“எதுக்காக இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க?. மாசத்திலே சில நாள் மட்டும், ராத்திரி ஒருவேளைதான், என் கையால சமைச்சு சாப்பிடறீங்க. நாள் பூராவும், அங்கே இங்கேன்னு அலைஞ்சு திரிஞ்சு, இருட்டிப்போனபிறகு எட்டு மணிக்குதான் வரீங்க. குளிச்சு முடிஞ்சு நீங்க சாப்பிட்டுட்டு, அதுக்கப்புறம், நானும் தின்னுட்டு, பத்து பாத்திரங்களை, கழுவி வைக்க பத்துமணிக்கு மேல ஆயிடுது” என்று புலம்பினாள் ‘தலைவரின்’ மனைவி.
“நாளைக்கு சட்டசபைக்கான ரிசல்ட் வருது. நானே அந்த டென்ஷன்ல இருக்கேன். தேவையில்லாம எதையாவது பேசி, என்னை இன்னும் கடுப்பேத்தாதே” என்று சம்சாரத்தின் மீது எரிந்து விழுந்தார் ‘தலைவர்’.
“என்னமோ உங்க கட்சியே, எல்லாத் தொகுதியிலேயும், ஜெயிச்சு தன்னந்தனியா, ஆட்சியைப் புடிக்கிற மாதிரியில்லே, பதட்டப்படறீங்க. என்னையும்தான் உங்க வீணாப்போன கட்சிக்கு செயல்தலைவர்னு சொன்னீங்க. ஆனா, நம்ப கட்சிக்காரங்க மெஜாரட்டியா இருக்கிற தொகுதியிலே எனக்கு சீட்டுதராம, உங்க சின்னவீட்டு சிங்காரி, அந்த ‘மேனா-மினுக்கியத்தானே’ நிக்கவைச்சீங்க?” என்று புலம்ப ஆரம்பித்தாள் தலைவரின் இல்லக்கிளத்தி.
“சும்மா பேசாதேடி… ரொம்ப புடுங்கி எடுத்தியானா, பேசாம சின்ன வீட்டுக்கே பர்மனென்ட்டா போயிடுவேன்” என்று மிரட்டினார் தலைவர்.
திடீரென்று தலைவரின் “ரகசிய-நம்பர்’ கொண்ட பர்சனல் ஃபோன் சிணுங்கியது. மொபைலின் காலர்-டி.பி.யில் தலைவரின் ‘சின்னவீட்டின்’ முகம் தெரிந்தது.
“இவவேற… நேரங்காலம் தெரியாம” என்று சலித்துக்கொண்ட தலைவரோ, “ஏண்டி… ஒவ்வொரு மாசமும் முதல் வாரம் பூராவும், நான் என் முதல் பெண்டாட்டியோடத்தான் இருப்பேன்னு உங்கிட்டே எத்தனவாட்டி சொல்லியிருக்கேன். இன்னிக்கு அங்கே வரமுடியாது. நானே எலக்ஷன் ரிசல்ட் எப்படி வரப்போவுதுன்னு கவலையிலே இருக்கேன். இதிலே உங்க சக்காளத்தி சண்டைக்கு பஞ்சாயத்து வேற” என்று எரிச்சலானார் தலைவர்.
தலைவரின் காமக்கிளத்தியான, டோக்கன் நம்பர் டூவோ, “ஏங்க, நாளைக்கு, ஓட்டு கவுன்டிங் முடிஞ்சு நான் ஜெயிச்சா, எனக்கு துணை முதல்வர் பதவி வாங்கித் தரேன்னு சத்தியம் பண்ணியிருக்கீங்க. அதை ஞாபகப்படுத்ததான் ஃபோன் பண்ணினேன். அதோட முதல் வாரம் மட்டுந்தான் அவ வீட்லே… புரிஞ்சுதா” என்று ‘கைகேகியாகி’ தன் ‘தசரத’ தலைவரிடம் இரண்டு வரங்களையும், ஞாபகப்படுத்தினாள்.
அதற்குள் வாசலில் வந்து நின்ற காரிலிருந்து, தலைவரது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இறங்கி வந்தார்.
வந்தவர் தலைவரின் மனைவியைப் பார்த்ததும், “வணக்கம்மா… இன்னிக்கு சாய்ங்காலம் வெளியான கடைசிநேர கருத்துக்கணிப்புகள், எங்களுக்கு சாதகமாக வெளிவந்திருக்கு. அதான் தலைவரைப் பார்த்து நேரிலேயே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றார்.
“என்னத்தை சாதகமா கிழிச்சுது. நூறு தொகுதியிலே, வெவ்வேற சின்னத்திலே, சுயேட்சையா போட்டி போட்டிருக்கீங்க. பெரிய பெரிய கட்சியை எதிர்த்து ஒரு இடத்திலேயாவது டெப்பாசிட் வாங்குங்க பார்க்கலாம்” என்றாள் தலைவரின் மனைவி.
