பெருந்தோட்டம் என்ற இடத்தில், வாழை முதலிய காய் கனிகளுக்குத் தோட்டம் அமைத்து, திருமங்கை மன்னன் வைணவ அடியார்களின் அன்னமிடலை சிறப்பு நடத்தி வந்தார்.
இதற்காகப் பொருள் மிகவும் வேண்டியிருந்தமையால், திருமங்கை மன்னன் சோழ அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரியை செலுத்த முடியாமல் போனது. அரசனின் ஊழியர்களிடம் தவணை கேட்டுத் தாமதித்ததால், அரசன் தன் சேனைத்தலைவனை அனுப்ப... அவன் இவரைப் பிடிக்க முயற்சி செய்கையில், இவர், “ஆடல்மா” என்ற தன் சிறந்த குதிரையின் மீது ஏறி, அவனைத் துரத்தி துரத்தி ஓடச் செய்தார். பிறகு, அரசனே சேனையுடன் நேரில் வந்து இவரை வளைத்துப் பிடிக்க, இவரும் முன்போல் அவர்களை எதிர்த்துப் போரிடத் தொடங்கினார்.
அதுகண்டு அரசன் சூழ்ச்சியால், இவர் வலிமையைப் பாராட்டுபவன் போல் இவரைத் தன் அருகில் அழைத்து, தன் அமைச்சனிடம் ஒப்படைத்து, வரிப்பணம் தந்தால்தான் இவரை விடுதலை செய்வேன் என்று கூறிச்சென்றான். காஞ்சி தேவபெருமாள் இவர் கனவில் தோன்றி, காஞ்சியில் செல்வம் கிட்டும் என்று கூற, இவரும் அமைச்சனிடம் கூறி, அவனுடன் சென்று, மீண்டும் அந்த எம்பெருமானாலேயே “வேகவதி” என்னும் ஆற்றங்கரையில் புதையலாய் கிடைத்த நிதியில், தான் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, மீதம் இருந்ததைக் கொண்டு, அடியார்களின் அன்னமிடலுக்கு பயன்படுத்தினார்.
அரசனும், “திருமங்கை மன்னன்” செய்யும் இந்த மகத்தான சேவையைப் பற்றி அறிந்து, அவர் செலுத்திய வரிப்பணத்தைத் திருப்பித்தந்து, அவர் செய்யும் சேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினான். இவற்றை எல்லாம் கொண்டு, அவர் தான் ஏற்றுக்கொண்ட சேவையைச் செய்து வந்தாலும், ஒரு கால கட்டத்தில், அவர் கையில் இருந்த நிதியெல்லாம் கரைந்துவிட, மேலும் அவர் செய்ய வேண்டிய சேவைக்கு நிதித்தேவை அதிகமாய் இருந்தது. இதனால், அவர் தன் தோழர்களான “நீர்மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோலா வழக்கன்” என்ற நால்வரின் துணைகொண்டு, வழிப்பறி செய்து அடியார்களுக்கு உணவளித்து உபசரிக்க பொருள் சேர்க்க முயன்றார்.
இவருடைய அடியவர்களுக்குத் தொண்டு செய்யும் பங்கினைக் கண்டு அளவிலா இன்பமுற்ற எம்பெருமான், இவர்க்குத் தன் இன்னருளைக் காட்ட எண்ணி, திருமணக்கோலத்தில் உயர்ந்த ரக அணிகலன்களுடன் தானும் தன் மனையாளுமாக, இவர் வழிப்பறி செய்வதற்காகப் பதுங்கி இருக்கும் வழியாக வந்தான். திருமணங்கொல்லையில், திருவரசின் அடியில் பதுகியிருந்த திருமங்கை மன்னன். அவர்களைத் தன் தோழர்களைக் கொண்டு வழிப்பறி செய்தார். அப்போது, மணமகன் (எம்பெருமான்) காலில் இருந்த மோதிரம் கழற்ற முடியாமல் போக, பரகாலர் அதைக் கழற்ற, தன் பல்லால் கடித்து வாங்க, மணமகனான எம்பெருமான் இவரைப் பார்த்து, என்ன தைர்யம் உமக்கு என்று பாராட்டும் வகையில், “நம் கலியனோ?” என்றார். பெருமானிடம் வழிப்பறி செய்த பொருள்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு, அதைத் தூக்க முயன்ற பொது, மூட்டையின் கனம் மிகவும் அதிகமாக இருந்ததால், அவரால் அதைத் தூக்கமுடியாமல் போயிற்று. இப்படி, மூட்டை தூக்க முடியாமல் இருப்பதற்கு என்ன மந்திரம் செய்தாய்? என்று அவர் மணமகனை மிரட்டிக்கேட்டு, தன் கையிலிருந்த வாளை வீசி மிரட்டினார்.
