தொடர்கள்
கதை
தகப்பன் சாமி... தில்லைக்கரசிசம்பத்

20210407154748624.jpeg

“வருண்..! இப்படி எல்லாம் பேசுறதுக்கு எவ்வளவு தைரியம் உனக்கு???!” என்று உரத்த குரலில் படபடத்தாள் ஹேமா.

“ஆமா.. அப்படி தான் பேசுவேன்..! நீ முட்டாள்தனமா அப்பாக்கிட்ட சண்டை போட்டு வீட்ட விட்டு வெளியே வருவ.. நானும் எதுக்கு உன் கூட வந்து கஷ்டப்படனும்? இப்ப பாரு.. தாத்தா வீடு சின்னதா இருக்கு, இங்க வெளியில போக கார் இல்ல.. அப்பாகிட்ட என்ன கேட்டாலும் உடனே வாங்கி தருவாரு..‌ நேத்து நான் ஒரு PS 5 வீடியோ கேம் கேட்டா... “பணம் இல்ல.. வாங்கிதர‌ முடியாது”ன்னு சொல்ற‌.. உன்ன மாதிரியே நானும் பிச்சைக்கார வாழ்க்கை வாழனும்னு நினைக்கிறியா? நான் அப்பா கிட்டயே போறேன்” என முகம் சிவக்க கத்திய வருணை பார்த்து விக்கித்து நின்றாள் ஹேமா.

8 ஆம் வகுப்பு படிக்கும் வருண், ஹேமா கார்த்திக் தம்பதியின் ஒரே மகன். திருமணமானதிலிருந்தே கார்த்திக்கின் மூர்க்க குணம், முன்கோபம் போன்றவற்றால் ஹேமா படாத பாடு பட்டிருந்தாள். வருணுக்காக எல்லாவற்றையும் ஹேமா பொறுத்து போனாலும், சில சமயங்களில் எல்லைமீறி போகும் போது... கண்மண் தெரியாமல் அடிப்பது, ஹேமாவின் முடியை பிடித்து தலையை சுவற்றில் முட்டுவது போன்ற மிருகத்தனமான நடத்தையை இதற்கு மேல் பொறுக்க முடியாமல் ஹேமா வருணோடு தந்தை வீட்டிற்கு வந்துவிட “கஷ்டமோ நஷ்டமோ நான் பார்த்து கொள்கிறேன்” என்று தந்தையும் சொல்லிவிட்டார்.

வருண், தாயோடு தாத்தா வீட்டிற்கு வந்தாலும்... அப்பா வீட்டு ஞாபகம் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக முணுமுணுக்க ஆரம்பித்து இன்றைக்கு தன் தாயோடு சண்டையே போட்டுவிட்டான்.

“வருண்.. உனக்காகத்தான்டா நான் இத்தனை வருஷம் அந்த ஆள் கூட இருந்து கஷடப்பட்டேன். அத கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா? உன் மேல நான் எவ்வளவு பாசம் வச்சிருக்கேன் தெரியுமா? என் உலகமே நீதானே!”

“அம்மா.. உங்க சண்டையில நான் ஏன்மா கஷ்டப்படனும்..? நான் என்ன தப்பு பண்ணேன்? அங்க நம்ம‌ வீட்டுல எனக்குன்னு தனியா பெரிய ரூம். வெளியே போகனும்னா கார், டிரைவர் என இருந்தேன். நினைச்சா என் ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா வெளியில் போய் சாப்பிடுவேன். ஷாப்பிங் பண்ணுவேன். என்கிட்ட அப்பா கொடுத்த க்ரெடிட் கார்ட்டை கூட நீ தூக்கி போட்டுட்டு வந்துட்ட..!”

“ஆமா வருண்.. ஆனா, அதுக்கப்புறம் நாம தாத்தா செலவுல தான் வாழுறோம்ன்னு தெரிஞ்சா கூட, அப்பா உன் கிட்ட ஃபோன்ல கூட பேசல.. செலவுக்கு என்ன பண்றோம்ன்னு கூட கேக்கல.. இப்பயாவது தெரிஞ்சுக்கோ அந்த ஆளு பத்தி..!”

“எப்படீம்மா பேசுவாரு..? நீதானே “எனக்கு ஒன்னும் வேணாம்.. இனி எந்த உறவும் இல்ல!”ன்னு கத்திட்டு வந்தே..! அப்புறம் எப்படி வருவாரு?”

“வருண்.. நான் உனக்கு வேண்டியதை செய்வேன். நானும் உங்க அப்பாவ போல இன்ஜினியரிங் படிச்சு வேலைக்கு போய், மாசம் ஒரு லட்சம் சம்பாதிச்சவ தான். கல்யாணம் பண்ணி நீ பொறந்து 5 வயசு ஆன பிறகு, வேலைக்கு போகக்கூடாதுன்னு உங்கப்பா டார்ச்சர் பண்ணதால தான், நான் வேலையை விட்டுட்டேன். இப்ப திரும்பவும் என் பழைய நண்பர்கள் மூலம் சென்னையிலேயே வேலை கேட்டுருக்கேன் வருண். என் படிப்பை வச்சு கனடாக்கு migrate ஆக apply கூட பண்ணியிருக்கேன். அது கிடைக்கிற மாதிரி இருக்கு. ஆனா, படிச்சிட்டு இருக்கிற உன்னை உடனே கூட்டிட்டு போக முடியாதுன்னு நான் அத இன்னும் ஒப்புக்குல.. ஏன்னா உன்னை பிரிஞ்சு என்னால‌ இருக்க முடியாது. அத தெரிஞ்சுதான், அந்தாளு நீ எப்படி இருந்தாலும் அங்க போய்டுவ.. உன்னை பிரிய முடியாம நானும் உன் கூடவே அவர்கிட்ட வந்துடுவேன்னு கணக்கு போடுறாரு. தயவு செஞ்சு புரிஞ்சுக்க வருண். தாத்தா வீட்டுக்கு வந்து, இந்த 5 மாசத்துல நானும் எல்லா முயற்சிகளையும் பண்ணிட்டு தான் இருக்கேன், கண்ணா.. அப்பா நமக்கு வேண்டாம்டா..!” என கெஞ்சினாள்.

