
இந்த பூனையும் பால் குடிக்குமா?!
1998 ஆண்டு, இங்கிலாந்திலுள்ள மருத்துவமனை…..
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின், தகன சான்று ஆவணங்களை ஆடிட் செய்ய மருத்துவமனையின் உள்ளூர் பணியாளருடன், மருத்துவர் சூசன் பூத் பணியை தொடங்கினார்.
தகன சான்றினை ஆராய்ந்த மருத்துவருக்கு பெரும் அதிர்ச்சி…!
சமீபத்தில் மருத்துவமனைக்கு வந்த பெரும்பான்மையான வயதான நோயாளிகள், முழு ஆடைகள் களையாமல் உட்கார்ந்த நிலையில் மரணம் அடைந்தனர் என்று தகன சான்றுகள் வழங்கப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் கடும் நோயால் பீடிக்கப்பட்டு வந்த நோயாளிகள் யாரும் படுக்கையில் உயிர் துறக்கவில்லை என்பதை ஆவணங்கள் சுட்டி காட்டியது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று சந்தேகத்தினை ஆடிட் செய்ய வந்த மருத்துவருக்கு தோன்றியது!
வழக்கத்திற்கு மாறாக, அனைத்து தகன சான்றிதழ்களிலும் மருத்துவமனையில் பணிபுரியும் பொது மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் கையெழத்திட்டு சான்றிதழ் வழங்கி இருந்தார்.
தனது மேலாதிகாரிகளுக்கு தகன சான்றிதழில் இருக்கும் நிறைய மரணங்கள் மர்மமாக இருக்கிறது என்று குறிப்பு அனுப்பிவிட்டு, காவல்துறைக்கும் தனது ரகசிய அறிக்கையை ஆஸ்பித்திரியை ஆடிட் செய்ய வந்த மருத்துவர் அனுப்பி வைத்தார்.
மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவர் பணியில் இருந்த போது மருந்துவமனையில் இறந்தவர்களுக்காக அவர் வழங்கிய தகன சான்றிதழ்களை, இங்கிலாந்தில் இயங்கும் ஜெனரல் மெடிக்கல் கவுன்சில் சரிபார்த்தது. அவர்கள், ஆடிட் செய்ய வந்த டாக்டர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. தகன அறிக்கை ஆவணங்கள் சரியாக உள்ளது என ஜெனரல் மெடிக்கல் கவுன்சில், மருத்துவர் ஹெரால்டு ஷிப்மெனை விடுவித்தது.
மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேனிடம் சிகிச்சை பெற வந்த 250-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்றாலும் இறந்தவர்களின் உறவினர்கள் சந்தேகப்பட்டு யாரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை .
ஆடுன கையும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பது போல் மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் தன்னிடம் வரும் வயதான நோயாளிகளை தீர்த்து கட்டும் வேலையை மீண்டும் ஆரம்பித்தார்.

1998 ஆண்டு, ஜூன் மாதம் 24…..
கேத்தலின் கிரண்டி என்ற 84 வயது பெண்மணிக்கு உடல் சுகமில்லை என்று வந்த தகவலை அடுத்து அவரது வீட்டிற்கு மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் சிகிச்சை அளிக்க சென்றார்.
உங்களது தாயார் உடல்நிலை மோசமாக உள்ளது, இருந்தாலும் ஒரு ஊசியை போட்டு விட்டு செல்கிறேன்… குணமாகி விட்டால் பரவாயில்லை… ஒரு வேளை மரணமடைந்துவிட்டால், அவரை போஸ்ட்மார்டம் செய்ய தேவையில்லை, இறந்துவிட்ட உங்களது தாயாரை புதைத்துவிடுங்கள் என்று அருகிலிருந்த கேத்தலின் கிரண்டி மகள் வூட்ரோப்பிடம் மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் சொல்லி விட்டு சென்று விட்டார்.
அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் கேத்தலின் கிரண்டி மரணமடைந்தார்.
உறவினர்கள் சூழ இறுதி மரியாதை செலுத்தி, கேத்தலின் கிரண்டியை அருகிலிருக்கும் ஈடுகாட்டில் புதைக்கப்பட்டார்.
கேத்தலின் கிரண்டியின் மகள் வூட்ரோப் ஒரு வழக்கறிஞர்.
