தொடர்கள்
பயணங்கள் முடிவதில்லை! பதிலளிக்கிறார் டாக்டர் T. காமராஜ். - சந்திப்பு வி. சந்திரசேகரன்

20190819162448165.png

பாலியல் ரீதியான நமது சந்தேகங்களுக்கு இந்த வாரமும் பதிலளிக்கிறார் பாலியல் சிகிச்சை டாக்டர் T. காமராஜ்


பாலியல் துறை பற்றிய சந்தேகங்களுக்கு விடை தேடுதல் அவசியம்தானா?!

நிச்சயம் அவசியமே! பாலியல்துறை என்றாலே பலரது புருவங்கள் உயருகிறது - இவ்வளவு அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும். இதை ஏன் இப்போது பேசவேண்டும்? நான்கு சுவற்றுக்குள் அலச வேண்டிய, நிகழ வேண்டிய ஒரு விஷயத்தை ஏன் பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்? செக்ஸைப் பற்றி பேசுவதை கூட நாம் விரும்புவதில்லை. அரசியல், ஆன்மீகம், சினிமா, சுற்றுச்சூழல்... என எல்லாவற்றையும் பொதுவெளியில் பேசலாம். பேசவும் வேண்டும். ஆனால், பாலியல் தடைசெய்யப்பட்ட விஷயமாக போய்விட்டது. பள்ளியிலும் கூடாது. டாக்டர்களிடமும் பேசக்கூடாது. பெற்றோர்களிடமும் கூடாது. சந்தேகங்கள் சந்தேகங்களாகவே இருந்து விட்டு போகட்டும். திருமணமானபின் தானே தெரிந்து கொள்ளட்டும்.

நம் சமூகத்தின் இந்த விபரீத எண்ணப் போக்குதான் இன்று நீதிமன்றங்களில் ஏராளமான விவாகரத்து வழக்குகளை சந்திக்க வைத்துள்ளது. பல அழகான குடும்பங்கள் சுக்குநூறாகியுள்ளன. மற்றொருபுறம் போதிய விழிப்புணர்ச்சியின்றி, இளசுகளை தவறான பாதைக்கு தள்ளியுள்ளது. விளைவு? எய்ட்ஸ் உட்பட பல்வேறு விதமான பால்வினை நோய்களுக்கு ஆளாகி, அரும்பு, மொட்டாகி மலர்வதற்கு முன்பே உதிர்வது போல வாழ்வை இழக்கும் கொடுமை!

வழிகாட்டுபவர் இருந்தும் பாதை தெரியாத போது, போலி மருத்துவர்கள் உள்ளே நுழைந்து தவறான எண்ணங்களை இளைஞர்கள் மனதில் விதைக்கும் அநியாயமும் இன்றும் தொடர்கிறது. தவிர இன்னமும் இந்த மண்ணில் அறிவியலுக்கு எதிரான பழமை கட்டுக்கதைகளை ஒரு பெரிய கூட்டம் நம்புவதும் பிரச்சனயை மேலும் சிக்கலாக்குகிறது. போறாத குறைக்கு சினிமா, சின்னத்திரை, சமூக வலைதளங்கள் தவறான பிம்பங்களை சித்தரிப்பதும், சாமானியனின் உணர்வுகளுக்கு தீனி போடுவதும் போல காட்சிகளை வைப்பதும் நடக்கிறது. பொறுப்பற்ற கூட்டமாக பாலியலுக்கு அறிவியல் வெளிச்சம் பாய்ச்சுவது என்பது சற்று பிரம்ம பிரயத்தனம் தான்! எனது இந்த முயற்சிக்கு சில ஊடகங்கள் மெதுவாக செவி சாய்த்துள்ள நிலையில் ‘விகடகவி’ துணிச்சலாக முன் வந்து என்னிடம் பேட்டி கண்டு பல்வேறு வினாக்களுக்கு விடை தேடியது எனக்கு உண்மையிலேயே நல்ல அனுபவம் மட்டுமல்ல! நிறைவானது ம் கூட. கடந்த மார்ச்சில் தொடங்கிய இந்தப் பயணம் செப்டம்பர் வரை தொடர்ந்தது. இந்த ஏழு மாதங்களில் இளைய தலைமுறையின் பல சந்தேகங்களுக்கு விடையளிக்க எனக்கு அறிய வாய்ப்பாக அமைந்தது. எது Myth (கட்டுக்கதை), எது நிஜம் என விளக்கும் போது எனக்கே பல கேள்விகள் ஆச்சரியமளித்தன. படித்தவர்களே பாலியலைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கி இருப்பது புரிந்தது. அதுதான் எங்களுக்கு பெரிய சவால்.

என் விழிப்புணர்ச்சி பயணம் இன்னும் வேகம் எடுக்க வேண்டும் என்றுகூட தோன்றியது. இப்போதைக்கு இந்த தொடரை முடித்துக்கொள்கிறேன். திரையுலக பாஷையில் கூறினால் ‘இது இடைவேளை’ தான். மீண்டும் வருவேன். நிறைய கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். ‘விகடகவி’ நிர்வாகிகளுக்கும், வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. பயணங்கள் முடிவதில்லை!