மேலும், “நாளைக்கு ரிசல்ட் வந்த கையோட உங்க தலைவரே, பதவி விலகிடுவார்னு நான் சொல்லறேன், எழுதிவைச்சுக்கங்க” என்றாள்.
“இந்த ஆளோட சம்சாரம்னு சொல்லிகிட்டு, நாலு தெருவிலே நடக்கவே வெட்கமா இருக்கு. சொந்தபந்தங்ககிட்டே சொல்லிக்க முடியல்லே. எந்த கட்சி ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தாலும், அவங்களுக்கு ஜால்ரா அடிச்சுகிட்டு, அவங்க ஆஃபீஸ்-பில்டிங்கே கதின்னு கிடக்க வேண்டியது. சே… என்ன பொழப்பு. இதுல அந்த ஆளுக்கு கைத்தடிங்க உன்னாட்டமா பத்துபேரு” என்று ரவுண்டுகட்டினாள் தலைவரின் மனைவி.
“ஏன்யா… உன்னை வீட்டு வாசலுக்கு வந்ததும், எனக்கு ஃபோன் போடுன்னுதானே சொன்னேன். ஏன்யா அதுகிட்டே வாயக்குடுத்து, எனக்கும் சேர்த்து பாட்டுவாங்கி வைக்கிறே” என்று கடுப்பானபடியே வெளியே வந்தார் தலைவர்.
அன்று இரவு சுமார், பதினோரு மணியளவில், ஒருங்கிணைப்பாளரின் வீட்டிலிருந்த தனி அறையில் தன் கட்சியின் செயற்குழுவை கூட்டியிருந்தார் தலைவர். பரஸ்பர மரியாதை பகிர்வுகள் நடந்தன.
கூட்டத்தில் ஒருவர், “தலைவரே, ரகசிய கருத்து கணிப்புகள், நம்ப ஆட்களில் நிறையபேர், ஜெயிப்பாங்கன்னு சொல்லியிருக்கு. அதோட எந்த பெரியக்கட்சி ஆட்சியைப் புடிச்சாலும், சுயேட்சைகளின் ஆதரவு இல்லாம ஆட்சியமைக்க முடியாதுன்னு அடிச்சு பேசறாங்க” என்றார்.
“ஏலே… சவத்த மூதி, நம்பக் கட்சி சார்பில நிறுத்தியிருக்கிற சுயேட்சைகளிலே, எல்லா சாதிக்கார பயலுகளும் இருக்காகவே. அப்படி இப்படி கூட்டி கழிச்சு பார்த்தா, எப்படியும் ஒரு ஐம்பது சீட்டாவது ஜெயிப்போம்லே” என்று ஆருடம் சொன்னார் ஒரு மாவட்டச் செயலாளர்.
“அதிகமா சீட்டு ஜெயிச்சாலும், மெஜாரட்டி கிடைக்காம, தடுமாறிக்கிட்டிருக்கிற பெரிய கட்சிகிட்டே, நாம ஆதரவு தரதா பேரம் பேசி, நம்ப கட்சிக்கு, மூணு மினிஸ்டர் போஸ்டாவது வாங்கிடணும் தலைவரே” என்றார் ஒரு மகளிரணி உறுப்பினர்.
“யோவ் கஸ்மாலங்களா… கம்முனு இருக்கமாட்டீங்களா. இன்னாத்துக்கு தலீவரு மீட்டிங் உட்டுருகார்னு பிரியாம, ஆளுக்காளு பிகிலு ஊதி, ராங்கு காட்டிக்கிறீங்க. கம்முனு குந்துங்கையா. சரிதாம்பா… தலீவரே நீ கூவுப்பா” என்று உதார் காட்டினார், ஒரு மூத்த உறுப்பினர்.
‘தலைவர்’ பேச ஆரம்பித்தார். “தமிழ்நாட்டிலே உள்ள எல்லாத் தொகுதிகளிலேயும் சேர்த்து, மொத்தமா ஓட்டுரிமை பெற்று, நம்ப கட்சியோட அடையாள அட்டை வைத்திருக்கும் உறுப்பினர்கள், மொத்தம் இருபது லட்சம் பேர் இருக்காங்க. அதோட பொதுமக்களின் ஆதரவும் நமக்கு இருக்கு.
நம்ப கோரிக்கைகள் நிறைவேறவும், நமக்கும் இட ஒதுக்கீடும், சமூகநீதியும் கிடைக்கணும்னா, அதற்கு ஒரேவழி, இந்த தேர்தல்ல அமையப்போர புது அரசாங்கத்தோட, அமைச்சரவையிலே, நாமும் அங்கம் வகிக்கணும்”.
