தொடர்கள்
டேஞ்சர் தேசம் - 30! - சுதாங்கன்

20190820110825809.jpeg

காந்திஜி ஏன் அப்படி நினைத்தார் என்பது யாருக்கும் தெரியாது.


"முற்காலத்தின் முனிவர்கள், ரிஷிகள் செய்வது போல் நான் இங்கு வெறுங்காலால் நடந்து இந்தப் பகுதி முழுவதற்கும் செல்லப்போகிறேன்" என்று தனது சீடர்களிடம் அவர் அறிவித்தார்.

கூறியது போலவே வெறுப்பும், சந்தேகமும், வேற்றுமையும் நிரம்பிய நவகாளிப் பகுதியிலுள்ள நாற்பத்தேழு கிராமங்களுக்கும் வெறுங்காலுடன் அவர் நடந்தே சென்றார். கல்லும், முள்ளும் நிரம்பிய ஒற்றையடிப் பாதைகளிலும், மூங்கில் பாலங்கள் மீதும் அவர் நடந்தார். ஒவ்வொரு கிராமத்திலும் ஆத்திரமுற்றிருந்த மக்களை சந்தித்துப் பேசினார். சிதறிப்போன அமைதியை மறுபடியும் உண்டாக்க முயற்சி செய்தார்.

"மனிதகுலத்தின் அக்கிரமங்களுக்காக பிராயச்சித்தம் தேடிப் புறப்படும் யாத்திரை இது. தெய்வமே எனக்குத் துணை. நான்கு உதவியாளர்களைத் தவிர வேறு எவரும் என்னுடம் வரவேண்டாம். நாம் செல்லும் கிராமங்களில் நமக்கு என்ன கொடுக்கப்படுகிறதோ அதை உண்போம். இல்லையேல் பட்டினி கிடப்போம். தங்குவதற்கு கூரை கிடைக்காவிட்டால் வெட்ட வெளியில் அல்லது ஏதாவது ஒரு மரத்தடியில் தங்குவோம்.


காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக்கும் டெல்லியில் தங்களது முடிவில்லாத விவாதங்களில் இருக்கட்டும். நாம் நமது லட்சியப் பயணத்தை தொடருவோம். புண்பட்ட ஆத்மாக்களுக்கு ஆறுதல் என்கிற மருந்தை அளிப்போம்" என்று காந்திஜி அறிவித்தார்.

‘இதுவே என் கடைசி முயற்சி. இரத்தத்தாலும், நெருப்பாலும் கறைப்பட்டுப் போன இந்தக் கிராம மக்களிடையே மறுபடியும் அஹிம்சை என்கிற உணர்வை என்னால் உண்டாக்க முடியுமானால், இந்தியாவையே விழுங்கக் காத்திருக்கும் மதவெறியை விரட்டிவிட முடியும்’ என்றார்.

தனது நொறுங்கிப் போன கனவை நனவாக்கும் முயற்சியில், மூங்கில் கழியை ஊன்றியவாறு அவர் முன்னே செல்ல, அவரது நான்கு உதவியாளர்கள் பின்னே சென்றார்கள். வெற்றிலைத் தோட்டங்கள், தோப்புகள், வயல்கள் வழியாக அவர்கள் சென்றபோது கடைசியாக ஒரு முறை அவரை தரிசிக்க ஸ்ரீராம்பூர் வாசிகள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.

காந்திஜியின் குழு கண்களுக்கு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அவர் தமக்கு மிகவும் பிடித்தமான ரவீந்திரநாத் தாகூரின் பாடலை
உரத்த குரலில், ராகம் தாளம் இவைகளுக்குச் சம்பந்தமில்லாமல் பாடிக்கொண்டு போவதைக் கேட்டார்கள். அந்தப் பாட்டு, ‘உனது அழைப்பிற்கு அவர்கள் செவிசாய்க்காவிட்டால், தனித்துச் செல், தனித்துச் செல்’ என்பது.