கேத்தலின் கிரண்டிக்கு சொந்தமான சொத்துக்களை தனது மகள் வழக்கறிஞர் வூட்ரோப் மீது உயில் எழுதி வைத்து இருந்தார்.
அடுத்த சில நாட்களில்…
கேத்தலின் கிரண்டியின் சொத்துக்களின் பெரும் பகுதியை தனது பெயருக்கு உயில் ஒன்றை எழுதி வைத்ததாக மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் கேத்தலின் கிரண்டியின் மகள் வூட்ரோப்பிடம் கூறி, உயிலின் நகலினையும் காண்பித்து சொத்துக்கு சொந்தம் கொண்டாடினார்.
கேத்தலின் கிரண்டியின் சொத்து விவகாரங்களை அவரது வக்கீல் மகள் வூட்ரோப் கவனித்து வந்தார். அவருக்கு, மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் கொண்டு வந்த உயிலை பார்த்தும் பெரும் அதிர்ச்சி.
தனக்கு தெரியாமல் அம்மா உயிலை மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன்க்கு எப்படி எழதி வைத்திருக்க முடியும் என வூட்ரோப்பிற்கு சந்தேகம் ஏற்பட.... அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது, வூட்ரோப் புகார் செய்தார்.
சொத்திற்காக, தனது அம்மா கேத்தலின் கிரண்டியை மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் கொன்று இருக்கலாம் என தனக்கு சந்தேகம் இருக்கிறது என்று காவல்துறையினர் விசாரணையில் வூட்ரோப் தெரிவித்தார்.
கல்லறையில் அழுகிய நிலையில் இருந்த கேத்தலின் கிரண்டியின் உடல் உள்ளூர் மருத்துவர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது.
உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த கேத்தலின் கிரண்டிக்கு மார்ஃபின் என்னும் வலிநிவாரண ஊசி மருந்தினை மருத்துவர் அதிக டோஸ் செலுத்தியது தான் இறப்பிற்கு காரணம் என போஸ்ட்மார்டம் செய்த மருத்துவர்கள், அறிக்கையினை காவல்துறைக்கு சமர்பித்தனர்.
மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் தங்கியிருந்த வீட்டினை காவல்துறையினர் சுற்றி வளைத்து அதிரடியாக அவரது வீட்டை ரெய்டு செய்தனர்.
நிறைய தங்க நகைகள், ஒரு டைப்ரைட்டர், கேத்தலின் கிரண்டி எழுதி கொடுத்ததாக சொல்லப்பட்ட போலி உயில் ஆவணம் ஆகியவற்றை மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் வீட்டிலிருந்து காவல்துறையினர் கைப்பற்றினர்.
சொத்தை அபகரிக்க போலி உயில் தயாரித்ததற்காகவும், கேத்தலின் கிரண்டிக்கு அதிக டோஸ் மார்ஃபின் வலி நிவாரண ஊசி போட்டு கொன்றதற்காகவும் மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேனை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் கைது செய்து கொலைக்கான காரணத்தினை விசாரித்த போது.... மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன், தனது ப்ளாஷ்பேக் நினைவுகளை சொல்ல அரம்பித்தார்.
தனக்கு சிறிய வயதாக இருக்கும் போது தனது தாய் நுரையீரல் கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். என் தாயின் உடல்வலியை போக்க மருத்துவர்கள் வலி நிவாரண மயக்க ஊசிகளை செலுத்தி வந்தனர். தனது தாயார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். நான் முதலில் மருத்துவ படிப்பிற்காக முயற்சி செய்த போது எனக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு எனது கடும் முயற்சியினால், மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவரானேன். மருத்துவர் பணியில் இருக்கும் போது, பெத்தடின் என்ற வலிநிவாரணி ஊசி மருந்தினை அதிகம் பயன்படுத்தி எனக்கு போதை உண்டாக்கி அடிமையாகி விட்டேன். ஒரு கட்டத்தில் நான் அதிக வலிநிவாரிணி ஊசிகளை தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்தேன் என்று என் மீது குற்றம் சாட்டப்பட்டு மருத்துவர் பணியிலிருந்து நான் பணி செய்த மருத்துவமனை என்னை நீக்கியது. ஒரு வழியாக விசாரணை முடிந்து, மீண்டும் இருபது வருடங்கள் மருத்துவராக கடுமையாக உழைத்து பணி செய்து, நல்லபெயர் ஈட்டினேன். நான் மருத்துவராக இருந்த போது, கடும் நோயுடன் வந்த 15-க்கு மேற்பட்ட நபர்ககளுக்கு வலி நிவாரணி ஊசியை, அதிக டோஸ் செலுத்தி மரணத்தினை உண்டாக்கினேன். நான் தவறு செய்தபோதெல்லாம் என் மீது யாருக்கும் சந்தேகம் வராத அளவில் நடந்து கொண்டேன். கடைசியாக கேத்தலின் கிரண்டி சொத்தினை அடைய அவருக்கு மார்ஃப்பின் என்னும் வலி நிவாரணி ஊசி அதிக டோஸ் செலுத்தி கொன்றுவிட்டேன் என்று வாய் கூசாமல் தனது சீரியல் கொலைகளை பட்டியிலிட்டார்.
