆர். ஃபார்முலா போல! எம்.ஜி.ஆர். மத்திய அரசுடன் எப்போதும் மோத மாட்டார். அவர்களுடன் இணக்கமாக இருந்து மாநிலத்துக்கு தேவையானதை வாங்கி விடுவார். எந்நாளும் மாநில உரிமைகளை அவர் விட்டுக் கொடுத்ததில்லை. எம்.ஜி.ஆர். இருக்கும்போது இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை பிடித்துச் சென்றதில்லை. அதே போல் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது ஒரு பிரச்சனையாக அவர் ஆட்சிக் காலத்தில் பெரிதாக உருவெடுத்ததில்லை. அவர் மத்திய அரசுடன் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுடனும் சுமூக உறவு கொண்டிருந்தது ஒரு காரணம். ரஜினியும் அதே வழியைத்தான் பின்பற்ற இருக்கிறார். அதனால்தான் எம்.ஜி.ஆர். ஆட்சியை புகழ்ந்து பேசினார் ரஜினி"
அவர் எல்லா பிரச்சனைகளுக்கும் கருத்து சொல்வதில்லை என்று சிலர் சொல்கின்றனர். அதுவும் தவறில்லை என்கின்றனர் ரஜினி நண்பர்கள். "மு.க.ஸ்டாலின் எல்லா பிரச்சனைகளுக்கும் கருத்து சொல்கிறாரா?. சிதம்பரம் கைது விஷயத்தில் அவர் கருத்து அவருக்கே புரிந்ததா என்று தெரியவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு பாரதிய ஜனதாவை ஆதரித்து கருத்து சொன்னாலும் காங்கிரஸ் கட்சி பற்றி பெரிதாக அவர்கள் எதுவும் எதிர்ப்பாகப் பேசுவதில்லையே என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் அவர்கள்.
ரஜினியைப் பொறுத்தவரை மக்களின் முக்கிய பிரச்சனைகள் என்ன என்பதை பட்டியலாகவே தயார் செய்திருக்கிறார். நியாய விலை கடைகளில் எல்லா பொருட்களும் கிடைக்க வேண்டும். அவை தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறை காட்டுகிறார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு புதியதாக தனியார் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ அனுமதி வழங்கப்படாது. இதை ஒரு கொள்கையாகவே அறிவிக்க இருக்கிறார். உயர்கல்வி வரை இலவசமாக தர திட்டமிட்டிருக்கிறார். கல்வியின் தரம் அவர்கள் வேலை வாய்ப்பை குறிக்கோளாக கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் அவர் திட்டம். இதே போல் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க தனியார் நிறுவனங்கள் கூட அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அரசு சட்டமே இயற்ற வேண்டும் என்றும் யோசிக்கிறார். அதே போல் மதுக் கடைகளின் வேலை நேரத்தை முதலில் குறைப்பது, பிறகு படிப்படியாக மதுக்கடைகளையே குறைப்பது என்பதும் அவரது பரிசீலணையில் இருக்கிறது. நதிகள் இணைப்பு விஷயத்தில் அண்டை மாநிலங்களுடன் அவரே நேரில் பெசி தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட இருக்கிறார். அதேபோல் மக்களை பாதிக்காத அளவுக்கு வருமானத்தை அரசு அதிகரிக்க என்ன வழி என்று பொருளாதார நிபுணர்களிடமும்பேசி வருகிறார் என்கிறார்கள்.

இதற்கிடையே வழக்கம் போலவே இன்னொரு தரப்பில் 'ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்' என்ற வதந்தியும் பரவலாக பேசப்படுகிறது. அதற்கு காரணம் கையிலிருக்கும் படம் தவிரவும் அவர் இன்னும் இரண்டு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் முருகதாஸே இன்னொரு படம் ரஜினியை வைத்து இயக்க இருக்கிறார் என்றும் பேச்சு வருகிறது. ஆனால் ரஜினி தரப்போ இதனை முற்றிலும் மறுத்து வருகிறது. "டிசம்பர் மாதத்துக்குள் அவர் சினிமா படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு அவர் கவனம் முழுவதும் புதிய கட்சியில் சென்று விடும்" என்கிறார்கள்.
அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பல நடிகர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது. சிவாஜி கணேசன், பாக்யராஜ். டி.ராஜேந்திரர், நடிகர் விஷால் கூட புதிய கட்சி என்று ஏதோ பெயரை அறிவித்தார். அது கூட என்ன ஆனது என்று தெரியவில்லை. கமலஹாசன் கட்சி ஆரம்பித்து மெல்ல மக்கள் செல்வாக்கை பெற முயற்சிக்கிறார். இது நடிகர் சீமானுக்கும் பொருந்தும். ஆனால் கட்சி துவங்கி ஆட்சியை கைப்பற்றிய ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். மட்டுமே. ஜெயலலிதா கூட எம்.ஜி.ஆர். கட்சி, எம்.ஜி.ஆர். சின்னம், எம்.ஜி.ஆர். படம், எம்.ஜி.ஆர். பெயர் இதை சொல்லித்தான் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். சரியாக சொல்வதென்றால் தனது எழுபதாவது வயதில் ரஜினி தேர்தலை சந்திக்க இருக்கிறார். சாதனைகளுக்கு வயது தடையில்லை என்பது வரலாறு. இது ரஜினிக்கும் பொருந்தும்.

Leave a comment
Upload