
(ஹாங்காங் சரவண பவனில்... )
ஹாங்காங்கில் சரவணபவன் புதிய இடத்திற்கு மாறியிருப்பதையொட்டி சிவக்குமார் (சரவண பவன் அண்ணாச்சியின் மூத்த மகன் வந்திருந்தார்)
ஹாங்காங்கில் புதிய இடம் என்பதால் அங்கும் இங்கும் அலைந்து ஒவ்வொன்றாக சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவரது உள்ளூர் பார்ட்னர்களுடன் யோசனைகள் தெரிவித்த வண்ணம் இருந்தார். அவ்வப்போது வாடிக்கையாளர்களிடம் சென்று எப்படியிருக்கிறது டேஸ்ட் என்று கேட்கவும் தவறவில்லை.
கோட் சூட் போட்டு சினிமா நடிகர் போல இருந்தார் சிவக்குமார். ஆனால் அத்தனை பெரிய வியாபார சாம்ராஜ்யத்தின் வெற்றி தலைக்கு ஏறாமல் இனிமையாக அனைவரிடமும் பேசுகிறார்.
கேள்வி : ஏறக்குறைய 19 வெளிநாடுகளில் கிளைகள் இருக்கும் சரவணபவனில் குறைந்தது 10 நாடுகளில் சாப்பிட்டிருக்கிறேன். சுவை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கிறதே ? அதன் ரகசியம் என்ன ???
சிவக்குமார்: முதல்ல நன்றி. பாத்தீங்களா அது தான் வெற்றி. ஏன்னா நம்ம கம்பெனியில செஃப்பா ரொம்ப நாளா இருக்கிறவங்களைத் தான் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பறோம். அதுதான் எங்க முதல் ரூல். எங்க மெயின் செஃப் தான் எல்லா நாட்டுக்கும் அனுப்பறோம். அது தவிர ரா மெடீரியல்ஸ். சில ஊர்ல கிடைக்கலேன்ன வரவெச்சுருவோம். ஃபார்முலா. இதெல்லாத்தையும் விட ஒரே மாதிரி டேஸ்ட் கொடுக்கணும்னு அக்கறை. நீங்களே சொல்றீங்க பத்து நாடுகள்ல சாப்பிட்டுருக்கேன்னு… அப்ப உங்களை திருப்திப்படுத்தற பயம் எங்களுக்கும் இருக்குல்ல. சமைக்கறதுல தான் இருக்கு எல்லாம்!
கேள்வி : அப்பா இருக்கும் போது உங்க ஊழியர்களை நல்ல கவனிச்சுக்கிட்டாருன்னு எல்லாருக்கும் தெரியும். ஊழியர்களின் வீட்டு வாடகை, அவர்கள் குழந்தைகளின் கல்வி என பல நலத்திட்டங்களை அவர் செய்திருந்தார். அது எப்படி தொடர்கிறதா ???
சிவக்குமார் : ஒரு விஷயத்தை ஆரம்பிக்கறதுதான் கஷ்டம். தொடருவது ஈசின்னு நினைக்கிறேன். எங்க நிறுவனத்தை பொறுத்தவரை அப்பா ஆரம்பிச்சதை அப்படியே தொடருகிறோம். ஏன்னா எங்களுக்கு ஒரு ஃபேஸ் இருக்கு. அதை அப்படியே கண்டினியூ பண்றது ஈசியாதான் இருக்கு. ஆனா இதுவே வெளிநாடுகள்ள எங்க ஃபிரான்சைஸ் பண்றாங்களான்னு கேட்டா அது கஷ்டம். அது மட்டுமல்ல வெளிநாடுகள்ல சம்பளம் ஜாஸ்தியா இருக்கறதால மற்ற பெர்க்ஸ் குடுக்கணும்னுகிறது ஒரு பிரச்சினையா இல்லை. அனேகமா இந்தியால இப்படி ஒரு ஊழியர் நலத்திட்டம் எங்க ஓட்டல் நிறுவனத்தில மட்டும்தான் இருக்குன்னு நினைக்கிறேன்.
