

காவிரி மைந்தன்

உன் நெஞ்சைக் கேட்டுப் பார்!
அன்பிற்கினியவளே..
ஒவ்வொரு நாளும் உன்னோடு உலவிக் களிக்கின்ற உலாதானே இன்பத் தமிழ் மடலாய் இதயம் முழுவதும் விரிகிறது!
நேற்றைக்கும் அப்படித்தான்!
நாளைக்கும் அப்படித்தான் எனும்போது இன்றைக்குமட்டும் என்ன வேறாக இருக்குமா?
இந்த நியதி என் தேவிக்குத் தெரியாததா?
அன்பின் பாசுரமாய் அடியே இது ஆவதனால் அதுவே ஆதார ஸ்ருதியாகும் நம் காதலுக்கு!!
வார்த்தைகள்தானே உணர்வின் பகிர்வுகள்! எண்ணிப்பார்!
ஏடும் எழுத்தும் இல்லையென்றால் எங்கே நம் காதல் மலர்ந்திருக்குமா? கனிந்திருக்குமா? தொடர்ந்திருக்குமா?
பக்தியின் மார்க்கத்திலும் இறைவனைப் போற்றவும் நாமாவளிகள்! ஸ்தோத்திரங்கள்!! பாராயணங்கள்!!
காதல் மட்டுமென்ன? அன்பின் வடிவம்தானே!
உன்னை நான் தொடவும் என்னை நீ தொடவும் உள்ளத்தால் முடிகிறதென்றால் அன்பில் பூத்துவரும் இன்பமடல்களன்றி வேறென்ன மார்க்கமுண்டு?
சொல்வாய் அதை நீ இன்று!!
உன்னை எண்ணி வரையுமிந்த சொற்கோலங்களில் எத்தனை சுகம் என்பதை உன் நெஞ்சைக் கேட்டுப் பார்!
அப்பப்பா.. உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு இத்தனைப் பெரிய மடலெதற்கு என்று கேட்டதற்கு இத்தனை விளக்கமா என்று ஓடிவந்து ஓராயிரம் முத்தமிட்டாய்!
அன்பின் ஆழம் அறிய நீ வைத்த அத்தனைத் தேர்வுகளிலும் நான் வெற்றிபெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்!
அதன்பிறகே அன்பே உன் மனதில் எனக்கு இடம்கிடைத்தது என்பதை நான் அறிவேன்!
இப்படியெல்லாம் ஒரு தேடல் வாழ்க்கையில் இல்லையென்றால் வாழ்விதற்கு அர்த்தம் என்ன?
நேற்று நாம் பிரிந்தபோது இருந்த மனம் இன்று மீண்டும் சந்திக்கும் போது இருக்க வேண்டும் என்றால் அது கல்லாய்.. சிலையாய்.. உணர்வற்ற வடிவாய் இருக்கும் பொருளில் நடக்கும்!
எனினும் அன்பால் மீண்டும் நாம் நம்மை உயிர்ப்பித்துக் கொள்கிறோமே அது எப்படி?
உனக்காக நான்.. எனக்காக நீ.. என்கிற உன்னதமிது!
நீ வேண்டும் என்பதால் நான் பின் தொடர்கிறேன்.. நான் வேண்டும் என்பதால் நீ எனைத் தொடர்கிறாய்!
உனக்கு வலிக்கும்போதெல்லாம் நான் இங்கே துடிக்கிறேன்!
எனக்கு வலிக்கும்போதெல்லாம் அங்கே நீ தவிக்கிறாய்!
எனக்காக துடிக்கிற இன்னொரு ஜீவன் என்பதில் எனக்குள் எத்தனை பலம் பிறக்கிறது தெரியுமா?
உனக்காக பிறந்தேன் என்று பிறகெப்படி நான் என்னைக் கருத முடியும்? சில விஷயங்களைத்தான் நேரிடையாக உணர்த்தமுடியும்!
சில விஷயங்கள் நாமாக புரிந்துகொள்ளவேண்டியது!
ஒரு நாள் உன்னிடமிருந்து பதில் இல்லையென்றால் உள்ளம் என்னவாகும் என்பதை ஒவ்வொரு முறையும் நீ உணர்ந்திருக்கிறாய்!
எனவேதான்.. வலி பிறக்கும் முன்னதாக வழி திறக்கிறாய்!
இதற்காகவே நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!
உறவுகளுக்கு அப்பாற்பட்டு அல்ல அதைவிட மேன்மையாய் விளங்குவதால்தான்.. எனக்கு என்ன வேண்டும் என்பதை நீ உணர்கிறாய்!
ஓடிவருகிறாய்! அறிவுரை முதல்.. அன்புமழைவரை தருகிறாய்!
பசியும் உறக்கமும் நமக்கு வேறானதாக இல்லாமல் ஒரு சேர இருப்பதன் ரகசியம் உனக்கும் எனக்கும் தெரியுமல்லவா?
எந்தப் புள்ளியில் இதயம் இணைந்ததோ.. அந்தப் புள்ளியில் அழகழகாய் கோலமிட்டு.. ஆனந்தப் பண்பாடி.. வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றும் இனிய பொருள் அளித்து.. அன்பின் ஒளிவெள்ளம் தோன்றும் இருளையெல்லாம் அகற்ற வைப்போம்!
பால் எங்கே? பழமெங்கே? பாவையின் இதழெங்கே? நீ தேடும் கிளியிங்கே!
வேண்டும்வரை கதைபடித்து விடியலுக்குப் பொருள் சொல்லுவோம் வா!
அழகே உன் வண்ணங்களும் அதைப்பற்றிய எனது எண்ணங்களும் புதிய கோணத்தில் ஆராய்வோமா!!
நீ ரகசியமாய் பேசும் ஒரு வார்த்தை நான் பகிரங்கமாய் எழுதும் பல வார்த்தைகளுக்குச் சமம் என்பதில் எனக்கு ஐயமில்லை!
இச்சைகள் தீரும் இன்பத்திருநாளில் பச்சைவிளக்கேற்றும் பாவையின் சாகசங்கள் பள்ளியறைக்கு மட்டும் என்பதை நானறிவேன்!
மல்லிகை வெண்மை நிறம் காட்டுகிறதே அங்கென்ன சமாதான உடன்படிக்கையா நடக்கப் போகிறது என்று உன்னிடம் நான் கேட்டேன்!
சிவப்புரோஜா இதழ்கள் கட்டிலெங்கும் கொட்டிக்கிடக்கிறதே அதற்கும் பொருள் கேட்பீரோ என்றாய்!
இதற்கெல்லாம் விடைசொல்ல வேண்டாம் என்றே விளக்கின் ஒளியைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொண்டிருந்தேன் நான்!
அகல்விளக்கின் திரியில் அன்பே உன் முகம் மட்டும் அழகியலில் ஒரு தீவாய்..
நான் அங்குக் கடத்தப்பட்டவனாக!!

Leave a comment
Upload