சென்னை - ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் உதவியுடன் அனாதை சடலத்தை கொண்டு செல்ல, அரசு அமரர் ஊர்தியை தேடிக்கொண்டு இருந்தார் ஒரு ஏழைப்பெண். பின்னர் அந்த சடலத்தை குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்ல ஒருவர் முன்வந்தார். அந்த சடலத்தை வாகனத்தில் ஏற்றி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று, அப்பெண்ணே தனது சொந்த செலவில் இறுதி சடங்குகளை மேற்கொண்டார். இதே போல் 5600 ஆதரவற்றோரின் சடலங்களுக்கு இறுதி சடங்குகளை இவர் செய்திருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட நமக்கு மெய்சிலிர்த்தது.
நமக்கு அவரை சந்திக்க ஆவல் அதிகரிக்க... அவரை தொடர்பு கொண்டு பேச ஒரு காவல்துறை நண்பர் உதவி செய்தார். சென்னை சாந்தோம் அருகே டுமிங்குப்பத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வீட்டில் வசிக்கிறார் இந்த தன்னலம் கருதாது சேவை செய்து வரும் ரோஜா. நாம் சந்திக்கும் வேளையில் அங்குள்ள ஆதரவற்ற முதியோருக்கு தனது சொந்த செலவில் உணவளித்துக் கொண்டிருந்தார்.
நம்மிடம் ரோஜா பேசுகையில்... “எனது சொந்த ஊர் சிதம்பரம். நடுத்தர குடும்பம். அங்கு எனது தந்தை இறால் குட்டை வைத்து வியாபாரம் செய்கிறார். தாய் இல்லை. நான் பள்ளி செல்லும் வயதில் சுடுகாடு அருகே விளையாடுவேன். அந்த சமயத்தில் அங்கு அரைகுறையாக புதைக்கப்பட்ட மனித உடல்களை நாய்கள் கடித்து குதறுவதை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. மரணத்துக்கு பிறகுகூட ஆதரவற்றோர் கவுரவமாக நடத்தப்படுவதில்லை என தெரிந்து வேதனை அடைந்தேன்.
பின்னர் சென்னை வந்து சகோதரி வீட்டில் தங்கி, ஒரு தனியார் பைண்டிங் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். இதன்பிறகு எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவர் பெயின்டிங் வேலை செய்கிறார். தற்போது எனக்கு மாதந்தோறும் கிடைக்கும் ₹20 ஆயிரம் சம்பளத்தை வைத்து, இதுபோன்று குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர், கடலில் ஒதுங்கும் அடையாளம் தெரியாத உடல்களை, சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன், நல்லடக்கம் செய்து வருகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளாக, 5600 ஆதரவற்றோரின் உடல்களை சொந்த செலவில் புதைத்துள்ளேன். எனது இந்த செயலுக்கு, நான் வேலை பார்க்கும் நிறுவனமும், சக ஊழியர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இறந்தவரின் பெயர், ஜாதி, மதம் போன்ற விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், அவர்களை எனது உறவினர்களாக கருதியே இறுதி சடங்குகளை மேற்கொள்கிறேன். இதற்காக யாரிடமும் இதுவரை பணம் கேட்டதில்லை. ஊரிலிருந்து தந்தை அவ்வப்போது பண உதவி செய்து வருகிறார்.
எனினும், ஒரே நாளில் நான்கைந்து ஆதரவற்றோரின் பிணங்கள் வரும். அப்போது அக்கம்பக்கத்தினரிடம் கடன் பெற்று இறுதி சடங்குகளை செய்வேன். பிறகு அந்தக் கடனை அடைப்பேன். தற்போது இதுபோன்ற ஆதரவற்றோரின் பிணங்களை ஏற்றிச் செல்ல அரசு அமரர் ஊர்தி கிடைப்பதில்லை. இந்த நல்ல செயலுக்கு யாரேனும் உதவி செய்ய விரும்பினால், எனக்கு ஒரு அமரர் ஊர்தி மாத்திரம் வாங்கித் தாருங்கள். நானே அந்த வாகனத்தை ஓட்டி, எனது இந்த செயலை தொடருவேன்.
இதுதவிர, எங்கள் குடியிருப்பு பகுதியில் ஆதரவற்ற முதியோர் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு தினசரி ஒருவேளை உணவளித்து வருகிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது!” என்று ரோஜா முகமலர்ந்தபடி கூறினார்.
“ரோஜாவின் தன்னலமற்ற சேவைக்கு தேவையான மார்ச்சுவரி வேனை நன்கொடையாக வழங்க ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் பொதுத்துறை வங்கிகள் முன்வர வேண்டும்” என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Leave a comment
Upload