“அம்மா..! உனக்கு சென்னையிலேயே திரும்ப வேலை கிடைக்கும். அப்புறம் கனடால வேலை கிடைக்கும்ன்னு கதை விட்டுட்டு திரியாத.. வீட்ல 9 வருஷம் சும்மா இருந்த உனக்கு திடீர்ன்னு யார் வேலை கொடுப்பா? என் ஸ்கூல் ஃபீஸ் வருஷத்துக்கு ஒரு லட்சம் உன்னால கட்ட முடியுமா..? JEE கோச்சிங் இந்த வருஷம் சேர போறேன். அதுக்கு 4 லட்சம் கொடுக்க முடியுமா? கிரிக்கெட் கோச்சிங், கிடார் க்ளாஸ் continue பண்ணனும். இதுக்கு பணம்??? அதோட எனக்கு பைக் வாங்கி தரேன்னு அப்பா முன்னாடி சொன்னார். விலை 4.5 லட்சம்.. நீ வாங்கி தருவியா? தாத்தா பென்ஷன் பணத்துல வெறும் சாப்பாடு, ட்ரெஸ் தான் வாங்கி தர முடியும். ஆனா, அப்பாவால இவ்வளவும் செஞ்சு தர அளவுக்கு அவர் வசதியா, நிறைய சம்பாதிக்கிறாரு. அவர் சாதரணமா ஏதாவது சொன்னா, நீ அமைதியா கேட்டுட்டு போகாம எதிர்த்து பேசுறதால தான், அவர் உன்னை அடிக்கிறாரு. தப்பு உன் மேல தான் இருக்கு”.

“ஏன் வருண்..!! அன்னைக்கு “காஃபியை ஏன்டி ஆத்தி கொடுக்காம இவ்வளவு சூடா கொடுத்தே.. என் நாக்கு சுட்டுப் போச்சு”ன்னு சொல்லி என் மூஞ்சில கொதிக்கிற காஃபியை வீசி எறிஞ்சாரே..! அது உனக்கு சாதாரணமா தெரியுதா?” என்று நடுங்கும் குரலில் ஹேமா கேட்டாள்.

“அம்மா.. நீ தேவையில்லாம பிரச்சினையை பெருசு பண்ணி, சீன் க்ரியேட் பண்ணாதே..! காஃபியை உன் முகத்துல வீசினாலும் நீ வலில கத்துனப்ப... உன்ன அப்பா உடனே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் மருந்து எல்லாம் வாங்கி கொடுத்தாரு... அவர் உன் மேல அக்கறையா தான் இருக்காரு. ஆனா நீதான் புரிஞ்சிக்க மாட்டேங்கிற.. பிடிவாதமா இருக்காதே..! நான் இன்னைக்கே அப்பா‌ வீட்டுக்கு போறேன்,
நீயும் வா. நாம சந்தோஷமா இருக்கலாம்..!”

“ஓ... இப்பதான் புரியுது வருண். நான் நிஜமாவே முட்டாள் தான். குழந்தைக்காகன்னு சொல்லியே என் வாழ்க்கையை வீணடிச்சிட்டேன். அப்பா வீட்டுக்கு நீ கிளம்பி போ..!”

“அப்ப நீ?”

“வருண்.. நீ இனி குழந்தை இல்லன்னு எனக்கு புரிய வச்சிட்ட.. உனக்கு தேவைப்படற வசதி, வாழ்க்கை எல்லாம் அப்பா செஞ்சு கொடுப்பாருங்கிறதால, உன்னோட பாதையை நீ தெளிவா தேர்ந்தெடுத்துக்கிட்ட... நீ போறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. காலம் காலமா இந்த பொம்பளைங்க குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காகன்னு, பல கொடுமைகளை பொறுத்துக்கிட்டு வாழ்ந்தா கூட... அவங்க பண்ற தியாகத்தை பெத்த பிள்ளைங்களே உணர மாட்டாங்க என்பதை நீ எனக்கு புரிய வச்சிட்ட. அந்த வகையில, நீ எனக்கு தகப்பன் சாமி வருண்.. நீ கிளம்பி போ.. உன் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல கண்ணா.. நான் கனடா ஆஃபரை ஏத்துக்கிட்டு அங்க போய் வேலை செஞ்சு வாழப்போறேன். நீயே இப்ப திரும்பி உன் முடிவை மாத்திக்கிட்டாலும், இப்ப நான் எடுத்த முடிவிலே பின்வாங்க போறதில்ல.. கல்யாணம், குழந்தைங்க மட்டுமே ஒரு பெண்ணுக்கு முழு வாழ்க்கை இல்லை. எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குங்கிறதை இப்ப நான் உணருறேன். எப்ப அம்மாவ பாக்கனும்னாலும் நீ அங்க வா.. உனக்காக நான் எப்பவும் காத்திருப்பேன்” என்றபடி மொபைலை எடுத்து... “அடுத்த வாரம் விசா இன்டர்வியூ, எனக்கு ஓகே. fix பண்ணிடுங்க..!” என்று பேசியபடி ரூமுக்கு சென்றவளை, அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தான் வருண்.