மத்யமாவதி

பிரவின் பண்டிட்
தமிழ் சினிமாவில் 'மத்யமாவதி' என்று சிறிய புத்தகமே போடலாம். கே.வி.மகாதேவன் காலத்திலிருந்து ஏறத்தாழ 70 வருட கோடம்பாக்க இசை வரலாற்றைப் புரட்டினால், இந்த ராக பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் அழகு. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கிலும் எக்கச்சக்கமாக உள்ளன.
'எட்டு பாட்டு கேட்டால், அதில் ஒன்று மத்யமாவதியாக இருக்கும்' என்று என் நெல்லூர் நண்பர் ஒருவர் ஜாலியாக சொல்வார். அது வெறும் ஜோக் அல்ல… நிறைய உண்மை உண்டு. தவிர மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த ராக சாயல்களில் பாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் கேட்ட வரை - இந்தியில் அவ்வளவு இல்லை!
மத்யமாவதி மங்களகரமான ராகம் என்பதால், கொண்டாட்டங்கள் மற்றும் சுபகாரியங்களில் இதை அதிகம் கேட்க முடியும்! கச்சேரிகளில் இறுதியாக இந்த ராகத்தில் பாட்டு பாடியோ அல்லது ராகத்தை இரண்டு நிமிடம் இழுத்தோ முடிப்பது, நெடுநாளைய சம்பிரதாயம்.
அதாவது, இசை நிகழ்ச்சியின்போது 'ஏதாவது குற்றம் குறை இருந்தால் பொறுத்தருள வேண்டும்' என்று கேட்பதாக இதற்கு ஐதீகம். மத்யமாவதி எல்லா தவறுகளையும் கழுவிவிட்டு, மங்களத்தை தரும் என்பது நம்பிக்கை. தெலுங்கு வித்வான்கள் சுருட்டி பாடி முடிப்பதையும் கவனித்துள்ளேன்.
கரகர ப்ரியாவின் ஜன்ய ராகமான மத்யமாவதிக்கு ஆரோகணம், அவரோகணம் - இரண்டிலும் ஐந்து ஸ்வரங்கள். இந்த ராகத்துக்கு மிக நெருக்கமானவை ஶ்ரீயும் பிருந்தாவன சாரங்காவும். ஏறத்தாழ ஒரே ஜாடையில் பிறந்த மூன்று குழந்தைகள். எனவே, சினிமாக்காரர்கள் பெரும்பாலும் அவியல் ஆக்கிவிடுவார்கள். பிருந்தாவன சாரங்காவில் துவங்கி, ஶ்ரீயில் பயணம் செய்து, அப்படியே மத்யமாவதிக்குத் தாவி முடித்துவிடும் பாடல்கள் ஏராளம்!

எம் எல் வசந்தகுமாரி
'நாதுபை பலிகேரு நருலு ஶ்ரீராமா…' என்ற தியாகராஜரின் கீர்த்தனையை, எம்.எல்.வசந்தகுமாரி பாடுவார். ரொம்ப அற்புதமான கீர்த்தனை. 'ராம கதா சுதா', 'அதிகி சுகமு' என்று தியாகராஜர் நிறைய கிருதிகளை தந்துள்ளார். இதில் 'ராம கதா சுதா'வை செம்மங்குடி பாடி கேட்டுள்ளேன். வயதான காலத்தில் அவருக்கு குரல் கட்டுப்படாதபோதும், அவ்வளவு பாவபூர்வமாகப் பாடுவார்! அவர் பாடி, பாலமுரளி கிருஷ்ணா வயலின் வாசித்த கச்சேரி உண்டு.
முத்துசுவாமி தீட்சிதரின் 'தர்மசம்வர்த்தினி', சியாமா சாஸ்திரியின் 'பாலிஞ்சு காமாக்ஷி', பாபநாசம் சிவனின் 'கற்பகமே கடைக்கண் பாராய்' போன்றவை - இந்த ராகத்தில் சர்க்கரை பொங்கல் போல தித்திக்கும் கீர்த்தனைகள். அம்பாள் தர்மசம்வர்த்தினி வீற்றிருப்பது திருவையாறில். சிவன், அய்யாரப்பன் என்கிற பஞ்சநதீஸ்வரர்.
'அதிவோ அல் அதிவோ… ஶ்ரீ ஹரிவாசவு' என்ற அன்னமாச்சாரியரின் அற்புதமான கீர்த்தனை. திருப்பதியில் அதிகாலை நேரத்தில், எங்கோ ஒரு மூலையில் கேட்கும்போது மனது பரவசப்படும். மந்த்ராலயத்தில்கூட அடிக்கடி கேட்க முடியும்! ஏனோ, கச்சேரி மேடைகளில் இதைப் பாடி, நான் கேட்டதில்லை!
ஆந்திராவின் பல பக்தி பாடகர்கள் எஸ்.பி.பி உள்பட பாடியுள்ளனர். என்றாலும், நித்ய சந்தோஷி என்ற பாடகி பாடியுள்ளதை கேட்டுப் பாருங்கள்! புரந்தரதாஸரின் 'பாக்யத லக்ஷ்மி பாரம்மா' - இந்த ராகத்தில் அமைந்த மற்றொரு லட்டு கீர்த்தனை! 'மஜ்ஜிகே யோலகின பெண்ணையன்டே…' என்பார் ஓரிடத்தில் தாஸர். 'மோரை கடையும்போது வெண்ணெய் திரண்டு வருவது போல் என்னிடம் வாம்மா…' என்று லக்ஷ்மியை அழைக்கிறார்.

