
நமது நாட்டில் எத்தனையோ வகையான கீரைகள் விளைகின்றன. அதில் அதிகம் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சில கீரை வகைகளே உள்ளன. கீரைகள், உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். கீரைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. தினசரி உணவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 50 கிராம் முதல் 100 கிராம் வரை கீரைகள் சேர்ப்பது அவசியம். தினம் ஒரு கீரையில் அடிக்கடி சேர்க்க வேண்டிய கீரையாக புளிச்சக்கீரையும் அவசியமானது. கீரை வகைகளில் கொஞ்சம் புளிப்புத்தன்மையும், அதிக ருசியும் கொண்ட புளிச்சக்கீரையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம்.
புளிச்சகீரையானது ஆந்திர மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் கீரை ஆகும். ஆந்திராவில் இந்த கீரையின் பயன்பாடு மிகவும் அதிகம். ஆந்திராவில் இந்த கீரையை ‘கோங்கூரா’ என அழைக்கிறார்கள். கீரையோடு, துவரம்பருப்பையும் சேர்த்து, வேகவைத்துக் கடைந்து தாளித்து கோங்கூரா பப்பு என்று செய்து உண்பார்கள். இதைதவிர கோங்கூரா சட்னி, கோங்கூரா துவையல், கோங்கூராதொக்கு போன்றவை சுவைக்கு பெயர் பெற்றவை.
புளிச்சகீரைக்கு புளிச்சிறுகீரை, காயச்சுரை, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் உண்டு. புளிச்ச கீரையின் காம்புகளும் தண்டும் சிவப்பு நிறத்தில் காணப்படும். இக்கீரையில் செம்புளிச்சக்கீரை, கரும்புளிச்சக்கீரை ஆகிய இருவகைகள் உள்ளன. புளிச்சக்கீரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிளும் விளைகின்ற மிதவெப்ப மற்றும் வெப்பமண்டல கீரையாகும். வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரும் இயல்பை உடையது. மிகுந்த மருத்துவ குணங்கள் அடங்கிய புளிச்சக்கீரை, உடல் உஷ்ணத்தை குறைத்து சமப்படுத்தவும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றது. இதன் இலைகள், மலர்கள் மற்றும் விதைகள் மருத்துவ குணம் கொண்டவை.
புளிச்சக்கீரையின் அற்புதங்கள்:
புளிச்சக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து., வைட்டமின்கள் பி. இ. சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் போன்றவை உள்ளது. மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறந்துள்ளன.
புளிச்சகீரை செடியின் மலர்களில் இருந்து கன்னாபினிடின், கன்னாபிஸ்சிட்ரின், கன்னாபின்னின், ஆகியவை எடுக்கப்படுகின்றன. கரிம அமிலங்களான லினோலியிக் ஒலியிக், பால்மிடிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன. இலைகளில் ப்ரக்டோஸ், குளுக்கோஸ், மானேஸ் சர்க்கரைகளும், லிக்னோசெரிக், வனிலிக், சிரோடிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப்படுகின்றன.
நம் முன்னோர்கள் இந்தக் கீரையை வாரம் இருமுறையாவது சமைத்து உடல் வலிமை குன்றிய குழந்தைகளுக்கு சாப்பிடத் தருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்:
புளிச்சக்கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடிய இது, அற்புதமான மூலிகையாகவும் விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.
புளிச்சக்கீரையை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
புளிச்சக்கீரை உடல் சூட்டைக் தணித்து, உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
புளிச்சக்கீரையானது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்சக்கீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
ஆண்மைக் குறைபாடு இருப்பவர்களுக்கு புளிச்சக்கீரை மருந்தாகவும் உதவுகிறது. பெண்களுக்கும் தாம்பத்திய வாழ்க்கை மேம்பட புளிச்சக்கீரை பயன்படுகின்றது.
வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் விரைவில் வாத நோய் குறையும்.
இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்சினை இருப்பவர்களுக்கு, புளிச்சகீரை சாப்பிட்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.
புளிச்சக்கீரை மஞ்சள் காமலைக்கு அருமருந்தாகும். நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சக்கீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும்.
மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரை சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும்.
தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கும் சிறந்த நிவாரணமாக புளிச்சக்கீரை விளங்குகிறது. மற்றும்
சொறி, சிரங்கு உள்ளவர்கள் இதனை அரைத்து மேல்பூச்சாக போட்டு வர குணமாகும்.
பின்குறிப்பு: பத்தியம் இருப்பவர்களும், பித்த சம்பந்தமான நோய்கள் உடையவர்களும் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது ஆகும்.
புளிச்சக்கீரை செடியை வீட்டிலும் வளர்க்கலாம்:
புளிச்சக்கீரை செடியை வீட்டிலேயே வளர்த்து நாம் பயன் பெறலாம். நர்சரிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் விதைகளை வாங்கி வீட்டு வாசலிலோ அல்லது கொல்லைப் புறத்திலோ, மொட்டை மாடி தோட்டத்திலோ கீரை விதைகளை குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஊன்றிய பின் செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும். வெய்யில் அதிகமாக இருந்தால் முளைக்கும் திறன் பாதிக்கப்படும். விதைகள் முளைத்தப்பின் செய்திதாள்களை நீக்கி விடலாம். விதைகளை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். செடியை நிழல் விழும் இடத்தில் வைக்க வேண்டும். கீரைகளை இதன் வேர்ப்பகுதியில் இருந்து 5 செ.மீ விட்டு அறுவடை செய்ய வேண்டும். இதன் செடிகள் முற்றிய பிறகு இதில் இருந்து விதைகளை சேகரித்துக் கொள்ளலாம்.
ஒரு முறை வளர்ந்த செடி பல மாதங்களுக்கு பலன் தரும்.
அடுத்தவாரம் வயிற்றுக் கோளாறு போக்கும் புதினா கீரை. புதினா கீரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!

Leave a comment
Upload