தொடர்கள்
Daily Articles
கரோனா நோயிலிருந்து மீண்டு(ம்) வருவாரா சசிகலா!! - ஆர்.ராஜேஷ் கன்னா

20210023175346937.jpg

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் உயிர் தோழியாக இருந்தவர் வி.கே. சசிகலா. ஜெயலலிதா இருந்த போது தமிழக அரசியலில் அதுவும் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் வி.கே. சசிகலா.

ஆரம்ப காலத்தில் ஜெயலலிதா வசிக்கும் போயஸ்கார்டன் வீட்டருகே சசிகலா தனது வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ காசேட் மூலம் திரைப்படங்ளை வாடகைக்கு விடும் கடையை நடத்தி வந்தார். திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஆட்களை அனுப்பி புகைப்படம் எடுக்கும் பணியினையும் செய்து வந்தார்.

வி.கே .சசிகலாவின் கணவர் நடராஜன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ-வாக பணிபுரிந்தவர். தன் மனைவியை ஜெயலலிதாவிற்கு அறிமுகப்படுத்த அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவிடம் வேண்டினார். ஜெயலலிதாவிற்கு சசிகலா அறிமுகமானது இப்படித்தான்.

ஜெயலலிதாவிற்கு தனது வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு கொடுக்கும் பணியினை சசிகலா செய்து வந்தார். அதன் பின் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு சசிகலா பிரத்யேக புகைப்படங்களை எடுத்து கொடுக்கும் பணியினை மேற்கண்டார். இதனால் ஜெயலலிதாவிற்கு சசிகலா மீது நம்பிக்கை உருவாகி நட்பும் வளர்ந்தது.

1987 ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி ஜெயலலிதா மற்றும் ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா சேவல் சின்னத்திலும், ஜானகி புறா சின்னத்திலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். ஜெயலலிதா சட்டமன்றத்திற்குள் சென்றபோது அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவினரால் தாக்கப்பட்ட நிகழ்வு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும் வேளையில்... ஜெயலலிதாவுடன் உறுதுணையாக நின்றவர் வி.கே. சசிகலா.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்றதால், சசிகலா அங்கேயே அவருடன் தங்கி விட்டார். செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் கண்பார்வை பட்ட நாள் முதல், வி.கே.சசிகலாவின் வாழ்க்கை ஏறுமுகம் கண்டது.

சசிகலா எனது சகோதிரி மற்றும் எனக்கு தாயாக இருப்பவர் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த பின்... ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அதிமுக தொண்டர்கள் அழைக்க தொடங்கினார்கள்.

20210023175428396.jpg

கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்லியில் இருந்த பிரதான அரசியல் கட்சிகள் கூட அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள, சசிகலாவின் ஒப்புதலுக்காக காத்திருந்தது நிஜம். சில டெல்லி தலைவர்கள் கூட சசிகலாவினை தாண்டி சென்று ஜெயலலைதாவுடன் கூட்டணி பேசமுடியாமல் போன சம்பவங்களும் உண்டு.

வி.கே. சசிகலாவை தன்னுடனேயே வைத்துகொண்ட ஜெ.ஜெயலலிதா, தனது உடன் பிறவா தோழி சொல்படி நடந்து வந்தது அவரது ஆதரவாளர்களுக்கு தெரியும். 1991 ஆண்டு முதல். அதிமுகவின் சட்டமன்ற வேட்பாளர்களை தேர்வு செய்வதில், முக்கிய பங்கு வகித்து வந்தார் சசிகலா. கடந்த சட்டசபை தேர்தலில், சசிகலாவின் ஆதரவு பெற்றவர்கள் எம்.எல்.ஏ. சீட் பெற்று, அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களாக வெற்றி பெற்று, பலர் அமைச்சராக உள்ளனர். சசிகலாவின் கண் பார்வை பட்டால் போதும், முதல்வராக கூட ஆக முடியும் என்று பல அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இவரின் கடைகண் பார்வைக்காக ஏங்கியது உண்டு.

20210023175535571.jpg

1991 -96 ஆண்டுகளில், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்கள் குறித்து சொத்துகுவிப்பு வழக்கு சுப்ரமணியம் சுவாமியால் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு 18 ஆண்டு நடந்தது. பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் ஆகியோர் குற்றம் நிருபிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறைதண்டனையும் 100 கோடி ருபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்த ஜெ.ஜெயலலிதா மற்றும் அவருடன் தண்டனை பெற்றவர்கள், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழுதிய தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி... கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை ரத்து செய்து மேல் முறையீட்டு நீதிபதி குமாராசாமி அனைவரையும் விடுதலை செய்தார். மேல் முறையீட்டில், இவர்களது விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னரே ஜெ.ஜெயலலிதா இறந்துவிட்டதால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மீதம் இருக்கும் வி.கே. சசிகலா, இளவரசி, வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் ஆகியோர் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

2017 ஆண்டு பிப்ரவரி 17 தேதி….. வி.கே. சசிகலாவிற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 4 ஆண்டுகள் சிறை செல்ல வேண்டி உத்தரவு வந்தது. சென்னையில் இருக்கும் ஜெ.ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, சமாதியில் சத்தியம் செய்து விட்டு அன்றே கார் மூலம் பெங்களுரு சென்று சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் நீதிபதியிடம் சரணடைந்தார்.