மணமகனான எம்பெருமான் மந்திரத்தைக் கூறுவதாக இவரை அருகில் அழைத்து, “பெரிய திருமந்திரம்” (ஓம் நமோ நாராயணாய) என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை இவருக்கு உபதேசித்து, பெரிய திருவடியின் (கருடன்) மேல், பிராட்டியுடன் இவர்முன் தோன்றி அருளினான். பெருமானின் தரிசனம் கிட்டியபின், மெய்ஞானத்தைப் பெற்ற பரகாலர், எம்பெருமானை நோக்கி, “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று தொடங்கிப் பாசுரங்கள் இயற்றி, வடமொழி வேதங்கள் நான்குக்கு ஒப்பான நம்மாழ்வார் அருளிச் செய்த திவ்யப் பிரபந்தங்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று “(1) பெரிய திருமொழி, (2) திருக்குறுந்தாண்டகம், (3) திருவெழுக்கூற்றிருகை, (4) சிறிய திருமடல் (5) பெரிய திருமடல் மற்றும் (6) திருநெடுந்தாண்டகம்” ஆகிய ஆறு திவ்ய நூல்களை அருளி, “திருமங்கை ஆழ்வார்” என்ற திருநாமத்தைப் பெற்றார்.
இவற்றுள், பெரிய திருமொழிப் பாடல்கள் இயற்றும்போது, இறைவன் அர்ச்சாமூர்த்தியாய் கோயில்கொண்டுள்ள திவ்ய தேசங்களுக்குத் தானே நேரில் சென்று வணங்கி “திருப்பிருதி” (இன்றைய மானசரோவர்) முதல் “திருக்கோட்டியூர்” வரைப் பாசுரம் பாடினார். இப்படிப் பாடிச்செல்லும் இவரைக்கண்டு, ஞான சம்பந்தரின் சீடர்கள், இவ்வழி செல்லக்கூடாது என்று தடுக்க, இருவருக்கும் வாதப்போர் மூள, அப்போது இவ்வாழ்வார் “ஒரு குறளாய்” என்று தொடங்கி, அருகில் இருந்த காழிசீராம விண்ணகர் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாட... இவரது கவித்திறனைக் கண்டு மகிழ்ந்த ஞானசம்பந்தர், தன் கையில் இருந்த “வேலை” ஆழ்வாருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து வணங்கி நின்றார்.
(இந்த திருமங்கை ஆழ்வாரின் உற்சவ மூர்த்தி சீர்காழியில் உள்ளபடி வரைந்தது. இந்த மூர்த்தம் கையில் வேல் கொண்டு இருப்பது போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆச்சரியமான திருமுகம், குவிந்த கைகள், நாராயண நாமத்தை கண்டுகொண்ட பின்போ இந்த மூர்த்தம் அமைந்தது என்னும் வியப்பு நமக்கு உருவாகிறது. - பாலாஜி )
திருவரங்கநாதனின் ஆணையின்படி, அப்பெருமானுக்கு மண்டபம், கோபுரம் விமானம், பிரகாரம் முதலிய பணிகளைச்செய்ய, திருநாகையில் புத்தவிகாரம் ஒன்றில் இருந்த பொன்னால் ஆன சிலையை, பாடல்கள் பாடி, அந்தச் சிலை பெயர்ந்து விழுமாறு செய்து, சிலையின் பொன் கொண்டு அரங்கன் இட்ட திருப்பணிகளைக் குறைவின்றிச் செய்து வந்தார்.
