
ஸ்ரீ காஞ்சி பெரியவரின் குரல் - 11
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
ஸ்ரீ மஹா பெரியவா கடலையும் நதி நீரையும் கொண்டு ஒரு மிகப்பெரிய சித்தாந்தத்தை அருளியிருக்கிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் நமக்குth தேவையான அளவுக்கு ஏற்றவிதமான வாழ்க்கையை நடத்தினால், கடவுள் எனும் அந்த பரமாத்மா நம்மை எதிர்கொண்டு அழைத்துச் செல்வான். சமுத்திரம் அமைதியாக ஆடாமல் அசையாமல் இருக்கும்போது, ஒரு காற்று திடீரென அடித்தால் உடனே அதில் உள்ள நீர்த்துளிகள் கும்பலாக தோன்றி, உடனே மற்றுமொரு காற்று அடிக்கும்போது அந்த குமிழிகள் உடைந்து, அது நீரில் கலந்துவிடும். அப்படித்தான் சமுத்திரம் மாதிரி இருக்கும் நம் மனது, மாயை என்ற காற்றினால் அடிக்கப்பட்டு, சஞ்சலங்கள் ஏற்பட்டு, பின்பு மனதில் குமிழ்கள் போல் ஜீவன்கள் தோன்றி மறைகிறது. ஆசாரியனுடைய கிருபை கடல் காற்று போல் நம் மேல் பட்டால், அந்த குமிழ் உடைந்து சமுத்திரத்தில் நீர் கலப்பது போன்று, நாமும் பரமாத்மாவோடு ஒன்றாகக் கலக்கிறோம்.
உலகம் தோன்றியதிலிருந்து கடலில் உள்ள நீரின் அளவு குறையாமல் தான் இருக்கிறது. அதிலிருந்து நீர் ஆவியாக பிரிந்து மேலே சென்று பின்பு தொடர்ந்து பல இடங்களில் திரிந்து நதி, ஓடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று பல உருவங்கள் எடுத்து மீண்டும் கடலில் கலக்கிறது. அதனால் சமுத்திரத்தில் எப்போதும்போல் நீர் இருக்கிறது. சமுத்திரத்தில் ஏற்பட்ட நீர் மழையாகி எல்லா இடங்களுக்கும் சென்று திரும்பி சமுத்திரத்திலே கலக்கிறது. மழைக்காலத்தில் மழையாகவும், வெள்ளமாகவும், மிதமாகவும் நீர் பெருகுகிறது. வெயில் காலத்தில் வறண்டு கிடக்கிறது. குழாயில் கூட தண்ணீர் வருவதில்லை, கடல் நீர் வற்றுவதில்லை. அதே போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் போதும் கடலில் நீர் அதிகமாக பெருகுவது இல்லை.
உதாரணத்திற்கு பணக்காரர்களை சொல்லலாம். அவர்களிடம் இருக்கும் சொத்துக்கள் என்றும் குறையவே குறையாது. ஆனால் சொத்துக்களை அவர்கள் விதவிதமாக மாற்றிக்கொள்வார்கள். ஒரு வீட்டை விற்று அதனை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்திருப்பார்கள். அல்லது வேறு இடத்தில் நிலம் வாங்குவார்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். அவர்களுடைய சொத்து மதிப்பு சுற்றி சுற்றி குறையாமல் அவர்களிடம் இருக்கும். அதேபோன்றுதான் நீரானது, சுற்றிச்சுற்றி குறையாமல் அப்படியே இருக்கும். அப்படித்தான் பரமாத்மா பலவிதமாக தோன்றியிருக்கிறார். தோன்றிய பின்னர், அந்த கடல் மாதிரி குறையாமல் இருக்கிறார். அவரால் சிருஷ்டிக்கப்பட்ட நமக்கு கூடுதல் குறைவுகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் அவருடைய ஞானம் என்றும் கூடாமலும் குறையாமலும் அப்படியே இருக்கிறார்.
வடநாட்டில் சோனா என்ற ஒரு நதி இருக்கிறது அந்த நதி சிவப்பு மண் வழியே ஓடுகிறது. ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா நதி, கிருஷ்ணா என்றால் கருப்பு நிறம் என்று பொருள். கருப்பு மண்ணில் ஓடுகிறது. அதே போல் கங்கை நதி வெள்ளை மண்ணில் ஓடுகிறது. இப்படி பலவிதமாக பல பிரதேசங்களில் பல வண்ணங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சிகப்பு நிற மண்ணில் சோனா நதி, கருப்பு நிற மண்ணில் கிருஷ்ணா நதி, வெள்ளை நிற மண்ணில் கங்கை நதி போல் நம் மனது பலவிதங்களில் பல என்ன ஓட்டங்களில் ஓடுகிறது. மனித ஜீவபடைப்புகளின் சுபாவம் அதுதான். எப்படியானாலும் கடைசியில் போய் பரமாத்மா வேண்டும் ஞானத்தை அடையவேண்டும். ஆற்று நீரும் அப்படித்தான் பல நிலைகளில் பல இடங்களில் ஓடினாலும், அவைகளெல்லாம் சமுத்திரத்தில் போய்த்தான் கடைசியில் கலக்கின்றன. ஆங்கிலத்தில் Water finds its level என்று சொல்வார்கள். நீரானது ஒரே மட்டத்தில் இருக்கும். அது எங்கிருந்தாலும் கடலில் இருந்தாலும் சரி, கிணற்றில் இருந்தாலும் சரி.. ஒரே மட்டத்தில் இருக்கும். நாமும் அதிக செலவுகள் செய்யாமல், அகலக்கால் வைக்காமல், தாட்பூட் என்று ஆடம்பரமாக இல்லாமல், நம்முடைய நிம்மதியை குறைக்கக்கூடிய எந்தவித உருட்டல் புரட்டல் வேலையும் செய்யாமல் அடக்கமாக நமது அளவு அறிந்து வாழ்ந்தால், கடலில் கலக்கச் செல்லும் ஆற்று நீரை கடல் வந்து அழைத்துச் செல்வது போல் பரமாத்மா நம்மை அவருள் அழைத்துக்கொள்வார். அந்த ஞானம் நமக்கு கிடைத்து விட்டால் கடல் நீர்போல் எப்போதும் நாம் அமைதியாக இருப்போம்.
ஓவியம்: TSN

Leave a comment
Upload