மயிர் கூச்செறியும் சீரியல் கொலைகளை செய்த மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் பற்றிய செய்திகள் இங்கிலாந்து நாளேடுகளில் பரபரப்புடன் வெளியானது.
1970 முதல் 1998 ஆண்டு வரை ஹெரால்டு ஷிப்மேன், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 260 நோயாளிகளை அதிக டோஸ் வலி நிவாரண ஊசிகளை போட்டு கொன்று இருக்கிறார் என்று காவல்துறைக்கு முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, கடந்த 24 வருடங்களில் மருத்துவமனை மருத்துவ ரிக்கார்டு படி, 500 பேர் வரை மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் சிகிச்சை அளித்த நோயாளிகள் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கிட்டதட்ட 218 பேர் வலிநிவாரண மருந்து அதிக டோஸ் கொடுத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று 2000-ம் பக்கம் அடங்கிய அறிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தது.
மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் வலி நிவாரண ஊசி போட்டு கொன்றவர்களின் உடல்களை புதைக்காமல் எரிக்க அவர்களின் உறவினர்களிடம் சொல்லிவிட்டதால், ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அத்துடன் தகன சான்றிதழ்களை புத்திசாலி தனமாக மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் தனது கம்ப்யூட்டர் பதிவுகளில் பல மாற்றங்கள் செய்து, தன் மீது தவறு வராத அளவிற்கு ஆதாரங்களையும் தடயங்களையும் முற்றிலுமாக புத்திசாலிதனமாக அழித்து தப்பித்து விட்டார்.
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 15 நோயாளிகளுக்கு அதிக டோஸ் வலிநிவாரணி ஊசி போட்டு கொன்றது மற்றும் ஃபோர்ஜரி வழக்கும் சேர்த்து மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் மீது குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பித்து, அனைத்து சாட்சிகளும் மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேனுக்கு எதிராக சென்றது.
மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன், 15 மரணங்களிலும் அதிக அளவு மார்ஃபின் போன்ற வலி நிவாரண மருந்துகளை அதிக டோஸ்களை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்துள்ளார் என்று அரசாங்க நோயியல் நிபுணர் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
கேத்தலின் கிரண்டியின் கையெழுத்து போன்றே போலியாக போட்டு அவரது சொத்தினை அபகரிக்க போலி உயிலினை மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் தயாரித்துள்ளார் என கையெழுத்து நிபுணர் தனது அறிக்கையையும் சாட்சியத்தினையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் புரிந்த எதிர்வாதத்தினை நீதிமன்றம் நிராகரித்தது.
15 கொலைகளை செய்தது ஊர்ஜிதம். ஆனதால் அதற்கு 15 ஆயுள் தண்டனையும், ஃபோர்ஜரி வழக்கிற்கு நான்கு வருட தண்டனையும் மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன், வேக்ஃபீல்டில் உள்ள சிறைச்சலையில் ஆயுள் தண்டனை கைதியாக நீதிமன்றம் விதித்த தண்டனையை அனுபவித்து வந்தார்.
ஜனவரி 13, 2004 ஆண்டு சிறைச்சாலையின் ஜன்னல் கம்பிகளில் தான் படுப்பதற்கு பயன்படுத்திய பெட்ஷீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு, மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் இறந்து கிடந்தார்.
சிறை சாலை அதிகாரிகள் ஆயுள் தண்டனை கைதி மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேனின் உடலை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சீரியல் கில்லர் மருத்துவர் ஹெரால்டு ஷிப்மேன் செய்த கொலைகள் உலகை குலுக்கியது என்பது தான் நிஜம்!

Leave a comment
Upload