
பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டு உள்ள குல்பூஷண் ஜாதவ் உள்பட பல்வேறு சர்வதேச வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாடின வரும் ஹரிஸ் சால்வே (65), இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், பிரபல மூத்த வழக்கறிஞரும் ஆவார். இவர், பிரபல தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் தொடர்புடைய வழக்குகளிலும் ஆஜராகி வாதாடி வருகிறார். மேலும், பிரிட்டன் மற்றும் வேல்ஸ் நீதிமன்றங்களில் இங்கிலாந்து ராணியின் வழக்கறிஞராக ஹரிஸ் சால்வே நியமிக்கப்பட்டு, சில வழக்குகளில் ஆஜரானார்.
நாக்பூர் பல்கலையில் எல்எல்பி படித்த இவர், கடந்த 1980-ம் ஆண்டில் ஜெ.பி.தாதாசந்த்ஜி அண்ட் கம்பெனியின் சட்ட ஆலோசகராக வாழ்க்கையைத் துவங்கினார். இதைத் தொடர்ந்து, கடந்த 1992-ம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் கடந்த 1999-2002-ம் ஆண்டுகளில் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக ஹரிஸ் சால்வே பணியாற்றினார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த ஹரிஸ் சால்வே-மீனாட்சி தம்பதியர், தற்போது முறையாக விவாகரத்து பெற்று, கடந்த மாதம் தனித்தனியே பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், லண்டனில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அடுத்த வாரம் பிரபல பெண் தொழில்நுட்ப கலைஞரான கரோலின் ப்ரோசாரட் (56) என்பவரை ஹரிஸ் சால்வே 2-வது திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இதற்காக ஹரிஸ் சால்வே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். இதைத் தொடர்ந்து, வடக்கு லண்டனில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று, ஹரிஸ் சால்வே பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். ஹரிஸ் சால்வேயை போல் கரோலினுக்கும் இது 2-வது திருமணம். அவருக்கும் ஏற்கெனவே ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment
Upload