“நம்ப கட்சியை தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பண்ணலைங்கிறதும், அதனால பொதுவான சின்னமோ, கொடியோ நமக்கு கிடைக்கலைங்கிறதும் உங்க எல்லாருக்கும் தெரியும். நம்மோட கூட்டணி வைச்சுக்கவும், எந்த பெரிய கட்சிகளும் முன்வரலை.
அதனாலதான் நம்முடைய கட்சியை சேர்ந்தவங்க, அவங்கவுங்க கைக்காசை செலவு பண்ணி இந்த எலக்ஷன்ல சுயேட்சையா போட்டி போட்டிருக்கோம்.
நாளைக்கு காலையிலே, கவுன்டிங் ஆரம்பித்ததுமே, நமக்கு எத்தனை சீட்டு கிடைக்கும்னு தெரிஞ்சுடும். இந்த தடவை ரிசல்ட்டை சீக்கிறமே சொல்லிடப் போறாங்களாம். எல்லோரும் நாளைக்கு மத்தியானம் இங்கே வந்திடுங்க. நிலமையை பார்த்துகிட்டு நம்மோட அடுத்த முடிவை எடுக்கலாம். இப்போ போய் நிம்மதியா தூங்குங்க” என்றார் தலைவர்.
அன்றிரவு, உப்பு சப்பில்லாமல் முடிந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, அனைத்து உறுப்பினர்களும், கிளம்பிப் போனார்கள்.
அடுத்தநாள், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கும் விதமாக, எல்லாத் தொகுதிகளிலும், தலைவரின் கட்சியை சேர்ந்த சுயேட்சைகளே, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார்கள்,4 என்ற செய்தி பன்னிரண்டு மணிக்கு, வெளியானது.
தன்னுடைய கட்சியில், யார்யாரெல்லாம், எந்தெந்த துறைக்கு மந்திரிகள் என்ற லிஸ்டை எழுதி தன் சட்டையின் மேல் பையில் வைத்திருந்தார் ‘தலைவர்’.
பகல் ஒரு மணியளவில் ஆதிகாரபூர்வமான, தேர்தல் முடிவுகள், தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்தன.
தலைவரைச் சுற்றி ஒரே கூட்டம். அவரது கழுத்தில் மாலைகள் வந்து விழுந்தன. அப்படியே தலைவரை நாலுபேர் அலேக்காக தூக்கி வந்தனர். தலைவரது ஊர்வலத்துக்கு முன்னால், பட்டாசு வெடித்து, கும்மாளத்தோடு, ஆட்டம் போட்டபடி ஒரு கூட்டம் நடந்தது.
கொள்ளிடக்கரைக்கு பக்கத்தில், ஓயாமாரி சுடுகாட்டின் அருகே இருந்த அந்த, “அனாதைகளுக்கான” கருமாதி மண்டபத்தில், கூடியிருந்த. ‘பிச்சைக்காரர்கள்’ அனைவரும், எரிமேடையில் கிடத்தப்பட்ட, ‘தலைவரையே’ வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருகே இருந்த ஒருவர், “நம்பளமாதிரி இருக்கிற அனாதை பிச்சைக்காரங்களுக்கு, சமூக அந்தஸ்து வேணும்னு சொல்லிகிட்டே இருப்பான். அடுத்தவங்க தன்னை தலைவரேன்னு கூப்பிடணுங்கிறதுக்காக, தன்னோட பேரைக்கூட ‘தலைவர்’ அப்படின்னு மாத்தி வைச்சுகிட்டான்.
நேத்து ராத்திரிகூட படுக்கும்போது, தனக்கு ரெண்டு பெண்டாட்டி இருக்கிறதாவும், கட்சி ஆரம்பிச்சு, நடந்த எலெக்ஷன்ல, எல்லாத் தொகுதியிலேயும் சுயேட்சையா போட்டி போட்டு, அத்தனையிலும் ஜெயிச்சிட்டதாவும், கற்பனையா பினாத்திகிட்டிருந்தான்.” என்றார் இன்னோரு பிச்சைக்காரர்.
“நீங்க வேறப்பா… எனக்கு துணைமுதல்வர் பதவி தந்திருக்கிறதா, சொல்லி ஒரு பேப்பர்லே என்னத்தையோ கிறுக்கி சட்டைபையிலே மடிச்சு வைச்சுகிட்டான்” என்றாள் ஒரு கிழட்டு பிச்சைக்காரி.
பிச்சைக்கார தலைவரின் சட்டைப் பாக்கெட்டிலிருந்து, ஒரு கிழிந்த ‘சிகரெட் அட்டை’ எட்டிப்பார்த்தது.
நேற்று இரவு தூக்கத்திலேயே, செத்துப் போயிருந்த. அந்த பிச்சைக்கார “அனாதை தலைவர்”, சிதைக்கு கூட்டத்திலிருந்த ஒருவர் ‘கோவிந்தா - கொள்ளி’ வைக்க தயாரானார்.
Leave a comment
Upload