கேள்வி : ஹாங்காங்க்ல இப்ப இருக்கற போராட்ட சூழ்நிலையில சரவண பவன் எப்படி சமாளிக்குது ??
சிவக்குமார் : அது எங்களுக்கு மட்டும் இல்ல. ரெஸ்டாரண்ட் வெச்சிருக்கிற எல்லாருக்கும் இது பிரச்சினைன்னு நினைக்கிறேன். ஹாங்காங் மட்டும் இல்ல. எல்லா ஊர்லயும் இது மாதிரி பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். மத்த ரீடெய்லெர்ஸ் எல்லாம் பரவாயில்லை. இன்னிக்கு விக்கலைன்னா கூட அடுத்த வாரம் வித்துக்கலாம். ஆனா எங்களுக்கு அன்றாடம் வியாபாரம் நடக்கணும். அதான் பிரச்சினை. இப்ப ஹாங்காங்ல பிரச்சினை இருக்கத்தான் செய்யும். விரைவில் சரியாயிடும்னு நினைக்கிறேன். இதெல்லாம் விடுங்க ஒரு நாள் மழை பெய்ஞ்சாலே எங்க வியாபாரம் காலியாயிடும். அதுக்கு என்ன சொல்றீங்க.
கேள்வி : அடிக்கடி நாங்க கேள்விப்படற ஒரு விஷயம். சரவண பவனை சன் குழுமம் வாங்கிடுச்சு அப்படிங்கறாங்களே ?? அது உங்க காதுக்கு வருதா ??
சிவக்குமார் : ( சிரித்துக் கொண்டே ) ஆமாமாம். அது மட்டுமல்ல ஒரு ஃபேன்ஸி நம்பர் சொல்றாங்க 3400 கோடி அது இதுன்னு.. கேக்க நல்லாத்தான் இருக்கு. யாராவது அவ்ளோ குடுத்தா நல்லாத்தான் இருக்கும். இதை நீங்க அங்க போய்த் தான் கேக்கணும். நியூஸ்னு தான சொல்றீங்க. அது அப்படித்தான் இருக்கும்.

(சிவக்குமார் - சரவணபவன் அதிபர் )
கேள்வி : பாக்க ஜம்முனு ஹீரோ மாதிரியே இருக்கீங்களே.. .சரவணா ஸ்டோர்ஸ் போல நீங்களும் விளம்பரத்தில நடிக்கணும்னு ஆசை இருக்கா ??
சிவக்குமார் : பாஸ்… கலாய்க்கறீங்களே… அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆசை கிடையாது. இன்ஃபாக்ட் சரவணா ஸ்டோர்ஸ் யோகரத்தினம் எனக்கு அம்மா வழியில ஒரு ரிலேட்டிவ் தான். அவரு விளம்பரத்துக்கு செலவு பண்றது பிரமிக்க வைக்கும். அது மட்டுமல்ல.. அவரோட தன்னம்பிக்கை அவரை தமிழ்நாடு பூரா திரும்பிப் பாக்க வெச்சிருக்கு. இப்ப சினிமாலயும் நடிக்க போறாருன்னு கேள்வி பட்டேன். விளம்பரத்தின் மூலமா தைரியமா அவரே நடிச்சு அதை யாராவது கிண்டல் பண்ணினா கூட கவலைப் படாம அதை ஜெயிக்க வெச்சுருக்காரு பாருங்க அது தான் அவரோட வெற்றி. அதை உண்மையிலேயே பாராட்டணும்.
கேள்வி : அப்ப அவரு தான் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன். விரைவில்.....
சிவக்குமார் : யாரு நானா? … ஐயையோ நீங்க வேற ஆள விடுங்க பாஸ்.வேலையிருக்கு.
கிச்சனுக்குள் சென்று மறைந்தார், சிவகுமார்.

Leave a comment
Upload