தொடர்கள்
நெகிழ்ச்சி
பிச்சைக்காரரின் தாராள மனசு! - மாலாஸ்ரீ

20200804202007128.jpeg

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க, அங்கு பிச்சை எடுக்கும் ஒருவர், தனது சேமிப்பான ₹1.10 லட்சத்தை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். அவருக்கு சிறந்த சமூகசேவகர் விருது வழங்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பாண்டி (70). இவர் வயது முதிர்வின் காரணமாக, தற்போது மதுரை நகரில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பினால், ஏழை குடும்பங்களில் பலர் சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுவதாக பாண்டிக்கு தெரியவந்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் முதல், பாண்டி 10 முறை தலா ₹10 ஆயிரத்தை மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளார். தற்போது 11-வது முறையாக கடந்த 3-ம் தேதி மாவட்ட கலெக்டரிடம் ₹10 ஆயிரத்தை பாண்டி வழங்கியிருக்கிறார். இதன்மூலம் அவர் சிறுக சிறுக தான் பிச்சையெடுத்து சேர்த்த ₹1.10 லட்சத்தை, ஏழைகளின் கொரோனா சிகிச்சைக்காக நிதியுதவி அளித்திருக்கிறார்.

இதுகுறித்து பாண்டி கூறுகையில், ‘கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே, நான் அரசிடம் நிவாரண தொகை வழங்கி வருகிறேன். என்னுடைய சூழ்நிலையால் நான் யாசகம் பெற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன். எனது நிலை யாருக்கும் வரக்கூடாது. எனது அன்றாட வாழ்க்கைக்குப் போக மற்ற சேமிப்பைதான் நான் வழங்கியிருக்கிறேன். இதில் நாலு பேருக்கு நன்மை கிடைக்குமானால் எனக்கு அதுவே போதும்’ என கண்ணீர் மல்க கூறுகிறார்.