திருவரங்க கோயிலில் மதில் சுவர் கட்டும்போது, தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை கட்டிவந்த இடம் கண்ணுக்குத் தெரிய, அது மறைந்து விடாதபடி, மதிள்சுவரைக் கட்டினார். திருவரங்கனின் அனுமதியோடு திருக்குருகூரில் நம்மாழ்வாரின் விக்ரஹ மூர்த்தியைத் திருவரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து, வேதங்களுக்கு இணையாக நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களின் இசைப்பாடல்களை அரங்கனின் திருமுன்பே இசைத்து, அத்யயனத் திருவிழாவை நடத்தி அருளினார். ஆழ்வார்களில் கடைசியாகத் தோன்றியதால், இவருக்கு, மற்ற ஆழ்வார்கள் அனைவரது திவ்ய பிரபந்தங்களையும் இசைத்துப் பாடும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது.
கலி காலத்தின் கொடுமையை, அடியார்க்கு அடிமையாய் இருந்து ஒழித்தவர் என்பதனால் திருமங்கை ஆழ்வார் “கலிகன்றி” என்று பெயர் பெற்றார். இவ்வுலகில் 105 ஆண்டுகள் வாழ்ந்த இவர், இறுதியாகத் திருக்குறுங்குடி சென்று, அங்கு எழுந்தருளியுள்ள “நம்பி” எம்பெருமானை, சில காலம் தொழுது குமுதவல்லியாருடன் பரமபதம் அடைந்தார்.
அவர் எழுதிய பாசுரங்களில் சில...
புது திருமண தம்பதியராய் வந்து திருமங்கை முன்னணி ஆட்கொண்டு, எட்டெழுத்து மந்திர உபதேசம் செய்த உடன் அவர் பாடிய முதல் பாசுரம்..
“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூட்டினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
‘நாராயணா’ என்னும் நாமம்” (நா. தி. பி. 948)
அந்தப் பெயரின் கடவுள் தன்மையை அறிந்து கொள்ளும் ஒரு மனம். அந்த நாமத்தின் ருசியில் தோயும் அழகு, தன்னைப் பற்றி எல்லா உண்மைகளையும் சொல்லும் ஒரு கவிஞரின் உளப்பாங்கை நாம் அறியலாம்.. திருமங்கையாழ்வார் ‘பெரிய திருமொழி’ என்ற பிரிவில் ஏறக்குறைய 1100 பாசுரங்கள் பாடியிருக்கிறார். இது தவிர திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம்,பெரிய திருமடல், சிறிய திருமடல், தேர் போன்ற அமைப்பில் உருவாக்கிய ‘திருவெழுகூற்றிருக்கை’ ஆகியவற்றையும் இயற்றி யுள்ளார்.
இந்த தேர் பாசுரம், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் பளிங்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. படிப்பதற்கு ஒரு சுவையான அனுபவம். ஆழ்வார்களில் அதிகம் பாசுரங்கள் பாடியிருப்பது திருமங்கை ஆழ்வார்தான். அதேபோல அதிக திவ்யதேசங்களுக்கு சென்று, பெருமாளை சேவித்து பாடல் பாடியதும் இவர் தான்.
“குலத்தாரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீல் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
‘நாராயணா’ என்னும் நாமம்.” (நா.தி. பி. 956)
தமிழ் வளர்த்த சிறந்த கவிஞர் ஒரு (முன்னாள்) திருடர் என்றாலும், வால்மீகியைப்போல இவரையும் வைணவ உலகும், தமிழ் ஆர்வலர்களும் போற்றிப் புகழ்கின்றார்கள்....
ஆழ்வார்களைத் தொடருவோம்.....
Leave a comment
Upload