ஷிமோகா குமாரசுவாமி
- இப்படி பாடல் நெடுக கவித்துவமான வரிகள். இப்பாடலை இரண்டு பேர் சாக்ஸபோனில் ஆத்மார்த்தமாக வாசிப்பார்கள். முதலாமவர் - கத்ரி கோபால்நாத்… அடுத்தது - ஷிமோகா குமாரசுவாமி. சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் குமாரசுவாமி, கச்சேரியில் உட்கார்ந்த அரைமணியில் 'பாக்யத லக்ஷ்மி'க்கு சீட்டு வந்துவிடுமாம்!
இவரது குட்டி மகனும் சாக்ஸபோன் மழலை மேதையுமான பிரவீன் பண்டிட், தந்தை வழியில் கச்சேரிகளில் லக்ஷ்மியை அழைக்கத் தவறுவதில்லை! சங்கீத மேதை டி.வி.கோபாலகிருஷ்ணன், பையனை பெரிய அளவில் உருவாக்கி வருகிறார்.
சபரிமலையில் தினமும் நடை சாத்தப்படும்போது பாடும் 'ஹரிவராசனம்' மத்யமாவதியின் நெற்றியில் பொட்டு வைத்தது போன்றதொரு பாவபூர்வமான பாடல். கே.ஜே.ஜேசுதாஸையும் அந்தப் பாடலையும் பிரித்துப் பார்க்க முடியாத பொக்கிஷம்.
முழு ராமாயண கதையையும் சொல்லும் சுவாதி திருநாளின் ராகமாலிகை 'பாவயாமி ரகுராமம்' கீர்த்தனையில் ஆறாவது சரணமாக வரும் 'கலிதவர சேதுபந்தம்'... எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மத்யமாவதி. அதுவும், இறுதியில் 'விலசித பட்டாபிஷேகம்' என்று எம்.எஸ்.சுப்புலட்சுமி மேல்பஞ்சமத்துக்கு ஏகாந்தமாகச் சென்று நிறுத்தும்போது, 'இதற்குமேல் இவ்வுலகில் என்ன சுகம் உள்ளது' என எண்ணியதுண்டு.
தமிழ் சினிமாவில் வந்த நெஞ்சை அள்ளும் சில மத்யமாவதிகளை தொட்டுவிட்டு முடிக்கலாம். கே.வி.மகாதேவனின் 'திருமால் பெருமைக்கு நிகரேது...' (பல்லவி மட்டும்), 'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்…', எம்எஸ்.வி-யின் 'முத்துக்களோ கண்கள்', 'சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து', 'பச்சைக்கிளி முத்துச்சரம்'...

இளையராஜா
இளையராஜாவின் 'அடிப் பெண்ணே', 'ஆகாய கங்கை', 'சோலைக் குயிலே', 'தாழம்பூவே.. வாசம் வீசு', 'துள்ளி துள்ளி நீ பாடம்மா', 'அழகான மஞ்சள் புறா', 'நீதானே என் பொன் வசந்தம்' என்று - இந்தப் பட்டியல் மளிகை சீட்டு போல் நீள்கிறது. சொல்லப் போனால், கிளுகிளுப்பான 'சகலகலா வல்லவன்' படத்தின் 'நிலா காயுதே'யும், 'மூன்றாம் பிறை'யின் 'பொன்மேனி உருகுதே'யும்கூட இதே ராகம்தான்! 'துள்ளி துள்ளி' என மத்யமாவதியை உருக்கித் தந்தவர்தான், 'Seduction' வகை பாடல்களுக்கும் இதை ரொம்ப அழகாக கையாண்டிருப்பது, ராஜா போன்ற கெட்டிக்காரர்களால் முடிந்தது!