பல கிராமங்களில் அவரை ஏனென்று கேட்பாரில்லை. சில கிராமங்களில் நுழைவதற்கு முன் ‘காந்தியே! திரும்பிப் போ. எங்களுக்கு நீ தேவையில்லை. உன் சொந்த நலனுக்காக கூறுகிறோம்... திரும்பிப் போய்விடு’ என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட படுதாக்கள் அவரை வரவேற்றன. ஒரு கிராமத்தில் அவர் நுழையும் பாதையில் மலத்தை இறைத்து வைத்திருந்தார்கள். காந்திஜி இலைகள் நிரம்பிய மரக்கிளைகளை ஒடித்து பாதையிலிருந்த மலத்தை சுத்தம் செய்துவிட்டு மேல் சென்றார்.

பல நூற்றாண்டுகளாக இந்தியாவை பசி, பட்டினிக்கு இணையாக சாபம் போல் பிடித்துக் கொண்டிருந்த இன, மதப் படுகொலைகளை ஒரேயடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற மாபெரும் லட்சியத்துடன் காந்திஜி தமது நெடும் பயணத்தைத் தொடர்ந்தார்.

அதுவரை உலகம் கண்டிராத அஹிம்சை என்கிற வெற்றிகரமான ஆயுதத்தின் மூலம் தென் ஆப்பிரிக்காவில் பல துயரமான போராட்டங்களுக்குப் பிறகு பெரு வெற்றிகளைக் குவித்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1915-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி இந்தியாவின் நுழைவாயில் என்றழைக்கப்படும் பம்பாய் நகரின் ‘கேட்வே ஆஃப் இந்தியா’ என்கிற வளைவுக்குள்ளிருந்து வெளிவந்த போது இந்திய மக்கள் அவரை இனம் கண்டு, அவருக்கு ஒரு வீரத் தலைவனுக்கு அளிப்பதைப் போன்ற பிரும்மாண்டமான வரவேற்பை அளித்தார்கள். அப்போது அவர் கையில் வைத்திருந்த எளிமையான தோற்றமுடைய சூட்கேஸ் உள்ளே பருமனான கையெழுத்து பிரதி இருந்தது. ‘இந்திய சுயராஜ்யம்’ என்பது அதன் தலைப்பு.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி இந்திய மண்ணில் காலடி வைப்பதற்கு முன்னதாகவே, இந்திய சுதந்திரத்தைப் பற்றி சிந்தித்து அதனை எப்படி அடைவது என்ற திட்டத்துடன் வந்தவர், அவர். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தென் ஆப்பிரிக்கா அவருக்கு ஒரு பயிற்சிக்களமாக இருந்தது.

இந்தியாவில், அகமதாபாத் நகரில் சபர்மதி ஆற்றின் கரையில் ஒரு ஆஸ்ரமத்தை நிறுவி, அங்கிருந்து கொண்டு வழக்கம்போல், ஏழை எளியவர்கள், அடக்கப்படுவோர், துன்பத்திலிருப்போர் போன்ற மக்களுக்கு உழைக்கும் பணியை அவர் ஆரம்பித்தார். அதன் பிறகு, வெள்ளை தோட்ட முதலாளிகளுக்கெதிராக பீகார் குடியானவர்களின் போராட்டம், அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டம், பம்பாய் மாகாணத் தொழிலாளர்கள் போராட்டம், என பல போராட்டங்களுக்கு அவர் தலைமை வகித்து நடத்தினார். இவரது அயராத உழைப்பையும் தியாகங்களையும் போற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் காந்திஜிக்கு மிகவும் பொருத்தமான ‘மகாத்மா’ என்கிற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

1919-ல் இந்திய சுதந்திர உணர்வுகளை நசுக்குவதற்காக பிரிட்டிஷார் கொண்டு வந்த மகா கொடுமையான ரெளலட் சட்டம், மகாத்மா காந்தியையும் பிற காங்கிரஸ் தலைவர்களையும் திக்குமுக்காட வைத்தது. இதற்கு எதிராக என்ன செய்வது என்று நாள் கணக்கில் சிந்தித்த மகாத்மா காந்தி, ஒரு எளிய ஆனால் வல்லமையான எதிர்ப்புப் போராட்டத்தை கண்டுபிடித்தார்.


(தொடரும்)