முருங்கைக் கீரை...

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் ஒரு மருத்துவ குணத்தை கொண்டிருக்கிறது. வீட்டுக் கொல்லை புறங்களில் வளரும் முருங்கை மரத்தை நம் முன்னோர்கள் எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம்.
இதனை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். நாம் இதனை தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம், கற்பகத் தரு என்று அழைக்கின்றனர்.
முருங்கையின் நற்குணங்கள் ஏராளம். முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும், மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது. குறைவான விலையில் கிடைக்கும் அது அதிக சத்து நிறைந்தது. முருங்கைக் கீரை, முருங்கை காய், ஈர்க்கு, பூ, விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களும் பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடிய மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் பயன்படுகிறது. எனவே “உணவே மருந்து, மருந்தே உணவு” என்னும் பழமொழியை முருங்கைக் கீரையை ஒப்பிட்டுக் கூறினால் மிகையாகாது.
“தாளி முருங்கைத் தழை தூதனம் பசலை
வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணில் – ஆளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாம்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்…..
– அகத்தியர் குணவாகம்
தாளிக்கீரை (ஒருவகைக்கொடி), முருங்கைக்கீரை, தூதுவளை, பசலை, அறுகீரை ஆகியவற்றில், ஏதாவதொரு கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து, சிறிதளவு பசு நெய் சேர்த்து தினமும் காலையில் மட்டும் நாற்பது நாள்கள் உண்டு வந்தால், ஆண்மை பெருகும்.
கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் முருங்கை மரம் பெரும்பாலானோர் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது. முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.
முருங்கைக்கீரையின் அற்புதங்கள்:
முருங்கை மரத்திலேயே அதிக சத்தான பகுதி முருங்கைக் கீரை. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மற்றும் மாங்கனீஸ், புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் ‘சி’ உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ‘ஏ’ உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது. புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கைக் கீரையில் இருக்கின்றது.
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்:
முருங்கைக் கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவைகளை நீக்கும்.
முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடம்பில் நல்ல ரத்தம் ஊறி ரத்த சோகை, தோல் சம்மந்தபட்ட வியாதிகள்குணமாகும்.
முருங்கை இலைச்சாற்றுடன் தேனும், இளநீரும் சேர்த்துக் குடித்தால் அதிக பலமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு படுக்கச் செல்லும் முன் முருங்கைக் கீரைச்சாறும் தேனும் கலந்து கொடுத்தால் பார்வை கூர்மை பெறும்.
முருங்கைக் கீரை சமைத்து சாப்பிட ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மை அகலும். பெண்களின் கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது.
வாய்ப்புண், வயிற்றுப் புண், கடுமையான ரத்த சீதபேதி முதலிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நம்பிக்கையான மருந்தாகும்.
நரம்புத் தளர்ச்சி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், உள்ளவர்களுக்கு முருங்கைக் கீரையை சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கின்றனர்.
அடுத்தவாரம் வள்ளலார் அருளிய தீராத நோய் தீர்க்கும் ஞான மூலிகை கரிசலாங்கண்ணி கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!

Leave a comment
Upload