சீர்காழி கோவிந்தராஜன்
சீர்காழி கோவிந்தராஜனின் அற்புதங்களில் ஒன்றான 'எங்கிருந்தோ வந்தான்' பாடலை, வேறொருவர் குரலில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்புறம் 'முத்துக்களோ கண்கள்'! ஒரு தியாகராஜர் கீர்த்தனையைப் போல், அவ்வளவு உயர்வாக அந்தப் பாடலை அமைத்திருப்பார் எம்.எஸ்.வி. அதற்கு கண்ணதாசன் வரிகள் உயிர் தந்திருக்கும்! 'சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை… தந்துவிட்டேன் என்னை!'

தேவா
இந்த ராகத்தில் தேவாவின் பல பாடல்கள், பண்ருட்டி பலாச்சுளை போல் இனிப்பானவை. 'மாமர குயிலே', 'அத்திப்பழம் சிவப்பா…' என்று அவை வரிசை கட்டி நின்றாலும், எதிர்பாராத விதமாக காதலியைப் பார்த்த காதலனைப் போல் என்னை மெய்மறந்து ரசிக்க வைத்தது. 'ஆடியிலே சேதி சொல்லி, ஆவணியில் தேதி வெச்சு, சேதி சொன்ன மன்னவருதான்!' -ரம்யமான வயல்காட்டில் ரேவதி, விஜயகாந்த்தை நினைத்து, ஒய்யாரமாக ஆடிப் பாடியது… எப்பேர்ப்பட்ட கிராமத்து மத்யமாவதி!

சித்ரா
ஒவ்வொரு வரியிலும் தேவா லயித்திருப்பார். இல்லாவிட்டால், அப்படியொரு கம்போசிஷன் கொண்டு வரமுடியாது. கேப்டன் மனைவி பிரேமலதாவுக்குப் பிடித்த பாடல். தேமுதிக கூட்டங்கள் எங்கு நடந்தாலும் இதுவும் 'ராசிதான்… கைராசிதான்' பாடலும் நிச்சயம் இருக்கும்! இரண்டுமே சித்ரா, 'ராசி'யில் எஸ்.பி.பி-யும் சேர்ந்திருப்பார்.

உன்னிகிருஷ்ணன்
'முறை மாமன்' படத்தில் 'ஆனந்தம், ஆனந்தம்' என்று உன்னிகிருஷ்ணனும் சுஜாதா மோகனும் பாடுவது, வித்யாசாகரின் அசத்தல்… திடீரென நடுவில் மனோரமாவை இரண்டு வரிகள் பாடவைத்திருப்பார். பிரமாதமாக இருக்கும்!
'ஸ்டார்' படத்தில் 'தோம்… கருவில் இருந்தோம்', 'உயிரே'வில் சூப்பர் ஹிட்டான 'தைய தைய தைய்யா' உள்பட ஏ.ஆர்.ரஹ்மானும் சில நல்ல பாடல்களை தந்துள்ளார். அவற்றில் புதுமை இருக்கும். ஆனால், மத்யமாவதியின் சுகம் கம்மி.
ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா, சிற்பி உள்பட இன்னும் சிலரும் திரும்பக் கேட்க வைக்கும் மெலடிகளைத் தந்துள்ளதையும் மறுக்க முடியாது.
இசை என்பது பிரமாண்ட சாகரம். அதில் கரையோரமாக நின்று, சற்று காலை நனைத்து, அந்த சிலிர்ப்பை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்! இன்னும் எழுத எத்தனையோ இருக்கின்றன. இப்போதைக்கு இடைவேளை… நேரம் வரும்போது தொடரலாம்! எனக்கு இடம் அளித்து, தொடர்ந்து ஊக்கமளித்து, முதுகில் தட்டிக் கொடுத்த 'விகடகவி' ஆசிரியர் குழுவுக்கு என் மனப்பூர்வமான நன்றி. பவமான… நித்ய ஜெய மங்களம்!

Leave a comment
Upload