மத்திய நிதியமைச்சரின் கணவர் தடாலடி...
பிரபல பொருளாதார நிபுணரான பரகலா பிரபாகர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார். கடந்த 27-ம் தேதி புதுடெல்லியில், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது வீடியோ பேட்டியில், கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியா மருத்துவம் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதை மறந்து, பொறுப்பற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நிறைய குடும்பங்கள் வருமானத்தையும் உறவுகளையும் இழந்து நிற்கின்றன.
அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகிறது. நோயாளிகள் பரிசோதனையாலும் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனை வாசல்களில் பலர் உயிர் காக்கும் மருந்துகள் வாங்க நீண்டிருக்கும் வரிசையை காண முடிகிறது. மக்களின் மரண ஓலங்கள், எரியும் பிரேத குவியல்கள் போன்றவற்றைப் பார்க்கும் அரசியல் கட்சி தலைவர்களும் மதத் தலைவர்களும் கொஞ்சமும் அக்கறையின்றி உள்ளனர்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும், மக்களைக் கூட்டித் தேர்தல் மாநாடு நடத்தினர். மற்றொருபுறம், கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர். அவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் ஒன்றையும் கடைப்பிடிக்கவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகள், மக்களை கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு போதுமானதாக இல்லை.
மக்களிடம் இருக்கும் எந்தவொரு கேள்விக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதில் சொல்வதற்குத் தயாராக இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுபூர்வமான ஆலோசனைகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற பதிலும், மத்திய அரசின் மெத்தனப் போக்கையே எடுத்துக் காட்டுகிறது.
மீடியாக்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதில் இருக்கும் ஆர்வம், கள நிலவரத்தைச் சமாளிப்பதிலோ, எதிர்கொள்வதிலோ மத்திய அரசுக்கு துளியும் இல்லை. இதிலிருந்து, அரசின் இயலாமை தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சுத் திறன், புகழ், பிம்பம் என அனைத்தும் நாடக கவர்ச்சி போல் மிக விரைவில் முடிந்துவிடும்.
வெளிப்படையான நிர்வாகத் திறனுள்ள, மனிதாபிமான அடிப்படையிலான அரசும் ஆட்சியாளரும் மட்டுமே வரலாற்றின் ஏடுகளில் நிலைத்திருப்பர். இந்தியாவின் இந்த அவலநிலைக்குக் காரணம், மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்பாடே தவிர, வேறொன்றும் இல்லை…’’ என வீடியோ பேட்டியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment
Upload