சசிகலாவிற்கு விஐபி அந்தஸ்து என்பதால் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. பெங்களுரு சிறையில் சசிகலாவின் கைதி எண் 9234 என வழங்கப்பட்டது. சசிகலாவின் கணவர் நடராஜன் நோய் வாய்பட... மருத்துவமனையில் அவரை பார்க்க 5 நாள் பரோல் விடுப்பு, சிறை துறையினரால் அளிக்கப்பட்டது.

நான்காண்டுகள் சிறைவாசத்தினை முடித்துவிட்டு, வருகிற ஜனவரி 27 காலை விடுதலையாகிறார் சசிகலா என்று பெங்களுரு சிறை துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

சசிகலாவை தமிழ்நாட்டிற்குள் ஆயிரம் கார் பேரணியுடன் அழைத்து வர அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

மற்றொரு சாரார் அவரை ஓசூரில் தங்க வைத்து, அதன்பின் சென்னை அழைத்து வர திட்டம் வகுத்து இருந்தனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் வி.கே. சசிகலா, சில நாட்களாக சோர்வாக காணப்பட்டதாகவும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்ததாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை காய்ச்சல் மற்றும் முச்சு திணறலுக்காக சிறையிலிருந்த சசிகலா, பரவுலிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவிட்19 டெஸ்ட் மற்றும் சிடி ஸ்கேனிலும் சசிகலாவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வியாழக்கிழமையன்று பரவுலிங் மருத்துவமனையிலிருந்து, பெங்களுர் விக்டோரியா மருத்துவமனையில் இருக்கும் கொரோனா ஐசியு வார்டிற்கு சசிகலா மாற்றப்பட்டு, சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 45 சதவீதம் ஆக இருந்த ஆக்சிஜன் லெவல் தற்போது சிகிச்சைக்கு பின் 98 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நிமோனியா காய்ச்சல் சற்று குறைந்துள்ளது. சிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சசிகலாவுடன் தண்டனை பெற்று சிறைக்கைதியாக இருந்த அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய் தொற்று இருப்பதாக தற்போது மெடிக்கல் ரிப்போர்ட் வந்துள்ளது. இளவரசியும் தற்போது சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா ஐசியூவில் சேர்க்க ஆயுத்த பணிகள் நடந்து வருகிறது.

2021002318002280.jpg

சசிகலாவின் மெடிக்கல் ரிப்போர்ட் படி, மேலும் 10 நாட்களுக்கு மருத்துவமனையில் கோரோனா நோய்க்கு தீவிர சிகிச்சை எடுக்க வேண்டும், அதன்பின் 15 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜனவரி 27 தேதி சசிகலா விடுதலை ஆவாதில் எந்த சட்ட சிக்கலும் வராது. ஜனவரி 27 வரை சசிகலாவை மருத்துவமனையில் சந்தித்து, விடுதலை செய்ததற்கான ஆவணங்களில் கையெழத்து பெற்ற பின், அவரை பாதுகாக்கும் போலீஸ் காவல் முற்றிலும் விலக்கப்படும். அதன்பின் சசிகலா எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் சென்று அவர் விருப்பப்படி வைத்தியம் செய்துக்கொள்ளலாம் என்று சிறை துறையினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது சிகிச்சை நடக்கும் விக்டோரியா மருத்துவமனையில் கரோனா ஐசியூ-விலிருந்து சசிகலாவை சிறப்பு சிகிச்சைக்காக மணிப்பல் மருத்துவமனைக்கு மாற்ற அவரது ஆதரவாளர்களின் கோரிக்கையை சிறை துறை நிராகரித்தது.

சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனையில் ஒரு அறை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் சிறை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ் சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சந்தித்து ஆலோசித்துவிட்டு வந்துள்ளார்.

சிறையிலிருந்து ஒரிரு நாட்களில் விடுதலை ஆகிவிடுவார் என்று அதீத ஆனந்ததில் இருந்த சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு, சசிகலாவிற்கு கோரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

சசிகலா விடுதலை ஆகும்போது அவருக்கு ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் அமமுக தற்போது நிறுத்திவைத்துள்ளது.

கோரோனா நோயிலிருந்து மீண்டு(ம்) வருவாரா சசிகலா என்பதே தற்போதய அவரது ஆதரவாளர்களின் பிரார்த்தனையாக உள்ளது!